நம் விவசாய நீர் பாசன முறைகளிலுள்ள குறைகளை எடுத்துக்கூறி, விவசாயிகளுக்கு பலன்தரும் வேளாண்காடுகள் உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக பேசுகிறார் சத்குரு. பனிப்பாறைகள் இல்லாமல் காடுகளை மையமாக வைத்து உருவாகும் தென்னிந்திய நதிகளை காப்பதற்கான தீர்வையும் இதில் முன்வைக்கிறார்!

சத்குரு:

தண்ணீர் என்பது திறமாக கையாளப்பட வேண்டிய ஒரு வளம். கடந்த சில பத்தாண்டுகளில், நீரின் மீது நாம் போதிய கவனம் செலுத்தவில்லை. தண்ணீரை சேகரிக்கும் திட்டங்களுக்கு போதுமான மானியங்கள் இருக்கின்றன. ஆனால், விவசாயத்தை குறைந்த தண்ணீர் செலவில் செய்யும் முறைகளை நாம் காணவில்லை. உதாரணத்திற்கு, தமிழகத்தை எடுத்துக்கொள்வோம். பெரும்பாலும், நீரினை மிகையாய் பாய்ச்சும் விவசாய முறையிலேயே நாம் இருக்கிறோம். தண்ணீரை மிகக் கொடூரமான வழியில் பயன்படுத்துகிறோம். அது நிலத்திற்கும் நல்லதல்ல, பயிருக்கும் நல்லதல்ல.

முன்காலத்தில் வழக்கில் இருந்த பழக்கம் இது. ஆனால், இன்று இன்னும் திறனுடன் செய்யக்கூடிய விவசாய முறைகள் வழக்கிற்கு வந்துவிட்டன. ஓரிடத்தில் இத்தனை நீரினை பாய்ச்சினால், அந்நிலம், ஊறவைக்கப்பட்டதாக ஆகிவிடும். அம்மண்ணில் உயிர்களின் செயல்பாடு மிகுதியாக குறைந்துவிடும். செடி பசுமையாக தெரியலாம், ஆனால், அந்தச் செடி பலவிதங்களில் அவதிப்படுகிறது.

காவிரி பிரச்சனைக்கு நிலையான ஒரு தீர்வு, Kaviri prachanaikku nilaiyana oru theervu

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த பழக்கத்தை மாற்றினால், தண்ணீர் சூழ்நிலையை தமிழகத்தில் நம்மால் மாற்றிவிட முடியும். இதைத் தவிர, காவிரி நதியின் மீது நாம் சற்று அதிக கவனம் செலுத்த தேவையிருக்கிறது. கர்நாடகத்திலுள்ள பாக்மண்டலம் என்னும் இடத்திலிருந்து கிருஷ்ணராஜ சாகர் அணை, பிருந்தாவன் வரைக்கும் நான் கைமர (rafting) பயணம் செய்திருக்கிறேன். 160 கிமீ தூர படகுச் சவாரி அது. 13 நாட்கள், 4 லாரி டயர்கள், 12 மூங்கில்களில் இந்தச் சவாரி நடந்தது. அதனால், அந்தப் பகுதியின் நில அமைப்பு எனக்கு அத்துப்படி.

இந்த 160 கிலோ மீட்டரும் தனித்துவமானதாய் இருக்கிறது. முதல் 30 கிமீ மட்டும் காடுகள் இருக்கின்றன, அதன்பின் முழுவதும் விவசாயம்தான். இப்படி இருந்தால், ஒரு நதி எப்படித்தான் ஓடும்? பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் நதிகள் தென்னிந்தியாவில் இல்லை. தென்னகத்தில் உள்ளதெல்லாம் காடுகளால் உருவாகும் நதிகள். காடுகள் இல்லையென்றால், ஒரு காலத்திற்கு பின், நதிகளே இருக்காது. மலைசார்ந்த 35 கிமீ பள்ளத்தாக்கு பகுதியைத்தான் ஒரு ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி என்று கருதுகிறோம். இல்லை. நீர்பிடிப்புப் பகுதி என்பது ஆற்றின் வழிநெடுக இருக்கவேண்டும்.

தென்னகத்தில் உள்ளதெல்லாம் காடுகளால் உருவாகும் நதிகள். காடுகள் இல்லையென்றால், ஒரு காலத்திற்கு பின், நதிகளே இருக்காது. மலைசார்ந்த 35 கிமீ பள்ளத்தாக்கு பகுதியைத்தான் ஒரு ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி என்று கருதுகிறோம். இல்லை. நீர்பிடிப்புப் பகுதி என்பது ஆற்றின் வழிநெடுக இருக்கவேண்டும்.

நீரினால்தான் மரங்கள் இருக்கின்றன என்று மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இல்லையில்லை. மரங்களால்தான் நீர் இருக்கின்றது. நதியின் வழிநெடுக உள்ள அரசு நிலங்களில், அதன் இருபுறமும், ஒரு கிலோ மீட்டர் பரப்பளவிற்கு உடனடியாக மரங்கள் நடப்பட வேண்டும். எங்கெங்கு நிலம் விவசாயி உடையதாய் இருக்கிறதோ அங்கெல்லாம் விவசாயத்திலிருந்து வேளாண் காடுகள் வளர்ப்பு முறைக்கு மாறவேண்டும்.

ஒரு விவசாயியை விவசாயத்திலிருந்து வேளாண் காடுகள் வளர்ப்பு முறைக்கு மாற்ற வேண்டுமென்றால், அவர் மகசூல் ஈட்டும் வரை, முதல் 5 ஆண்டுகளுக்கு அவருக்கு வேண்டிய ஊக்கத்தொகையினை அரசு வழங்கவேண்டும். அவர் சாகுபடியை துவங்கியபின், நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பரப்பளவில் உருவாகவிருக்கும் இந்த வேளாண் காடுகள் சார்ந்த பொருட்களை கையகப்படுத்திக்கொள்ள, தனியார் நிறுவனங்களை, வேளாண் காடுகள் சார்ந்த தொழில்களை அமைக்க ஊக்குவிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையினால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை விவசாயிக்கு நாம் தெரியப்படுத்தினால், நிலத்தை உழுவதைவிட வேளாண் காடுகள் மூலம் அவரால் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்பதை எடுத்துச் சொன்னால் இயல்பாகவே இம்முறைக்கு அவர் மாறுவார். வரும் 15 ஆண்டுகளில், நதியின் இருகரைகளிலும் குறைந்தது ஒரு கிலோ மீட்டரிலிருந்து, ஒன்றரை கிமீ பரப்பளவிற்கு, மரம் நட்டால், காவிரியில் குறைந்தது 10 முதல் 20 சதவிகிதம் தண்ணீர் பெருக்கு ஏற்படும்.

நம் நதிகள் வற்றிவரும் விகிதாச்சாரத்தை பார்த்தால், 20 ஆண்டுகளில் அவை பருவகால நதிகளாய் மாறிவிடும் அபாயம் மிக அதிகமாய் உள்ளது. ஏற்கனவே, வருடத்தில் 2, 3 மாதங்களுக்கு காவிரி கடலை சேர்வதில்லை. நம் தேசத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு இது.

"இந்தியா" என்ற வார்த்தையே இன்டஸ் எனும் நதியின் பெயரிலிருந்தே வந்தது. நதிக்கரையில் தோன்றிய ஒரு நாகரிகம் இது. நதிக்கரையில் வளர்ந்தவர்கள் நாம். இன்று, நம்முடைய அத்தனை நதிகளும் அபாயகரமான நிலையில் இருக்கின்றன. நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை விட, நம் நதிகளுக்கு புத்துயிர் அளிப்பது எப்படி என்று பார்ப்பது மிக மிக அவசியம். இதைச் செய்யாவிட்டால், சில ஆண்டுகளில் நாம் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிக்க மாட்டோம். பாட்டில் தண்ணீரில் குளிப்போம்.

போதிய தண்ணீர் இல்லாததால், பாதி தேசம் காலைக் குளியலுடன் நாளினை துவங்குவதை நிறுத்தும் நிலைக்கு வந்துவிட்டனர். இன்னும் சில வருடங்களில், பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குளிக்கும் நிலைக்கு சென்றுவிடுவோம்.

உங்களிடம் எத்தனை வளம் இருந்தாலும், நலமாய் வாழமுடியாத ஒரு நிலையினை நம் குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்லவிருக்கிறோம். இடையே, இயற்கை சில தீவிர நடவடிக்கை எடுத்து சரிசெய்தாலே ஒழிய இந்நிலையே நீடிக்கப் போகிறது. விழிப்புணர்வாய் இதனை மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு நமக்கு இருக்கிறது. இல்லையேல், இயற்கை அந்த திருத்தத்தை தானே செய்யும். இயற்கை தன் கைகளில் இதனை எடுத்துக்கொண்டால், அது மிகக் கொடூரமாய் இருக்கும்.

பல ஆயிரக்கணக்கான வருடங்களாய், இந்த நதிகள் நம்மை ஆரத்தழுவி, ஊட்டி வளர்த்திருக்கின்றன. நதிகளை நாம் ஆரத்தழுவி, ஊட்டி வளர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது.