குழந்தை இறப்பு - யாருடைய கர்மவினை?

சத்குரு, ஒரு குழந்தை இறந்துபோகிறது என்றால் அது யாருடைய கர்மவினை? நாம் அழக்கூடாது என்று சொல்கிறார்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள். இதுவும் கர்மவினையினுடைய ஓர் அங்கமா அல்லது பெற்றோர்களுக்கு பழைய கர்மவினை ஒன்று கழிகிறதா?
 

Question: சத்குரு, ஒரு குழந்தை இறந்துபோகிறது என்றால் அது யாருடைய கர்மவினை? நாம் அழக்கூடாது என்று சொல்கிறார்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள். இதுவும் கர்மவினையினுடைய ஓர் அங்கமா அல்லது பெற்றோர்களுக்கு பழைய கர்மவினை ஒன்று கழிகிறதா?

சத்குரு:

நிச்சயமாக நீங்கள் அழவேண்டியதில்லை. கர்மவினை கரைகிறதோ, இல்லையோ நீங்கள் அழவேண்டிய அவசியமில்லை. நீங்கள் அன்பினால் அழுதால், பரிவுணர்ச்சியின் காரணமாய் கண்ணீர் வடித்தால் அது நல்லது. இந்த உடல் இறந்து போகிறது என்று அழுதால் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உடல் என்பது இறக்கத்தான் செய்யும். பிறந்த தினம் தொட்டே இந்த உடல் நிலையற்றது என்பது உங்களுக்குத் தெரியும். இது நிலையானது என்று எண்ணுகிற அளவிற்கு யாரும் முட்டாள்களில்லை. ஆனால் மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

உடல் என்பது இறக்கத்தான் செய்யும். பிறந்த தினம் தொட்டே இந்த உடல் நிலையற்றது என்பது உங்களுக்குத் தெரியும். இது நிலையானது என்று எண்ணுகிற அளவிற்கு யாரும் முட்டாள்களில்லை. ஆனால் மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் எதிர்காலத்திற்காக உடல்களைப் பராமரிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இங்கிலாந்தில் இதைத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கென்று சில கருவிகள் உள்ளன. எதிர்காலத்திற்கென்று உடல்கள் பராமரிக்கப்படுகின்றன. இயந்திரங்கள் கொண்டு இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. உடல் அப்படியே நீண்டகாலம் வைக்கப்பட்டிருக்கிறது. அது அழுகுவதில்லை.

உங்கள் உடலை அப்படி நீண்டகாலம் வைத்திருப்பதற்கு நிறைய பணம் செலுத்த வேண்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், சில நாட்களில் சில ஆன்மாக்கள் திரும்பக்கூடும். எனவே நீங்கள் திரும்புகிறபோது உங்கள் உடலுக்கே மறுபடியும் வரலாம் என்று. இது முட்டாள்தனம். இது சற்றும் முதிர்ச்சியில்லாத செயல். எங்கேயோ, ஏதோ ஓர் இடத்தில் மேற்கத்திய தத்துவம் ஒன்றைத் தவறாக புரிந்து கொண்டதின் விளைவு இது.

இயேசுநாதர் வாழ்க்கையின் தொடர்ச்சி குறித்துகூடப் பேசவில்லை. அவருக்கு, மக்கள் இந்த வாழ்க்கையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றுதான் விருப்பம். "நீங்கள் இப்போது வளருங்கள். நான் உங்களோடு இருக்கும்போதே வளருங்கள்" என்றார் அவர். அடுத்த பிறவி பற்றிப் பேசவேயில்லை. அவர் சொன்னார், "இதுதான் உங்களுக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பு. இப்போது செய்யுங்கள். இப்போது இல்லையென்றால் எப்போதுமில்லை" என்றுதான் அவர் பேசினார். அவருடைய எல்லா போதனைகளுமே "இப்போது இல்லையென்றால் எப்போதுமில்லை" என்பதாகத்தான் இருந்தது. அவருடைய தத்துவம் இந்த வாழ்க்கையோடு முடிந்துவிடுகிறது.

அதனால்தான் மேற்கத்திய மனம் அவ்வளவு துரிதமாகச் செயல்படுகிறது. பிங்கல நாடி அவ்வளவு துரிதமாகச் செயல்படுகிறது, ஏனென்றால் வாழ்க்கை இப்பொழுது முடிவடையப் போகிறது என்பதற்காக. நீங்கள் இறந்தால் வாழ்க்கை முடிந்துவிடும். அதற்குப் பின்னர் என்னவென்று யாரும் பேசவில்லை. மேற்கத்திய நாடுகளில் எல்லாத்துறைகளிலும் ஒரு துரிதமான அவசரம் இருக்கிறது. காரணம் அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடுகிறது.

நாளை இறந்துவிட்டால் என்ன செய்வதென்று இன்றே எல்லாவற்றையும் செய்ய முயல்கிறார்கள். இதுதான் அவர்கள் அணுகுமுறை. ஆனால் இந்தியாவில் பல பிறவிகள் உண்டு என்று நமக்குத் தெரியும். எனவே என்ன சிக்கல்? இந்த முறை இல்லையென்றால், அடுத்தமுறை இன்னொரு பிறவி இருக்கிறது.

கர்மவினையென்பது குழந்தையல்ல. உங்கள் அணுகுமுறையும் உங்கள் பாதிப்பும்தான் கர்மவினை.

ஒருமுறை, சங்கரன்பிள்ளை அளவுக்கு அதிகமாக மது அருந்திய காரணத்தால் தன் குடலில் ஏற்பட்ட உபாதை குறித்து ஒரு மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்தார். மிகவும் வருத்தத்தோடு தன் மனைவியிடம் சொன்னார், "தான் வாழ இன்னும் பன்னிரண்டு மணிநேரம்தான் இருக்கிறது" என்று. அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, ஒரு நல்ல உணவைத் தயார் செய்யச் சொன்னார். பிறகு, படுக்கையில், காதலோடு தன் மனைவியை அணுகினார். அந்தப் பெண்ணும் கனத்த இதயத்தோடு உடன்பட்டாள். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் தன் மனைவியை எழுப்பி, "இன்னும் ஏழு மணிநேரம் தான் வாழப் போகிறேன். எனவே மீண்டும் ஒருமுறை" என்றார்.

அவளும் ஒப்புக்கொண்டாள். இன்னும் சிறிது நேரம் கழித்து, தனக்கு இன்னும் ஐந்து மணிநேரம் தான் இருக்கிறது என்று தெரிந்தவுடன், கண்ணீர் விட்டுக்கொண்டே மீண்டும் மனைவியை எழுப்பினார், "நான் இறக்கும் முன் இன்னும் ஒரே முறை" என்றார். அவள் ஒப்புக்கொண்டாளே தவிர புரண்டு படுத்து உறங்கிவிட்டாள். வினாடிகள் கடிகாரத்தில் விரைந்து கொண்டேயிருப்பதைப் பார்த்து, இன்னும் மூன்று மணி நேரம்தான் என்று தெரிந்துகொண்ட சங்கரன்பிள்ளை தன் மனைவியை அழுதுகொண்டே எழுப்பினார். "இன்னும் மூன்று மணிநேரம் தான் இருக்கிறது" என்று கேட்டபோது அவர் மனைவி கோபமாக எழுந்து சொன்னாள், "இதோ பார், விடியற்காலை நான் எழுந்திருக்க வேண்டும். உனக்கு அந்த அவசியமில்லை" என்று.

குழந்தை இறந்துவிட்டது என்றால், பெற்றோருடைய கர்மவினைகளைக் கரைக்கிறதா என்பது கேள்வி. இல்லை, அந்த இறப்பே உங்களுக்கு ஒரு பெரிய கர்மவினையாக இருக்கக்கூடும். ஏனென்றால் உங்களுக்கு குழந்தை என்பது விலைமதிக்க முடியாத செல்வம். எனவே குழந்தை இறப்பதென்பது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் அல்ல. உங்கள் குழந்தை இறக்கிறதென்றால் நீங்கள் கைதட்டிக்கொண்டு, "அற்புதமான விஷயம், அவன் மறுபடியும் கடவுளிடம் சென்றுவிட்டான்" என்று சொல்லப் போவதில்லை. எனவே அது கர்மவினை கரைவதல்ல.

உங்களுக்கு அப்படி நிகழவேண்டும் என்று இருந்திருக்கலாம். அது உங்கள் கர்மவினை. அது கர்மவினை கரைவது என்று நீங்கள் சொல்லமுடியாது. ஒன்றுமே கரைந்து போவதில்லை. அதனால் நீங்கள் பாதிக்கப்படப் போகிறீர்கள். குழந்தை போய்விட்டது. ஆனால் உங்களுடைய பாதிப்பு தொடர்கிறது, இல்லையா? கர்மவினையென்பது குழந்தையல்ல. உங்கள் அணுகுமுறையும் உங்கள் பாதிப்பும்தான் கர்மவினை.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1