"நம் நாட்டில் எத்தனையோ கடவுள்கள் இருந்தும் இன்னும் பசி, பட்டினி இருந்துகொண்டுதானே இருக்கிறது, இது எதனால்? விடை சொல்கிறார் சத்குரு...

Question: இவ்வளவு கடவுள்கள் இருந்தும், ஞானிகள் வந்தும் பசி, பட்டினி, பிணி எல்லாம் ஏன்?

சத்குரு:

இந்த தேசத்தில் பசி, பட்டினிக்கெல்லாம் யார் காரணம்? பொறுப்பில்லாமல் ஜனத்தொகையை வீங்க வைத்தது நீங்களா? கடவுளா? கணக்கு வழக்கில்லாமல் குழந்தைகளைப் பெற்றுக் போட்டுவிட்டு, கடவுள்தான் கொடுத்தார் என்று வெட்கமில்லாமல் சொல்லாதீர்கள். புத்தர், மாவீரர் போன்றவர்கள் ஞானம் கொடுக்க வந்தார்கள். சோறு போட வரவில்லை. அப்புறம் உங்களுக்கு எதற்குக் கண்களும், கைகளும், கால்களும்? அவற்றைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவீர்கள் என்று நம்பித்தானே, அதையெல்லாம் உடம்பில் வைத்துப் படைத்து உங்களை கடவுள் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்? தவறு உங்களிடம்தான்!

நீங்கள் திருந்தும்வரை, எந்த பகவத்கீதையாலும் புண்ணியமில்லை. எந்த மதம் வந்தாலும் உங்களை மீட்க முடியாது. கடவுளைக் கும்பிட்டுக் கொண்டே, ஆகாயத்தைப் பார்த்தபடி நடந்தால், திறந்திருக்கும் சாக்கடைக்குள்தான் போய்விழுவீர்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். கடவுள் கையில் கொடுக்காதீர்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: ‘சத்குரு’ என்பதன் அர்த்தம் என்ன?

சத்குரு:

‘சத்குரு’ என்றால் படிக்காத குரு. முறை சார்ந்த ஆன்மீகக் கல்வி என்று சொல்லப்படுகிற விஷயத்தை பயிலாதவருக்கு சத்குரு என்று பெயர். அவற்றையெல்லாம் அவர் உள்நிலை அனுபவத்தில் கொண்டிருக்கிறார். ஆன்மீகக் கல்வி என்று அவருக்கு ஏதுமில்லை. வேதங்கள், கீதைகள், உபநிஷதங்கள் போன்றவற்றிலிருந்து அவர் வருவதில்லை. அவற்றில் அவருக்கு பயிற்சியும் இல்லை. இது உள்நிலை அனுபவம்.

நான் என்கிற விஷயத்தை, என்னைக் குறித்த விஷயத்தை தவிர, எல்லாவற்றிலும் ஒருவித அறியாமையில்தான் இருக்கிறேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘நான்’ என்பதுதான். இது தெரிந்தாலே இந்த பிரபஞ்சத்தைத் தெரிந்து கொண்டதாக அர்த்தம். உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் தெரிந்து கொள்ளுகின்ற தகுதியுள்ள ஒரே விஷயம் ‘நீங்கள்’ எனும் உங்கள் தன்மை தான்.

உங்கள் தன்மை உங்களுக்குத் தெரிந்தால் என்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதெல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. எனவே ‘சத்குரு’ என்ற சொல்லுக்கு அர்த்தம், ஒருவர் தன்னிலிருந்து வருபவர் என்பது. இன்னொருவரால் பயிற்றுவிக்கப்பட்டவர் என்று இல்லை. அதாவது ஒரு குறிப்பிட்ட மரபிலேயிருந்து வருபவர் அல்ல சத்குரு என்பவர். அவர் தன்னிலிருந்து தோன்றியவர்.

ஒரு மரபினுடைய உறுதுணை அவருக்கு இருந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்தை அவர் சார்ந்திருக்க மாட்டார். அதனால், அவருக்கு முன்னோடிகள் என யாரும் இல்லை என்பதனால்தான் இந்த சமூகத்தில் அவரை அங்கீகரிப்பதற்கு நீண்டகாலம் ஆகிறது.

Question: செய்தித்தாள்களைப் பார்த்தால், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்றே செய்திகள் தட்டுப்படுகின்றனவே?

சத்குரு:

தேசம் முழுவதும் பல நல்ல காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கவனித்து பிரபலப்படுத்த யாரும் தயாராய் இல்லை. சமூகத்திற்கு அற்புதமாகத் தொண்டாற்றுபவர்கள் கவனிக்கப்படாமல் போவதும், ஒரு பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிப்பவன் உடனே பிரபலமாகிப் போவதும் இந்த சமூகத்தின் அவலங்கள்.

சரித்திரப் புத்தகங்கள் கூட போர்களைப் பற்றியும், ஹிட்லர்களைப் பற்றியும் பேசும் அளவிற்கு புத்தர் பற்றியும், மகாவீரர் பற்றியும் பேசுவதில்லை. மறக்கப்பட வேண்டியவர்களைப் பற்றித்தான் சமூகம் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நினைவில் வைத்திருக்க வேண்டியவர்கள் பற்றி கவனிப்பதில்லை. இந்தத் தவறான அணுகுமுறையை நாம் மாற்றினால்தான் சமூகம் மேன்மையுற முடியும்.

_Monica_ @ flickr