IYO-Blog-Mid-Banner

கேள்விகள் நம் மனதில் பிறப்பது நாம் சிந்திப்பதற்கான அறிகுறி! ஆனால், கேள்விகளை யாரிடம் கேட்கிறோம் என்பதே சரியான தீர்வு கிடைக்க வழிவகுக்கும். இங்கே சத்குருவிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கு விடை பகிர்கிறார் சத்குரு. இந்தக் கேள்விகள் ஒருவேளை உங்கள் மனதிலும் தோன்றியிருக்கலாம். இந்தப் பதிவை படித்து சத்குருவின் பதிலை அறியுங்கள்!

Question: எனக்குள் தீவிரமான காம உணர்வு இருக்கிறது, தவிர்ப்பது எப்படி?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஒருமுறை தன் அலுவலக நண்பியை வீட்டில் இறக்கிவிடுவதற்காக ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென வண்டியை நிறுத்திய அவர், அந்தப் பெண்ணின் மீது எட்டுக்கால் பூச்சியைப்போல் தன் கரங்களை உலவவிட்டார். அவரைத் தள்ளிவிட்ட அந்தப் பெண், “நீ டீசென்டான ஆள் என்றுதானே உன்னுடன் வந்தேன், இப்படி மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறாயே?” என்றார். அதற்கு அந்த நபர், “நான் சமீபத்தில்தான் புகைப்பழக்கத்தை விட்டொழித்தேன்,” என்றார். நீங்கள் எதையோ ஒன்றை கட்டாயத்தின் பேரில் நிறுத்த முயற்சித்தால் அது இன்னொரு ரூபத்தில் வெளிப்படும். அதனால் நீங்கள் எதையும் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டாம். உங்கள் மனம் காமத்தில் உழல்வதற்குக் காரணமே அதில் தீவிரமான சுகம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்ததிலேயே சுகமான ஒரு விஷயம் அதுவாகத்தான் இருக்கிறது. மனதைத் தீவிரமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு, விட்டுவிடு என்று சொன்னால் போய்விடுமா என்ன? அதனால், ஒரு பெரிய சாத்தியம், ஒரு பெரிய அனுபவம் உங்களுக்குள் நிகழ நீங்கள் போதுமான நேரம் ஒதுக்குவது மிக அவசியம். அந்த அனுபவம் உங்களுக்கு சுகத்தையும், பேரானந்தத்தையும் வழங்கும். அந்த பேரானந்த நிலையுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் சின்னஞ்சிறிய சுகங்கள் எல்லாம் உண்மையிலேயே சிறிதாகப் போகும். தியானம் பேரானந்தத்தை எட்ட எளிய, முறையான வழி!

Question: நம் புராணங்களில் அமானுஷ்யமான பல கதாபாத்திரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன, அவை யாவும் உண்மை என்று நினைக்கிறீர்களா?

சத்குரு:

உங்கள் கேள்வியில் இவற்றின் மேல் உள்ள நம்பிக்கையின்மை தெரிகிறது. புராணங்களில் சொல்லப்படும் மாயாஜாலம் சார்ந்த சமாச்சாரங்கள் நம்மை இந்தக் கேள்விகளை கேட்கச் சொல்கின்றன. அதிகப்படியான மிகைப்படுத்துதலே இதற்கு காரணம். ஒரு கிருஷ்ணனையும் ஒரு சிவனையும் உயர்வுபடுத்த மாயதந்திர கதைகளெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? அவர்களை நீங்கள் வானத்தில் பறக்கவிட வேண்டாம், மலையின் அடியில் அமானுஷ்யமாய் ஏதோ செய்தார் என்றும் சொல்ல வேண்டாம். அவர்கள் யாவரும் வரலாற்று கதாபாத்திரங்கள். அவர்கள் உண்மைகள். நமது தேசத்தில் வரலாற்றை சரியாய் பதிவு செய்து வைக்கும் முறை இல்லாததாலேயே வரலாறு நிகழவில்லை என்று சொல்லிவிட முடியாது. அதனால் இந்த வரலாற்றை நம் இளைய தலைமுறை அறிந்து கொள்வது மிக மிக அவசியம். அதே சமயம், நாம் மிகைப்படுத்தாமல் யதார்த்தமாய் சொன்னாலே ஒழிய யாரும் இதற்கு செவி கொடுக்கப் போவதில்லை. அதனால், இந்தத் தகவலை சரியான முறையில் இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது மிக அவசியம்.

Question: பிற கலாச்சாரங்களை நாம் சரியாக புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?

சத்குரு:

ஒரு மாநாட்டில் பங்கெடுப்பதற்காக, ஒரு அமெரிக்கர் சீனாவிற்கு சென்றார். ஷாங்காயில், ஒரு பெரிய ஹோட்டலில் மாநாடு நடந்தது. அவரைச் சந்திக்க சீன பத்திரிக்கையாளர் ஒருவர் வந்திருந்தபோது, அமெரிக்கர் உணவு உண்டு கொண்டிருந்தார். “நீங்கள் சீன உணவு வகைகளை உண்டு கொண்டிருக்கிறீர்கள், எங்கள் கலாச்சாரம் உணவு கலாச்சாரம், உங்கள் கலாச்சாரம் உடல் சார்ந்த, காமம் சார்ந்த கலாச்சாரம், இதைப் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?” என்றார். அமெரிக்கரோ, “சரி, அப்போது நாங்கள் குண்டாக இருப்பதற்கும், நீங்கள் அளவில்லாமல் ஜனத் தொகையைப் பெருக்கி இருப்பதற்கும் காரணம் என்ன?” என்றார். புரிகிறதா நாம் கலாச்சாரத்தை புரிந்து கொண்டிருக்கும் விதம்...