இன்றைய நாட்களில் அதிகமாக பேசப்படும் சில விஷயங்களில் குழந்தை வளர்ப்பும் ஒன்று. பத்து பிள்ளை பெற்றாலும் குழந்தைகளை அசாதாரணமாய் வளர்த்த இந்த கலாச்சாரத்தில், இன்றோ குழந்தை வளர்ப்பு நம்மைப் பாடாய் படுத்துகிறது. குழந்தையும் படுத்துகிறது! கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள் பலர். என்ன செய்வது? சத்குரு சொல்கிறார்...

சத்குரு:

லட்சிய மனிதர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குவது எப்படி என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம். முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குப் பிறந்த குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள். அது உங்களுக்குத் தரப்பட்ட பெருமையே தவிர, அதனை ஒரு உரிமையாக நீங்கள் கருதக் கூடாது. அவர்கள் உங்கள் உடைமைகளும் அல்ல!

வீட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாள்தோறும் கோபம், அச்சம், பரபரப்பு, பாதுகாப்பின்மை ஆகியவற்றையே குழந்தைகள் எதிர்கொண்டிருந்தால் அவர்கள் எப்படி ஆனந்தமாக வாழ முடியும்?

குழந்தைகள் வளர்கிறபோது பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களுக்கு எதையாவது கற்றுத்தர வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், உங்கள் குழந்தைகளோடு முதலில் உங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிக ஆனந்தமாக இருக்கிறீர்கள், நீங்களா... உங்கள் குழந்தைகளா? உங்களைவிட உங்கள் குழந்தை ஆனந்தமாக இருக்கிறது என்றால், வாழ்க்கைக்கு ஆலோசகராக இருக்கிற தகுதி குழந்தைக்குத்தானே இருக்கிறது!

ஒரு குழந்தை பிறக்கிறது என்றால், அது கற்றுக்கொடுப்பதற்கான நேரம் அல்ல, நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நேரம். நீங்கள் எப்படிச் சிரிப்பது என்பதையே மறந்துவிட்டீர்கள், எப்படி விளையாடுவது என்பதையும் மறந்துவிட்டீர்கள். ஒரு குழந்தை வருகிறபோது, இவற்றை நீங்கள் மறுபடியும் கற்றுக்கொண்டு அற்புதமான மனிதராக மலரலாம். மாறாக, மனிதர்கள் குழந்தைகளைப் பெரியவர்கள்போல நடந்து கொள்ள வைப்பதற்கு முயற்சிக்கிறார்கள். வாழ்க்கையை நீங்கள் புரிந்துகொண்ட விதங்களில் உங்கள் குழந்தைகளை வளர்க்க முற்படாதீர்கள். அவர்கள் என்னவாக வேண்டுமோ, அப்படி ஆகட்டும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஒரு குழந்தைக்கு நீங்கள் எதைக் கற்றுக்கொடுத்துவிட முடியும்? பிழைப்புக்கு என்று சில தந்திரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகோடு உங்களுக்கு இருக்கும் தொடர்பு காரணமாக, அந்தத் தந்திரங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவை உங்களை எந்த விதத்திலும் வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கவில்லை. உங்களைவிட உங்கள் குழந்தை, வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அதற்குக் கற்றுக்கொடுப்பதற்குப் பதில் நீங்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கினால், அன்பும் ஆதரவும் கனிந்த ஒரு வலிமையான உறவை அந்தக் குழந்தையுடன் வளர்த்துக்கொண்டால், அதுவே உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம்!

நீங்கள் வளர்ந்து வந்த பருவத்தில் உங்களுக்குள் ஏதாவது சிக்கல் வந்தால், நீங்கள் உங்கள் பெற்றோரை அணுகினீர்களா அல்லது நண்பர்களை அணுகினீர்களா? உங்களில் பெரும்பாலானவர்கள் நண்பர்களைத்தான் அணுகியிருப்பீர்கள். ஏனென்றால், உங்கள் பெற்றோருக்கு எதுவும் புரியவே இல்லை. அவர்களும் அதே அபத்தங்களை 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்து வந்திருப்பார்கள். ஆனால் அவற்றை மறந்துவிட்டு ஏதோ வேறொரு கிரகத்தில் இருந்து வந்தது போல் விசித்திரமாக நடந்துகொள்வார்கள்.

பெற்றோர்கள் இப்படி நடந்துகொண்டால் பிள்ளைகள் வெளியில்தான் உதவி தேடிப் போவார்கள். தங்கள் நண்பர்களிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். அந்த நண்பர்களும் உங்கள் குழந்தை போலவே குழப்பத்தில் இருப்பதால் வழிகாட்டுதல் எந்த விதத்தில் இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியாது. தனக்குத் தெரிந்ததை அது சொல்லும். எனவே மிகச் சிறந்த வழி என்னவென்றால், உங்களை எளிதாக அனுகும் விதத்தில் இணக்கமான நல்லுறவை குழந்தைகளோடு வளர்த்துக்கொள்வதுதான். குழந்தைகளிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்காதீர்கள், அன்பை எதிர்பாருங்கள்.

குழந்தைகள் தங்களை மதித்து நடக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் கருதுகிறார்கள். நீங்கள், உங்கள் குழந்தைகளுக்குச் சில ஆண்டுகள் முன்னதாக பூமிக்கு வந்தீர்கள். உடலளவில் குழந்தையைவிட பெரிதாக இருக்கிறீர்கள். பிழைப்புக்கு சில தந்திரங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இவற்றைவிட எந்த விதத்தில் நீங்கள் உங்கள் குழந்தையைக் காட்டிலும் மேம்பட்டிருக்கிறீர்கள்?

உங்கள் இயல்புகளை குழந்தைகளின் மீது திணிக்காமல் நட்பு ரீதியான உறவை உருவாக்கிக்கொண்டால், அவர்கள் தவறான பாதைக்கு போக வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அதே நேரம் 100% உத்தரவாதம் கிடையாது. எப்போது ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டீர்களோ, அப்போதே சில அபாயங்களுக்கும் நீங்கள் தயாராக வேண்டும். ஏனென்றால், உங்கள் குழந்தையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தப் போவது நீங்கள் மட்டுமல்ல, உங்கள் வீதி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது, தொலைக்காட்சி தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது, அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் பள்ளியில் இருப்பவர்களும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.

இப்படி லட்சக்கணக்கான தாக்கங்கள் ஏற்படப் போகின்றன. அவற்றில் எந்தத் தாக்கத்தின் மீது உங்கள் குழந்தைக்கு மிகுந்த ஈர்ப்பு இருக்கிறதோ, அதை நோக்கிச் செல்லப் போகிறது. பெற்றோருடன் இருப்பதுதான் தங்களின் மிகப் பெரிய ஈர்ப்பு என்ற உணர்வை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். ஆனந்தமான, அறிவுப்பூர்வமான, அற்புதமான மனிதராக உங்களை வெளிப்படுத்திக் கொண்டால், உங்கள் குழந்தை வேறெந்தத் துணையையும் தேடிப் போகாது. எளிய விஷயங்களைக்கூட உங்களிடம் வந்து கேட்கத் தொடங்கும்.

அன்பும் ஆனந்தமும் மிக்க சூழலில் உங்கள் குழந்தைகளை நீங்கள் உருவாக்கினால், தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. வீட்டிலோ, பள்ளியிலோ, சமூகச் சூழலிலோ துயரமான சூழலில் குழந்தை வளர நேர்ந்தால்தான் தவறுகள் நடக்கின்றன. வீட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாள்தோறும் கோபம், அச்சம், பரபரப்பு, பாதுகாப்பின்மை ஆகியவற்றையே குழந்தைகள் எதிர்கொண்டிருந்தால் அவர்கள் எப்படி ஆனந்தமாக வாழ முடியும்? அன்புக்கும் ஆனந்தத்துக்கும் நீங்கள் உதாரணமாய் திகழ்ந்தால், நன்மைகள் தானாக நிகழும்.

பெற்றோரின் லட்சணம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் குணங்கள் குழந்தைகளிடையே ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி விரிவாக அலசி அதற்கான தீர்வையும் நம்மிடம் விவரிக்கிறார் சத்குரு. - குழந்தை வளர்ப்பென்ன சவாலா? பகுதி 2

Photo Courtesy: norfolkdistrict@flickr