கடவுள் மேலே இருக்கிறார் என்பது உண்மையா?
சத்குரு, தலைமுறை தலைமுறையாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி: ‘கடவுள் என்றொருவர் மேலே இருக்கிறாரா? இல்லையா?’ என்பது. இதற்கு எப்போதும் இரு பதில்கள் உண்டு - கடவுள் என்றொருவர் இல்லவே இல்லை என்பது ஒன்று. கடவுள் இருக்கிறார் என்பது இன்னொன்று. இதில் எதை நம்புவது?
 
கடவுள் மேலே இருக்கிறார் என்பது உண்மையா?, Kadavul maele irukkirar enbathu unmaiya?
 

Question:சத்குரு, தலைமுறை தலைமுறையாக மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி: ‘கடவுள் என்றொருவர் மேலே இருக்கிறாரா? இல்லையா?’ என்பது. இதற்கு எப்போதும் இரு பதில்கள் உண்டு - கடவுள் என்றொருவர் இல்லவே இல்லை என்பது ஒன்று. கடவுள் இருக்கிறார் என்பது இன்னொன்று. இதில் எதை நம்புவது?

சத்குரு:

‘கடவுள் என்றொருவர் மேலே இருக்கிறாரா?’ என்று கேட்டீர்கள். இப்போது நான் உங்களை ஒரு எளிமையான கேள்வி கேட்கிறேன். நாம் வாழும் இந்த பூமி உருண்டையானது என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? அது மட்டுமல்ல, அது தொடர்ந்து சுழன்றுகொண்டும் இருக்கிறது. அதனால் ‘மேலே பார்க்கிறேன்’ என்று நீங்கள் சொல்லும்போது, நீங்கள் தவறான திசையைத்தானே காட்டுகிறீர்கள்? இந்தப் பிரபஞ்சத்தில் எது ‘மேலே’ என்று உங்களால் தெளிவாக நிர்ணயிக்க முடியுமா? ‘இந்தப் பக்கம் மேலே’ என்று அட்டைப்பெட்டிகளில் நீங்கள் குறிப்பது போல், இப்பிரபஞ்சத்தில் ஏதேனும் குறியீடுகள் இருக்கிறதா, எது மேலே என்று காட்டுவதற்கு? அப்படியென்றால் எது மேலே? எது கீழே?

ஏதோ ஒன்றை நம்பவேண்டிய நிலை உங்களுக்கு ஏன் வருகிறது? ஏனெனில் உங்களுக்குத் தெரியாத ஒன்றை, ‘எனக்குத் தெரியாது’ என்று ஒத்துக்கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லை.

ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, ‘இது மேலே, இது கீழே’ என்று செயல்படுவதற்கு ஏற்றவகையில் நாம் குறிக்கலாம். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில், எது மேலே? எது கீழே? எது முன்னே? எது பின்னே? என்று நீங்கள் அறுதியிட்டுச் சொல்லமுடியுமா? நிச்சயமாக முடியாது. ஒன்றை மட்டும்தான் நீங்கள் நிச்சயமாகச் சொல்லமுடியும்... அது, ‘எது உள்ளே? எது வெளியே?’ என்பது. வெளியே என்பது முழுதாய் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நீங்கள் ஏற்கெனவே பார்த்துவிட்டீர்கள். அதனால் நீங்கள் உள்முகமாகத் திரும்பவேண்டும். உங்கள் உள்நிலையில் பெரும்பாலானவற்றை நீங்கள் நிர்வகிக்காததினால்தான் இத்தனை பிரச்சினைகளும் வந்திருக்கின்றன. இதற்கான தீர்வைதான் பல இடங்களில் நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.

கைக்குழந்தையாக பிறந்த நீங்கள், இன்று இத்தனை பெரிதாக வளர்ந்திருப்பது, மேலிருந்து யாரோ உங்களை நீட்டியதாலா? அல்லது உண்ட உணவைக் கொண்டு உள்ளிருந்து உருவாக்கினீர்களா? உள்ளிருந்து. அப்படியெனில் படைத்தலுக்கு மூலமானது, அதாவது கடவுள் என்று நீங்கள் எதைக் குறிக்கிறீர்களோ, அது உங்களுக்கு உள்ளிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றி இருக்கும் படைப்பு எப்படி உருவாயிற்று என்று தெளிவான விளக்கம் தரமுடியாமல், மனித மனம் உருவாக்கியதுதான் ‘கடவுள்’. இதற்கான விளக்கத்தை விஞ்ஞானமும் தரமுடியவில்லை, மதங்களும் தருவதில்லை. அதனால் நாம் இன்னும் ஆராய்ந்துகொண்டே இருக்கிறோம்.

ஆனால் சற்று கவனமாய் உள்நோக்கினால் அந்த படைப்பின் மூலம் உங்களுக்கு உள்ளிருந்து செயல்படுவதை நீங்கள் உணரமுடியும். நீங்கள் உண்ணும் ஏதோ ஒரு உணவு, மனிதனாய் தன்னை உருமாற்றிக் கொள்வது எப்படி நிகழ்கிறது? இதை படைப்பின் மூலம்தானே செய்யமுடியும்? அந்த படைப்பின் மூலம் உங்களுக்குள் இருக்கிறது என்றால், அது உங்களுக்கே தெரிந்திருக்கவேண்டும் அல்லவா? இதில் நம்புவதற்கும் நம்பாமல் போவதற்கும் என்ன இருக்கிறது?

நீங்கள் கேட்க நினைத்த கேள்வி: உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பது. ‘இருக்கிறது’ என்று நம்புவதோ... அல்லது ‘இல்லை’ என்று நம்புவதோ... ஏதோ ஒன்றை நம்பவேண்டிய நிலை உங்களுக்கு ஏன் வருகிறது? ஏனெனில் உங்களுக்குத் தெரியாத ஒன்றை, ‘எனக்குத் தெரியாது’ என்று ஒத்துக்கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லை. தெரிந்ததை தெரியும் என்றும், தெரியாததை, தெரியாது என்றும் ஒத்துக்கொள்ளும் நேர்மையும், தெளிவும், எளிமையும் ஏன் மனிதர்களிடம் இல்லாமல் போனது? ஏனெனில், ‘எனக்குத் தெரியாது’ என்பதன் எல்லையற்ற சாத்தியத்தை அவன் உணரவில்லை. ‘எனக்குத் தெரியாது’ என்று சொல்லும்போது, தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஏக்கம் பிறக்கும். அந்த ஏக்கம் வரும்போது, உங்களில் அதற்கான தேடல் பிறக்கும்.

இந்தத் தேடலை உருவாக்காமல், நாம் ‘நம்பிக்கை’ கொள்ள முயல்கிறோம். ஆத்திகவாதிக்கும், நாத்திகவாதிக்கும் இடையே வித்தியாசம் என்று பெரிதாக எதுவுமில்லை.. ஒருவர் ‘இருக்கிறது’ என்று நம்புகிறார். இன்னொருவரோ ‘இல்லை’ என்று நம்புகிறார். அடிப்படையில் இருவரும் ஒன்றேதான். ஒருவர் ‘பாஸிடிவ்’வாக (நேர்மறையாக) நம்புகிறார், மற்றவர் ‘நெகடிவ்’வாக (எதிர்மறையாக) நம்புகிறார்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1