பாலியல் பலாத்காரம் - தடுக்க வழி இங்கே...
அண்மையில், புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது மும்பை, கொல்கத்தா போன்ற பல இந்திய நகரங்களில் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தது. வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பெண்கள் தைரியமாக இரவில் நடமாடவே முடியாதா?
 
 

Question:அண்மையில், புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது மும்பை, கொல்கத்தா போன்ற பல இந்திய நகரங்களில் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் நிகழ்ந்தது. வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பெண்கள் தைரியமாக இரவில் நடமாடவே முடியாதா?

சத்குரு:

இரண்டு பெண்களை அறுபது எழுபது ஆண்கள் சூழ்ந்து கொண்டது கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதேசயம், இந்தியா அண்மைக்காலமாக புதிய கலாச்சாரத்தைச் சந்தித்துக் கொண்டு இருப்பதை மறக்கக்கூடாது.

சில வருடங்களுக்கு முன்பெல்லாம், திருமணமான இளம் தம்பதிகள் நள்ளிரவில் தனியே கொண்டாட்டங்களுக்காகப் போனதில்லை. குடித்துவிட்டு, ஆட்டமும், பாட்டமுமாக இருக்கும் இளைஞர்களை சாலைகளில் அவர்கள் எதிர்கொண்டது இல்லை.

கொண்டாட்டம் என்றாலே குடியும், செக்ஸும்தான் என்று இளைஞர்கள் நினைக்கும் அபாயம் இங்கே நேர்ந்துவிட்டது. சுலபமாக எங்கும் மது கிடைக்க அரசாங்கமே வழி செய்திருக்கிறது.

முன்பு, குடிப்பவர்கள் தாழ்வாகக் கருதப்பட்டார்கள். இப்போது குடி மறுப்பவர்கள், வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர்கள் என்று ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். நான் கலந்து கொள்ளும் மாநாடுகளில் மதுவை மறுக்கும்போது, 'இவன் குடிக்காத ஆடு' என்று என்னையே கேலியாகத்தான் பார்க்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவு, இளைஞர்களை மது அருந்தச் சொல்லி விளம்பரங்கள் வற்புறுத்துகின்றன. வணிகத்துக்காக சாத்தானுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டபின், வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஆண்களைத் தூண்டும் விதத்தில் தங்கள் உடல் பாகங்களை வெளிக்காட்டும் உடைகளைப் பெண்கள் அணிந்து வருவதும் புதிய கலாச்சாரத்தில் நாகரிகமாகக் கருதப்படுகிறது.

இதைச் சொன்னவுடன் நான் பழைமைவாதி என்று பலர் அலறுவார்கள். அப்படியில்லை. பழக்கமற்ற சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது, சில அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறேன்.

பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்று காவல்துறை மீது பழி சொல்வது நியாயமில்லை. ஜனத்தொகை மிகுந்த நாட்டில் எத்தனை பேரைத்தான் கண்காணிப்புக்காக நியமிக்க முடியும்? சமூகம் அல்லவா இதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். காவலர்கள் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஈடுபட வேண்டுமா அல்லது சமூகமே கவனித்துக் கொள்ள வேண்டிய இதுபோன்ற வேலைகளில் ஈடுபட வேண்டுமா?

Question:பெண்கள் இரவில் சுதந்திரமாக வெளியே வரக்கூடாது என்பது உங்கள் கருத்தா?

சத்குரு:

இது என் கருத்தல்ல. நடைமுறை உண்மைநிலை. பொது இடத்தில் பெண்களை மானபங்கம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தாம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதே சமயம், திடீர் கலாச்சார மாற்றத்தில் விழும் பெரிய இடைவெளிகளே இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

படித்தவர்களும், சமூகத்தில் மேல்தட்டில் இருக்கும் வசதியானவர்களும் ஒரு புதிய கலாச்சாரத்தை இங்கே கொண்டுவரப் பார்க்கிறார்கள். மொத்த ஜனத்தொகையில், அவர்கள் மிகச்சிறிய சதவிகிதம்தான். இதை அனுபவிக்க இயலாமல் விடுபட்டவர்கள்தாம் பெரும்பான்மை.

அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் கூட முழுமையாகக் கிடைக்காமல் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்களின் பார்வையில் இது எப்படித் தோன்றும்? சமூகத்தின் தராசுத் தட்டுகள் சமமாக இல்லாது போகும்போது, இருப்பவர்களை இல்லாதவர்கள் பிரமிப்பும், இயலாமையும், பொறாமையுமாகப் பார்க்கிறார்கள். குடிபோதையில் இருக்கும் போது, கட்டாயத்தின் பேரில் அடக்கி வைத்த உணர்ச்சிகள் பீறிட்டு விடுகின்றன.

மொத்த ஜனத்தொகையும் இந்தக் கலாச்சாரத்துக்குப் பழக்கமாகும் வரை, இதுபோன்ற அசம்பாவிதங்கள் இருக்கத்தான் செய்யும். இதைக் கவனத்தில் கொண்டுதான் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும்.

Question:மேலை நாடுகள் போல் போதிய அளவு செக்ஸ் அனுபவங்கள் இல்லாததால்தான், ஆண்கள் இங்கே இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்களா?

சத்குரு:

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கூட பாலியல் பலாத்காரங்களுக்குக் குறைவில்லை. சொல்லப்போனால், அங்கே சாலை முனைகளிலும் மின்தூக்கி (லிஃப்ட்)களிலும் கூட பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன. எனவே, செக்ஸ் விஷயத்தில் இந்திய ஆண்கள் பட்டினி போடப்பட்டுவிட்டதால்தான் இங்கே பாலியல் பலாத்காரங்கள் மிகுந்துவிட்டன என்பதெல்லாம் அபத்தமான சிந்தனை.

வசதியாக வாழ்பவர்களுடன் ஒப்பிட்டால், இங்கே அவர்கள் வேறு எத்தனையோ விதத்தில் பட்டினி கிடக்கிறார்கள். இது இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஒரு கோணம்தானே தவிர, முற்றிலும் செக்ஸ் தொடர்பானது என்று முத்திரை குத்த முடியாது.

நான்கு மனைவியர்கள் இருந்தால்கூட, கவனமாக வாழ்க்கையை நடத்தாதவர்களுக்கு செக்ஸ் பசி தீர்ந்துவிடாது!

Question:சரி, இந்த அவலநிலையை எப்படித்தான் தவிர்ப்பது?

சத்குரு:

மனிதர்கள் ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில் வாழ்க்கை நடத்தும் வரை இவற்றை முற்றிலுமாகத் தவிர்கக முடியாது என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.

இன்றைக்கு மனிதகுலம் அப்படியாகிவிட்டது. மக்கள் முழுமை அடையாத பல நிலைகளில் இயங்குகிறார்கள். யாரும் கவனிக்க வில்லை என்றால், எதையாவது அபகரிக்க முடியுமா என்றுதான் மனித மனம் விழைகிறது. அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை.

உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோவிடம் ஒருவர் கேட்டார்..."எப்படி இவ்வளவு அற்புதமான சிற்பங்களை வடிவமைக்கிறீர்கள்?"

மைக்கேல் ஏஞ்சலோ சொன்னார்.... "சுலபம்! ஒரு பாறையைப் பார்க்கும்போது, அதனுள் ஒளிந்திருக்கும் சிற்பத்தைத்தான் நான் பார்க்கிறேன். அதை மூடி மறைத்திருக்கும் பகுதிகளை மட்டும் செதுக்கி எடுத்து விடுகிறேன்!"

அதே போலத்தான், ஒவ்வொரு மனிதனையும் அழுக்காறு, வன்முறை போன்ற தேவையில்லாத பகுதிகள் மூடியிருக்கின்றன. கவனமாக அவற்றைக் களைந்து எடுத்துவிட்டால், அவனுடைய வாழ்க்கை மரியாதைக்கு உரியதாகிவிடும். அவன் முழுமை ஆனவனாக மாறக்கூடிய வாய்ப்புகள் கூடிவிடும்.

அதனால்தான் தியானத்தை நான் தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன். வெளிச்சூழ்நிலைகளின் திடீர் தூண்டுதல்களால் அலைபாயாத மனம் வேண்டும் என்றால், தியானம் அவசியம். மனிதர்கள் அனைவரும் ஆழ்ந்த சிந்தனைகள் கொண்டவர்களாக தியான நிலையில் இருந்தால், இந்த அவலங்கள் நேராது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1