கடவுளுக்கு முடி காணிக்கை அவசியமா?
நமக்கு உயிர் கொடுத்து, உலகில் வாழவைக்கும் அந்தக் கடவுளுக்கு நாம் நம் தலை முடியைக் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்பதை வைத்து சொன்ன பழமொழி இது. இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்...
 
 

நமக்கு உயிர் கொடுத்து, உலகில் வாழவைக்கும் அந்தக் கடவுளுக்கு நாம் நம் தலை முடியைக் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்பதை வைத்து சொன்ன பழமொழி இது. இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்...

சத்குரு:

பரமசிவன் நிறைய தலைமுடி வைத்திருப்பவன். பிரம்மனுக்கோ, விஷ்ணுவுக்கோ கூட தலைமுடிக்குப் பஞ்சமில்லை. நீங்கள் தரப்போகும் முடியை வைத்துக் கொண்டு எந்தக் கடவுளும் எதுவும் செய்யப் போவதில்லை.

வெகு அத்தியாவசியமாக கடவுளின் உதவி தேவை என்று வேண்டிக் கொள்ளும்போது, உணர்ச்சி வேகத்தில் உடலில் ஓர் அங்கத்தையே வெட்டிக் கொடுக்கக் கூட மனிதன் தயாராக இருக்கிறான். ஆனால், வேறு அங்கத்தைக் காணிக்கையாகத் தர மனம் சம்மதிப்பதில்லை. எப்படியும் வெட்டிப் போட வேண்டிய முடியைக் கடவுளுக்குத் தருவதாக ஆசை காட்டிப் பார்க்கிறான். அவ்வளவுதான்.

இது நடைமுறை உண்மை.

ஆழமாகப் பார்த்தால், இதற்கொரு மறுபக்கம் இருக்கிறது.

சிவராத்திரி போன்ற சில குறிப்பிட்ட தினங்களில் உயிர்சக்தி மேல்நோக்கி நகர அதிக வாய்ப்பு உண்டு. அன்று படுக்காமல், முதுகெலும்பை நேராக வைத்திருக்கச் சொல்வது அதற்காகத்தான்.

அதேபோல், சரியான சூழலை உருவாக்கிக் கொண்டால், தலைமுடியை மழிக்கும் போதும், சக்தி மேல்நோக்கி நகர்வதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.

கோயில்களை சக்தி மையங்களாக உருவாக்கியிருந்தவர்கள், அந்த சக்தியை முழுமையாக உணர்வதற்கு ஒருவரைத் தயார் செய்யும் விதமாக தலைமுடியைக் காணிக்கையாக செலுத்தச் சொல்லியிருக்கலாம்.

ஆனால், அதற்கான சூழலை உருவாக்காமல், வெறும் சடங்காக இதைச் செய்யும்போது, எந்த அர்த்தமும் இல்லை.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1