கடவுளை கைப்பற்ற முடியுமா?
நம் கலாச்சாரத்தில், அந்த ஒன்றுமற்ற தன்மையைத்தான் ஷிவா என்கிறோம். அதை கைகளால் பிடிக்க முடியாது. ஆனால், அதில் கலந்து கரைந்து போகமுடியும். கடலில் கலந்துவிட்ட துளி, கடலாகவே ஆகி விடுவதைப் போல், ஒன்றுமற்றதில் கரைந்து போகையில் அந்த ஒன்றுமற்றதாகவே நீங்கள் மாறி, எல்லை அற்றதாகி விடுகிறீர்கள்.
ஜென்னல் பகுதி 27
கடவுளைக் கைப்பற்ற முடியுமா? என்று கேட்டான் சீடன்.
“ஒன்றுமில்லாததைக் கைப்பற்ற முடியுமா?” என்று பதிலுக்குக் கேட்டார் குரு.
“அட, அப்படியென்றால், கடவுள் என்பது ஒன்றுமில்லையா?” என்று அலட்சியமாகக் கேட்டான் சீடன். “இதோ கைப்பற்றிவிட்டேன்” என்று கையை மூடிக் காட்டினான்.
குரு சிரித்தார். “உன்னால் மட்டுமல்ல, யாராலும் கைப்பற்ற முடியாது!”
Subscribe
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
எல்லாவற்றையும் கைப்பற்ற முடியும் என்பது மனிதனின் முட்டாள்தனமான தீர்மானம். உலகையே கைப்பற்றிவிட்டதாக நினைத்தால்கூட, அது பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளிதான். எது இருக்கிறதோ, அதில் ஒரு பகுதியையாவது கைப்பற்றலாம். ஆனால், ஒன்றும் இல்லாததை எப்படிக் கைப்பற்ற முடியும்?”
பிரபஞ்சத்தில் நீங்கள் பார்க்கும் நட்சத்திரங்கள், சூரியக் குடும்பங்கள் எல்லாவற்றையும்விட, அவற்றைத் தாங்கிப் பிடித்திருக்கும் ‘ஒன்றுமற்ற’ வெறுமைதான் மிகமிக அதிகம். ‘எது வந்ததோ, அது ஒன்றுமற்றதில் இருந்து வந்தது. எது மறைகிறதோ, அது அதே ஒன்றமற்றதில் கலந்து காணாமற் போகிறது’. இது ஏதோ தத்துவம் அல்ல; விஞ்ஞானத்தால் அழுத்தமாக நிருபிக்கப்பட்டிருக்கும் உண்மை.
இருப்பது எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும், அதை அளந்து பார்க்கமுடியும். ஒன்றுமில்லாததை எப்படி அளக்கமுடியும்?
நம் கலாச்சாரத்தில், அந்த ஒன்றுமற்ற தன்மையைத்தான் ஷிவா என்கிறோம். அதை கைகளால் பிடிக்க முடியாது. ஆனால், அதில் கலந்து கரைந்து போகமுடியும். கடலில் கலந்துவிட்ட துளி, கடலாகவே ஆகி விடுவதைப் போல், ஒன்றுமற்றதில் கரைந்து போகையில் அந்த ஒன்றுமற்றதாகவே நீங்கள் மாறி, எல்லை அற்றதாகி விடுகிறீர்கள்.
வாழ்க்கையும் அப்படித்தான். எட்டிப் பிடிப்பதற்கு அங்கே ஒன்றும் இல்லை. எதையாவது எட்டிப்பிடிக்க வேண்டுமானால், உங்களுக்கும் அதற்கும் ஒரு இடைவெளி இருந்தாக வேண்டியிருக்கிறது. வாழ்க்கையில் இருந்து விலகி நின்று அதை கைப்பற்றப் பார்ப்பது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்!
படைத்தலுக்கு எது மூலமோ அது உங்களுக்குள் இருந்துகொண்டு, பல அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. படைக்கப்பட்ட எதை வேண்டுமானாலும் கைப்பற்ற முடியும், ஆனால் படைத்தலின் மூலத்தை எப்படி கைப்பற்றுவது?
வாழ்க்கையை முழுமையாக உணர, அதனுடன் இரண்டறக் கலப்பதுதான் ஒரே வழி!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418