சத்குரு:

சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வி, மாணவர்களை சரியாகக் கையாளும் முறைகள் பற்றியது. அவரிடம் படிக்கும் மாணவர்களில் ஐம்பது சதவிகிதம் பேர், கவனக் குறைவு நோய், கவனக்குறைவு மற்றும் அதீத செயல்பாட்டு நோய் ஆகியவற்றுக்காக தொடர்ந்து ரிட்டாலின் மருந்து உட்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்களாம். இத்தனை மருத்துவர்களும் உளவியலாளர்களும் உள்ள உலகில் இயல்பான குழந்தைகள் இனி பிறப்பார்களா என்பதே ஐயம்தான்.

எல்லா விதத்திலும் துல்லியமான மாமரம் ஒன்றைக் கண்டிருக்கிறீர்களா? எல்லா விதத்திலும் முழுமையான மனிதனை சந்தித்ததுண்டா? எந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்திருந்தாலே தவிர நீங்கள் எதிர்பார்க்கும் முழுமை சாத்தியமேயில்லை.

ஏனெனில் குழந்தைகள் இயல்பாக எதையாவது செய்தால் கூட அதற்கென்று ஒரு முத்திரை குத்த இந்த மருத்துவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு குழந்தை சுறுசுறுப்பாக இருந்தால், அதற்கு அதீத செயல்பாட்டு நோய் என்பார்கள். சிறிது மெதுவாகச் செயல்பட்டால் வேறொரு பேர் தருவார்கள். குழந்தைகள் எந்தத் தன்மையில் இருந்தாலும் அதற்கொரு பெயரைச் சுமத்தி, அதன் முதுகில் ஆணி அறைந்து வாழ்க்கை முழுவதும் அதைச் சுமக்கும்படி செய்து விடுவார்கள். சிலர் வேகமாக ஓடுவார்கள், சிலர் சற்றே நொண்டுவார்கள், சிலர் வேறெதையோ செய்வார்கள். இவையெல்லாம் இயல்பான விஷயங்கள்தான். மனிதர்களென்றால் இப்படித்தான் இருப்பார்கள். நீங்கள் எல்லோரையும் ஒரேவிதமான கோட்டுக்குள் அடைக்க நினைப்பதால், இயல்பான விஷயங்கள் எல்லாம் ஏதோவொரு குறைபாடு போலத் தோன்றுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் பயணப்பெட்டி போலத்தான் இதுவும். விமான நிலையங்களில், அளவினைக் கணக்கிடும் கருவிகள் உள்ளன. அவற்றுக்குள் உங்கள் பெட்டியின் அளவு பொருந்த வேண்டும். இல்லையென்றால் சில விமானங்களில் உங்கள் பெட்டியைக் கொண்டு போக முடியாது. பெரும்பாலும் யாருடைய பெட்டியும் அந்த அளவுக்குள் பொருந்தி வராது. விமானங்களைக் கடத்த வரும் தீவிரவாதிகள்தான் சரியான அளவுகளில் பெட்டிகள் கொண்டு வருகிறார்கள்.

எல்லா விதத்திலும் துல்லியமான மாமரம் ஒன்றைக் கண்டிருக்கிறீர்களா? எல்லா விதத்திலும் முழுமையான மனிதனை சந்தித்ததுண்டா? எந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்திருந்தாலே தவிர நீங்கள் எதிர்பார்க்கும் முழுமை சாத்தியமேயில்லை. முழுமை என்ற பெயரில் நீங்கள் எல்லோரையும் ஒரேவிதமான குழியில் தள்ள முற்படுகிறீர்கள். எல்லோரும் ஒரேவிதமாக பள்ளிக் கல்வியை மேற்கொள்ள வேண்டும், எல்லோரும் பொறியாளராகவோ மருத்துவராகவோ ஆக வேண்டுமென்று நினைத்து அதற்கான எல்லாக் காரியங்களையும் செய்கிறீர்கள். குழந்தைகளும் இந்த சித்திரவதைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு திறமையுடன்தான் பிறக்கிறார்கள். சிலர்தான் எதையுமே செய்ய வேண்டாத அளவு சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்தக் கல்விமுறை இப்போது மாறப் போவதில்லை. ஆனால் நீங்கள் குறைந்தபட்சம் குழந்தைகள் மீது முத்திரை குத்தாமல் இருந்தாலே போதும்.

நீங்கள் கானகத்தில் மான்களைப் பார்த்திருக்கிறீர்களா? நம் யோக மையத்தின் அருகில்கூட இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கில் மான்கள் வரும். அவை வெறுமனே சாப்பிட்டுக் கொண்டு சுற்றித் திரிகின்றன. பொதியிழுக்கும் காளைகள் அவற்றைப் பார்த்து சோம்பேறி மான்கள் என்று பட்டம் கட்டினால் அதற்கென்ன செய்ய முடியும்? யானை கூடத்தான் எதையும் செய்வதில்லை. எல்லாவற்றையும் மிதித்துக் கொண்டும் அழித்துக் கொண்டும் போகிறது. அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, தொழில்மயமான உலகத்தில் எல்லாரும் எதற்காவது பயன்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.

எல்லோரும் ஒருவிதத்தில் சரியில்லையோ என்னும் எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் யாரெல்லாம் சரியில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்கள்தான் இயல்பான மனிதர்கள். மற்றவர்கள் இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டவர்கள்.

எனவே எல்லோரும் ஒருவிதத்தில் சரியில்லையோ என்னும் எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் யாரெல்லாம் சரியில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்கள்தான் இயல்பான மனிதர்கள். மற்றவர்கள் இயந்திரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டவர்கள். நீங்கள் வாழ்வதைப் பற்றி நினைக்கவில்லை. உற்பத்தித் திறன் பெருக்கம் குறித்து நினைக்கிறீர்கள். அடுத்த வீட்டுக் குழந்தையுடன் ஒப்பிட்டு உங்கள் குழந்தைகள் மீது சுமத்தும் முத்திரையை அவர்கள் காலம் முழுவதும் சுமக்க வேண்டியிருக்கிறது.

மற்றவர்கள் செய்வதை உங்கள் குழந்தை செய்யாவிட்டால் பரவாயில்லை. உங்கள் குழந்தையால் என்ன செய்ய முடியும் என்பதும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து சில மருத்துவர்கள் வந்தார்கள். அவர்கள் மைசூருக்கு சென்று என் தந்தையை சந்தித்தார்கள். “சத்குரு இளமைப் பருவத்தில் எப்படி இருந்தார் என்று சொல்லுங்கள்,” என்று கேட்டார்கள். என் தந்தையைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் வெற்றி மருத்துவராவது. அவர் அதையே கனவு கண்டார், ஒரு மருத்துவராகவும் ஆனார். அவருடைய நான்கு குழந்தைகளும் மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு கண்டார். ஒவ்வொருவராய் அவருடைய அந்தக் கனவை நிராசையாக்கிக் கொண்டே வந்தோம். நானாவது மருத்துவர் ஆவேன் என்று அவர் நம்பினார். எனக்கு பன்னிரண்டு வயது இருக்கும்போது, “நான் மருத்துவராவது சாத்தியமேயில்லை” என்று சொல்லிவிட்டேன்.

எனவே இவர்கள் என்னைப் பற்றி என் தந்தையிடம் கேட்டபோது அவர் ஆழ்ந்து யோசித்துவிட்டுச் சொன்னாராம், “சின்ன வயதில் மிகவும் மந்தமான சிறுவனாக இருந்தான், இப்போது மாபெரும் மேதையாகிவிட்டான்.”

அநேகமாக வகுப்பறையில் முத்திரை குத்தப்பட்ட அந்த மாணவர்கள்தான் உண்மையில் மேதைகளாக இருக்கக் கூடும். அவர்கள் உங்கள் வழக்கமான ஒழுங்கமைப்புகளுக்குள் வராதவர்கள். முதலில் அவர்கள் ஏன் அப்படி இருக்க வேண்டும்? அந்த மாணவரை உங்கள் கட்டமைப்புக்குள் கொண்டுவர முயல்கிறீர்கள். அவர் பார்க்க மறுப்பதைப் பற்றிய வெட்கவுணர்வை அவரிடம் நீங்கள் உருவாக்குவீர்கள் என்றால், அதன்மூலம், அவரால் என்ன பார்க்க முடிந்தது என்பதை அறிகிற வாய்ப்பையும் நீங்கள் இழக்கிறீர்கள். யாரும் பார்க்காத ஒன்றை அவரால் பார்க்க இயலலாம்.

கல்விக்கு சாத்தியமில்லாத பல விஷயங்கள் மனித சக்திக்கு சாத்தியம். அதற்காக கல்வி வேண்டாமென்று பொருளில்லை. முழுமையான சாத்தியக்கூறுடன் மனித உடலையும் மனித மனத்தையும் உருவாக்கி அவற்றைப் பயன்படுத்துவதற்குப் போதிய சமநிலையை உருவாக்குவது தான் தேவை. மனிதர்களின் இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். புத்திசாலித்தனமாக வாழ்வை நடத்த அவர்களுக்குத் தெரிந்திருந்தால் அதுவே போதுமானது. வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மட்டுமே. வாழ்வை அதன் அத்தனை பரிமாணங்களிலும் உணர்வதுதான் வாழ்வின் நிறைவு. இந்த நிலையை அடைய மனிதர்கள் உண்மையைத் தேடுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர ஆசிரியர்களாலோ மதபோதகர்களாலோ புனிதநூல்களாலோ சுமத்தப்படும் போதனைகளைத் தூக்கிச் சுமப்பவர்களாக இருக்கக் கூடாது.