கடந்த பிறவி முதல் இப்பிறவி வரை... சத்குருவின் குப்தகாசி அனுபவங்கள்!
நீங்கள் ஒரு ஞானியைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள். தற்காலத்திய ஞானிகளில் அவர் மட்டுமே உங்களைப் போலவே ஞானம் பெற்ற பின்னரும் மூன்று பிறவிகள் எடுத்தவர் என்று சொல்லி இருக்கிறீர்கள். அவர் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் நாள் மஹாசமாதி அடைந்தார் என்றும் குறிப்பிட்டீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? நீங்கள் இதுவரை அவரை சந்தித்து இருக்கிறீர்களா?
 
கடந்த பிறவி முதல் இப்பிறவி வரை... சத்குருவின் குப்தகாசி அனுபவங்கள்! , Kadantha piravi muthal ippiravi varai sadhguruvin guptakashi anubavangal
 

Question:நீங்கள் ஒரு ஞானியைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள். தற்காலத்திய ஞானிகளில் அவர் மட்டுமே உங்களைப் போலவே ஞானம் பெற்ற பின்னரும் மூன்று பிறவிகள் எடுத்தவர் என்று சொல்லி இருக்கிறீர்கள். அவர் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் நாள் மஹாசமாதி அடைந்தார் என்றும் குறிப்பிட்டீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? நீங்கள் இதுவரை அவரை சந்தித்து இருக்கிறீர்களா?

சத்குரு:

ஆம்! அப்படி ஒரு யோகி இருந்தார். நான் ஒருமுறை குப்தகாசி சென்றபோது, அவர் அந்தப் பகுதியில் இருப்பதை உணர்ந்தேன். ஆனால் எனக்கு அவரைப் போய் சந்திக்கவேண்டும் என்ற அவசியம் எதுவும் இருக்கவில்லை. நான் ஏன் அவரைப் பார்க்கவேண்டும்? வேண்டியதற்கும் மேலாக நான் பார்த்துவிட்டேன். நாங்கள் ஒருவருக்கொருவர் முகத்துக்கு நேராக சந்தித்தால், இருவருக்குமே அது தர்மசங்கடமாகத்தான் இருக்கும். அவருக்கும் என்னைப் பற்றித் தெரியும். எனக்கும் அவரைப் பற்றித் தெரியும். போட்டியாளர்கள் குறித்து, நான் எப்போதும் முழு விவரங்களையும் சேகரித்துக் கொள்வேன்!

Question:அப்படியானால், நீங்கள் இமயமலைக்கு வந்தபோது அவரை சந்திக்கவே இல்லையா?

சத்குரு:

ஆம்! சந்தித்தோம். எங்கே எப்போது என்பது அர்த்தமற்றது. எங்கே எப்போது என்பவை எல்லாம் உங்கள் உருவாக்கம்.

Question:நீங்கள் சந்தித்தபோது என்ன நிகழ்ந்தது?

சத்குரு:

இருவரும் அடுத்தவருடைய உடைமைகளைக் கொள்ளையடித்தோம். என்னிடம் இல்லாத, புதிய திறன்கள், சாதனைகள் எதுவும் இல்லை என்று உணர்ந்தபோது நான் பின்னடைந்தேன். அவரும் என்னிடம் புதிதாக எதுவுமில்லை என்று உணர்ந்திருப்பார். ஞானமடைதல் குறித்து இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நிலையில் இருவருமே இல்லை. ஆனால் மற்றவர் அடைந்துள்ள ‘திறன்கள்’, ‘சாதனைகள்’ குறித்து இன்னும் தெரிந்துகொள்ள எப்போதும் ஏதோ ஒன்று இருக்கும். அதனால்தான் இருவரும் ஒருவருக்கொருவர் கொள்ளையடித்தோம். ஆனால் எதுவும் புதிதாக இல்லாததால் பின்னடைந்தோம்.

Question:ஏன் பிறருடைய உடைமைகளை இப்படிக் கொள்ளையடிக்க வேண்டும்?

சத்குரு:

உண்மை தேடலில் இருப்பவர்களுக்கு, எப்போதுமே, மற்றவர் என்ன அடைந்திருக்கிறார் என்று பார்ப்பது ஒரு பழக்கம். இது எப்படி என்றால், புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பவருக்கு புத்தகக்கடையில் புதிதாக வந்திருக்கும் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்தே ஆகவேண்டும். அப்படிப் பார்க்காமல் அவரால் இருக்க முடியாது. படிக்கும் பழக்கம் இல்லாதவருக்கு அது பற்றிய அக்கறை எதுவும் இல்லை. அதுபோலத் தான் யோகிகளும். அவர் எல்லா நுட்பங்களையும், எல்லா வாய்ப்புகளையும் அறிய விரும்புகிறார். இந்த ஞானத்தின் தன்மை, இன்னும் புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கலாம் என்னும் வகையில் இருக்கிறது. நாகரிகமான வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றால் ‘நாங்கள் இருவரும் பரிமாறிக்கொண்டோம்’ என்று சொல்லலாம். ஆனால் நாங்கள் ஞானிகள். நாகரிகம் எல்லாம் பார்ப்பதில்லை. எனவே தான் ‘மற்றவர் உடைமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டோம்’ என்று சொன்னேன்.

Question:ஏன் நாகரிகம் இல்லாமல் என்று பேசுகிறீர்கள்? ஒருவேளை அப்படி மற்றவர் உடைமையை எட்டிப்பார்ப்பதில் ஏதேனும் வலுக்கட்டாயமோ வன்முறையோ இருக்குமோ?

சத்குரு:

வன்முறை இல்லை. ஏனென்றால் எங்கள் இருவருக்கும் இடையே எல்லைகள் எதுவும் இல்லை. ஆனால் ஒரு ஞானி என்று சொல்லும்போதே அங்கு நாகரிகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் வேண்டுமென்றே முழு விழிப்புணர்வுடன் நாகரிகம் துறந்தவராக இருக்கிறார். ஏனென்றால் நாகரிகம் என்பதே நீங்கள் வெளியில் இருந்து எடுத்துக் கொண்ட விஷயம் தான். அப்படி ஒருவர் வெளியில் இருப்பதை எல்லாம் சேகரித்தார் என்றால் அவர் ஞானியாக இருக்க முடியாது. ஒரு போலியாகத்தான் இருக்க வேண்டும். பல பூசாரிகளும், பண்டிதர்களும், முல்லாக்களும் இப்படித்தான் வெளியிலிருந்து சேர்த்துக்கொண்ட நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றின் கலவையான பிதற்றலாக இருக்கிறார்கள்.

Question:சென்ற பிறவியில் சத்குரு ஸ்ரீ பிரம்மாவாக நீங்கள் குப்தகாசிக்கு வந்திருக்கிறீர்கள் என்று புரிகிறது. அப்படித்தானே சத்குரு?

சத்குரு:

ஆம், எழுபது வருடங்கள் இருக்கும். சத்குரு ஸ்ரீ பிரம்மா இங்கு வந்தார். அவர் நான்கு இளைஞர்களுடன் வந்தார். அவர்களுடைய ஆன்மீக சாதனைக்கு உதவி செய்ய சத்குரு ஸ்ரீ பிரம்மா உடன்வந்தார். அவர்கள் ‘ருத்ரபிரயாக்’ என்னும் இடத்திலிருந்து கேதாரம் வரை, சுமார் 85 கிலோமீட்டர்கள் நடந்தே வந்தார்கள். அவர்கள் அங்கு அதிக காலம் தங்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அதிக குளிர் காரணமாக அங்கு தங்கமுடியவில்லை. தென்னிந்தியாவின் உஷ்ணமான பகுதியிலிருந்து வந்ததால், அவர்களால் அந்த குளிரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உணவும் ஒரு பிரச்சனையாக இருந்தது. இன்று காலை தான், நான் இது குறித்து பேசிக் கொண்டிருந்தேன். இந்த பிறவியில் தான், நான் எங்கே சென்றாலும், எந்த ஏற்பாடுகள் செய்யாமல் சென்றாலும், எனக்கு உணவு கிடைத்து விடுகிறது. கடந்த மூன்று பிறவிகளும், எனக்கு உணவு என்பது பெரும் போராட்டமாகவே இருந்தது. இப்போது, இந்தப் பிறவியில் தான், உலகின் எந்த மூலைக்குப் போனாலும் உணவு கிடைக்கிறது.(சிரிக்கிறார்) உணவு என்பது பெரிய விஷயம் இல்லை தான். ஆனால் அது கிடைக்காதபோது, அது மிகப்பெரிய விஷயமாகி விடுகிறது.

எப்போதும் உணவின்றி நடந்துகொண்டே இருப்பது என்பது, இந்திய ஆன்மீகத்தின் ஒரு தன்மையாக இருந்திருக்கிறது. பொதுவாக அதீத பசி ஏற்பட்டுவிட்டால், நீங்கள் ஒரு மிருகம் போல் மாறிவிடுவீர்கள். அதிக பசியுடன் இருக்கும்போது, உங்கள் எதிரில் உணவு வந்தால் நீங்கள் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள். சண்டை போடுவீர்கள்; கொலை செய்வீர்கள்; இன்னும் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள். இப்படியெல்லாம் செய்யாமல், அதிக பசியிலும் மிகுந்த மேன்மையுடன், பண்புடன் நடந்து கொள்வது என்பது ஓர் ஆன்மீகப் பயிற்சி.

சத்குரு ஸ்ரீ பிரம்மா அந்த நான்கு இளைஞர்களுடன் கேதாரம் அடைந்தபோது, அங்கு நிலவிய கடுங்குளிர் அவர்களுடைய சாதனைக்கு சாதகமாக இல்லை எனத் தெரிந்ததும், அவர்கள் குப்தகாசிக்கு வந்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள், இங்குள்ள கோயிலில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்கள்.

இந்தப் பிறவியில், மீண்டும் அந்த நால்வரில் இரண்டு பேருடன் ஆறு வருடங்களுக்கு முன் இங்கு வந்தேன். அந்த இருவரில் ஒருவர் இந்தப் பிறவியில் பெண்ணாக இருக்கிறார். இந்த கோவிலுக்கு நாங்கள் வந்தபோது நிலவிய சூழ்நிலை நம்பமுடியாததாக இருந்தது. மற்ற இரண்டு பேர் இப்போது நம்முடன் இல்லை.

எனவே, நாங்கள் இங்கு தங்கி பணிபுரிய முடிந்ததால், இந்த இடம் சில வகைகளில் எங்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. எனவே நாம் ஒவ்வொரு முறை இமயமலைக்கு வரும்போதும், இங்கு சிலமணி நேரங்கள் தங்கிவிட்டுச் செல்கிறோம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1