காசி யாத்திரை - பாவம் தீர்க்குமா?
புண்ணிய நீராடி, திருக்கோயில்களில் வழிபட்டால் எல்லாம் சரியாகிவிடும், பாவம் தீர்ந்துவிடும் என்று ராமேஸ்வரம் தொடங்கி காசி வரை யாத்திரை செல்கிறார்கள். காலம் காலமாக போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சனைகள் மட்டும் தீரவில்லை. எப்போது தீரும்? எப்படித் தீரும்?
சத்குரு:
பிரதிஷ்டை செய்யும் விஞ்ஞானத்தின் துணையோடு, நம் நாட்டில் பல சக்தியூட்டப்பட்ட ஸ்தலங்கள், கோயில்கள் உருவாக்கப்பட்டன. சக்தியூட்டப்பட்ட இந்த இடங்களுக்குச் சென்றால், அத்தகைய சூழலில் சிலநாட்கள் வாழ்ந்தால், நமக்குள் இருக்கிற கோபம், வெறுப்பு, மனத்தடைகள் இவற்றைத் தாண்டி வளரமுடியும் என்ற நோக்கத்தில்தான் தீர்த்தயாத்திரைகள் நமது கலாச்சாரத்தில் மேற்கொள்ளப்பட்டன.
காசியில் முக்தி...
தீர்த்தயாத்திரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காசி யாத்திரை. பல்லாயிரம் ஆண்டுகளாகவே உண்மை உணர்ந்த ஞானிகளும், யோகிகளும் இந்த இடத்தில்தான் ஒன்று சேர்ந்தார்கள். ஆன்மீகரீதியாக எதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கான உறைவிடமாய் காசி இருந்தது. அதனால் தான் 'காசிக்குப் போனால் முக்தி கிட்டும்' என்றார்கள்.
Subscribe
காசிக்குப் போனால் அங்கே எதையேனும் விட்டுவிட்டு வரவேண்டும் என்பது நம் வழக்கத்தில் உண்டு. நம்மில் பலர் அங்கே சென்று பாகற்காயை விட்டுவிட்டு வருகிறார்கள். பாகற்காயை விடுவதில் பிரயோஜனமில்லை. உங்களுக்குப் பிடிக்காததை விடுவது மிக எளிது. நீங்கள் எதன் மீது பற்றாய் இருக்கிறீர்களோ அதை விட்டுவிட்டு வரவேண்டும்.
அப்படியானால் என் குழந்தையின் மீதான பற்றை நான் விட வேண்டுமா? கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், உங்கள் பற்று, உங்கள் குழந்தையின் மீதோ, கணவர் மீதோ, மனைவியின் மீதோ இல்லை. 'நான்' என்கிற உங்கள் நினைப்பில் தான் நீங்கள் அதிகமாகப் பற்று வைத்திருக்கிறீர்கள். உங்கள் கோபம், உங்கள் அகங்காரம், 'இது பிடிக்கும், அது பிடிக்காது' என்ற எண்ணங்கள், அது உண்டு செய்யும் உணர்வுகள் என இவற்றின் மீதுதான் உங்களுக்கு அதிகமாக பற்று இருக்கிறது. இவை தான் உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. காசிக்குப் போனால், உங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இவற்றில் எதையேனும் தான் விட்டுவிட்டு வரச் சொன்னார்கள்.
சக்திநிறைந்த ஸ்தலங்களுக்கு செல்லும்போது...
அதுமட்டுமல்ல. சக்தியூட்டப்பட்ட இடங்களுக்குச் செல்லும்போது, நம் புரிந்து கொள்ளும் தன்மைக்கு அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் அங்கே நிகழ வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற பல சக்திநிறைந்த, மிகத் தீவிரமான ஸ்தலங்கள் நம் நாட்டிலே உருவாக்கப்பட்டுள்ளன. அத்தகைய இடங்களுக்குச் செல்வது, மனிதனுடைய உள்வளர்ச்சிக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும். அவ்விடங்களுக்குச் செல்லும் போது, அர்ப்பணிப்பு உணர்வோடு, எளிமையான மனநிலையில் செல்ல வேண்டும். இயல்பாகவே அந்நிலை உங்களிடம் இல்லையெனில், 'நமக்கும் மேலே மகத்தான சக்தி இருக்கிறது' என்ற எண்ணம் ஒரு பணிவை உங்களிடத்தில் உருவாக்கும். இந்தப் பணிவோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு அந்த மகத்தான சக்தி ஸ்தலங்களுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் சக்தியை நீங்கள் உள்வாங்க இந்நிலை உங்களுக்கு பெருமளவில் கைகொடுக்கும்.
இப்பிரபஞ்சத்தோடு ஒப்பிடும்போது, நாம் கடுகளவு கூடக் கிடையாது. நீங்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், இந்த உலகில் உங்களுடைய பங்கு ஒரு எல்லைக்குள் அடங்கக்கூடியது. இதை நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உணர்ந்து கொள்வதற்குத்தான் தீர்த்த யாத்திரைகள் உருவாக்கப்பட்டன.
நீங்கள் வருவதற்கு முன்பிருந்தே இந்த உலகம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. நீங்கள் இறந்துவிட்டாலும் இந்த உலகம் நன்றாகவே நடக்கும். அதனால் உங்கள் ஆதங்கம் தேவையற்றது.
மகத்தான சக்தியினை ஒரு உருவமாகவோ, தீர்த்த நிலையிலோ பிரதிஷ்டை செய்து அதை மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள். இதுபோன்ற இடங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் சக்தியினை உள்வாங்கி, நாம் பலன் பெறவே தீர்த்தயாத்திரைகள். இதை உணர்ந்து, நம் உயிர்சக்தியை மேல்நோக்கி எடுத்துச் செல்ல இந்த கருவிகளை பயன்படுத்திக் கொள்வோம்.