ஜென்னல் பகுதி 35

அது ஒரு மலைக்காடு. அங்கே நெடு, நெடுவென மரங்கள் வளர்ந்திருந்தன. மலைச் சரிவு எங்கும் விதம், விதமான காட்டுப்பூக்கள் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. அழகிய அணில்களும், இசைப் பறவைகளும், கும்மாளக் குரங்குகளும் நிறைந்த அந்தக் காட்டுப் பகுதியில் நான்குவான் என்னும் ஜென் ஞானி ஒருவர் கையில் ஏந்தியிருந்த அரிவாளால் களைகளை அகற்றிக் கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் அந்தப் பக்கமாக ஒரு துறவி தடுமாறி, தடுமாறிப் பயணம் செய்து வந்தார். மலைச்சரிவில் வேலை செய்து கொண்டிருந்த நான்குவானைக் கண்டதும் அவர் முகம் மலர்ந்தது.

வேகமாக எட்டி நடை போட்டு நான்குவானை அணுகினார். வேலையில் மூழ்கியிருந்த நான்குவானோ தனக்கு அருகில் வந்து நின்ற துறவியைக் கவனிக்கவில்லை.

"ஐயா.." என்று அழைத்து நான்குவானின் கவனத்தைக் கவர்ந்தார் துறவி. நான்குவான் நிமிர்ந்து பார்த்தார்.

துறவி அவசர, அவசரமாக, "ஐயா. எனக்கு இந்தக் காட்டில் வழி தெரியவில்லை. புகழ் பெற்ற குருவான நான்குவானின் மடாலயத்துக்கு எப்படிச் செல்வது?" என்று கேட்டார்.

"நான் இந்த அரிவாளை மூன்று வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்கினேன்.." என்றார் நான்குவான்.

அவருக்குக் காது கேட்கவில்லையோ என்று நான்குவானைத் தேடி வந்த துறவிக்குக் குழப்பம்!

"ஐயா, நான் அரிவாளைப் பற்றிக் கேட்கவில்லை. புகழ் பெற்ற நான்குவான் குருவுடைய மடாலயத்துக்குப் போகும் வழி எது என்றுதான் கேட்டேன்..." என்றார் பயணி.

"அரிவாள் வெகு கூர்மையாக இருப்பதால் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது தெரியுமா?" என்று நான்குவான் குரு பதில் அளித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

நான்குவானைச் சந்தித்தத் துறவி 'புகழ் பெற்ற நான்குவான் மடாலயத்துக்கு எப்படிச் செல்வது?' என்று வினவுகிறார்.

சாலையில் செல்லும்போது எதிரில் கடவுளே வந்தாலும் நாம் கோவிலுக்குத்தான் செல்வோம். எந்த குருவைத் தேடி அந்தத் துறவி வந்தாரோ அந்த குருவே அவருக்கு நேர் எதிரில் நிற்கிறார். தேடி வந்த துறவிக்கோ எதிரில் நிற்கும் குருவைப் பற்றிக் கவலையில்லை. அவர் மடாலயத்துக்குத்தான் போக வேண்டும் என்கிறார்.

கையில் அரிவாளுடன் நான்குவானே அங்கிருக்கிறார். ஜென் கலாச்சார முறைப்படி 'நான் இந்த அரிவாளை மூன்று வெள்ளிக் காசுகள் கொடுத்து வாங்கினேன்' என்று கூறி, எதிரில் நிற்பவனின் கவனத்தைத் தன் பால் ஈர்க்கப்பார்க்கிறார் குரு நான்குவான். அப்படித்தான் ஜென்குருமார்கள் செயலாற்றுவது வழக்கம்.

வழி கேட்டு வந்த துறவி அரிவாளின் மீது தன் கவனத்தைப் பதித்திருந்தாரேயானால், அதைக் கையில் பற்றியிருந்த மனிதனையும் கவனித்திருப்பார். அவர் யாரென்று புரிந்து கொண்டும் இருப்பார்.

ஆனால் வந்தவரோ அரிவாளில் கவனம் பதிக்கவில்லை. எனவே ஞானி நான்குவான் 'அரிவாள் வெகு கூர்மை என்றும் அதனால் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது தெரியுமா?' என்றும் கூறுகிறார்.

நான்குவான் அரிவாளைக் கொண்டு புல் வெட்டுவதைப் பற்றி மட்டும் கூறவில்லை. 'அதைக் கொண்டு எல்லாவற்றையும் வெட்ட முடியும். அது உன்னுடைய அறியாமையைக் கூட வெட்டும் அளவுக்குக் கூர்மையாக இருக்கிறது. அப்படிப்பட்ட அரிவாள் என்னிடம் இருக்கிறது. இதோ நான் இங்கே இருக்கிறேன். நீ எதற்கு எனது மடாலயத்துக்குச் செல்ல வேண்டும்?' என்று கேட்கிறார் ஞானி நான்குவான்.

தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது உண்மையான விஷயத்தை இழந்து விடுகிறோம். பெயர், புகழ் ஆகியவற்றில் கவனம் வைக்கும்போது, நாம் எதைத் தேடிப் போகிறோமோ அதுவே நம் எதிரில் வந்தாலும் அதைத் தவற விட்டுவிடுகிறோம்.

சாலையில் செல்லும்போது எதிரில் கடவுளே வந்தாலும் நாம் கோவிலுக்குத்தான் செல்வோம். எந்த குருவைத் தேடி அந்தத் துறவி வந்தாரோ அந்த குருவே அவருக்கு நேர் எதிரில் நிற்கிறார். தேடி வந்த துறவிக்கோ எதிரில் நிற்கும் குருவைப் பற்றிக் கவலையில்லை. அவர் மடாலயத்துக்குத்தான் போக வேண்டும் என்கிறார்.

சங்கில் இருந்து வழங்கப்பட்டால் தான் தீர்த்தம் என்று முடிவு கட்டிய பிறகு, கையில் அமிர்தமே வழங்கப்பட்டாலும் அதை அமிர்தம் என்று அறிந்து அருந்துவதற்கு ஒரு விழிப்புணர்வு தேவை.

ஏராளமான மக்கள் புத்தரைப் பற்றியும், கிருஷ்ணனைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் ஏராளமாகப் பேசுகிறார்கள். பேசுவதற்கு விழிப்புணர்வும் தேவையில்லை. புத்திசாலித்தனமும் தேவையில்லை.

அவர்கள் நம்மிடம் இருந்து விலகிச் சென்று ஆயிரம், ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் இருக்கும் போது என்னென்னவோ நிகழ்வுகள் நிகழ்ந்தன. அப்போதெல்லாம் அவற்றில் யாரும் அக்கறை கொள்ளவில்லை. அவர்களை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.

இப்போதோ அவர்கள் எல்லாம் சென்று பல்லாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன! அதனால் அவர்களை மிகச் சிறந்த ஞானிகள் என்று எல்லோரும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

கிருஷ்ணன் இருக்கும்போது உணரமுடியவில்லை. அவன் போனதற்குப் பின் பஜனை செய்து என்ன உபயோகம்? இயேசு இருந்தபோது அவரைச் சிலுவையில் அறைந்தாகிவிட்டது. இப்போதோ அவரது போதனைகள் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்கின்றன.

இப்போது இருப்பதைக் கவனிக்க வேண்டுமென்றால் அதற்கு விழிப்புணர்வோ, பக்தியோ தேவையில்லை. பத்து பேருக்குத் தெரிகிறமாதிரி ஒரு விஷயம் புகழ் பெற்றுவிட்டால் போதும் அதைப் பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்து விடுகிறோம்.

இதை ஆன்மிகம் என்று சொல்லமுடியாது. ரசிகர் மன்றம் என்று வேண்டுமானால் கூறலாம். ஒருவர் கிருஷ்ணன் ரசிகர் மன்றம், இன்னொருவர் இயேசு ரசிகர் மன்றம், வேறு ஒருவர் புத்தர் ரசிகர் மன்றம்!

இப்போதும் இயேசு, புத்தர், கிருஷ்ணன் இவர்கள் எல்லாம் இருந்த போதில் நடந்த நிகழ்வுகள் போல் நிறைய நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கவனித்து உணருவதற்கு மென்மையான இதயமும், கூர்மையான புத்தியும், தெளிவான விழிப்புணர்வும் தேவை.

அவற்றை வளர்த்துக் கொள்ளாமல் எது இப்போது சமூகத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறதோ அதன் காலைப் பிடிப்பதில் அர்த்தமே இல்லை.


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418