ஈஷாவில் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள்
நம் கலாச்சாரத் திருவிழாக்களை பலவகை பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக மீட்டெடுத்து மண்மணம் மாறா விழாக்களை வரும் தலைமுறையினருக்கு வழங்குவதற்காக ஈஷா பலவகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஈஷாவில் கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழாவின் ஒரு கண்ணோட்டம் இங்கே!
 
 

நம் கலாச்சாரத் திருவிழாக்களை பலவகை பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளின் வாயிலாக மீட்டெடுத்து மண்மணம் மாறா விழாக்களை வரும் தலைமுறையினருக்கு வழங்குவதற்காக ஈஷா பலவகையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஈஷாவில் கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழாவின் ஒரு கண்ணோட்டம் இங்கே!

ஈஷா மையத்தில் மண்மணம் மாறா பொங்கல் திருவிழா!

ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் உலகம் முழுவதிலுமிருந்து 3200 பேர் கலந்து கொண்டனர். பாரம்பரிய முறைப்படி, கிராமத்து வாசனையுடன் மாடுகளையும் விவசாயக் கருவிகளையும் வைத்து பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றதோடு, மண்பானைகளில் பச்சரிசிப் பொங்கல் வைக்கப்பட்டது. தப்பாட்டத்துடன் ஒயிலாட்டமும் விளையாட்டுப் போட்டிகளும் கோலாகலமாக நடைபெற்றது.

ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள்

ஈஷா தன்னார்வத் தொண்டர்களால் பயிற்றுவிக்கப்பட்ட கிராமக் குழந்தைகள் தங்கள் இசை மற்றும் நடனத் திறனை 15 குழுக்களாகப் பிரிந்து ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று வெளிப்படுத்தினர். மடக்காடு, தாணிக்கண்டி, பட்டியார் கோயில்பதி, முள்ளாங்காடு, முட்டத்துவயல், முத்திபாளையம், தொண்டாமுத்தூர், நரசிபுரம், தேவராயபுரம், காளம்பாளையம், மத்துவராயபுரம், இருட்டுப்பள்ளம், சென்னனூர் போன்ற 15க்கும் மேற்பட்ட ஊர்களில் சிறுவர்-சிறுமியர் வழங்கிய கலைநிகழ்ச்சிகளில் உற்சாகம் மிகுந்தது. கிராமியக் கலைஞர்கள் வழங்கிய பெரிய மேளம், குழந்தைகளின் ஒயிலாட்டம், கரகாட்டம், பறையாட்டம் ஆகியவை நெஞ்சில் நிறைந்தது.

மாட்டுப் பொங்கலன்று களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்

மாட்டுப்பொங்கலன்று பொங்கல் கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா, ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஹோம் ஸ்கூல் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வழக்கம்போல் சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா தன் மயக்கும் இசையால் அனைவரையும் கட்டிப்போட, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் தேவாரப் பாடல்களைப் பாடி தெய்வீக மணம் பரப்பினர்.

சேவைபுரிந்த சேவாதார்களுக்கு நன்றி!

உழைக்கும் கைகளுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதுதான் நம் கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு. அந்த வகையில், ஈஷா யோகா மையத்தின் பல்வேறு களப்பணிகளில் தங்கள் உழைப்பைக் கொடுத்து அரும்பங்காற்றி வரும் நூற்றுக்கணக்கான சேவாதார்களுக்கு புத்தாடைகளும் விருந்து உபசரிப்பும் வழங்கப்பட்டன.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1