ஈஷா யோகாவில் உள்ள 4 தன்மைகள்!

நான்கு விதமான யோகிகள் சந்தித்துக்கொண்ட கதையைக் கூறி, யோகாவில் 4 தன்மைகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயிற்சி செய்வதால் நிகழும் அசௌகரியங்களை சத்குரு விளக்குகிறார். ஈஷா யோகாவில் வழங்கப்படும் அந்த 4 தன்மைகள் குறித்தும் விளக்கும் சத்குரு, ஆன்மீகத்திற்காக காடுகளுக்கோ குகைகளுக்கோ ஏன் செல்லத் தேவையில்லை என்பதை இதில் உணர்த்துகிறார்.
 

பாகம் 1 - யோகா இல்லாமல் ஆன்மீக உச்சம் சாத்தியமா?

சத்குரு:

முன்னொரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் 4 பேர் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தனர்.

yogapart2imgஅவர்களில் ஒருவர் கர்ம யோகி, இன்னொருவர் கிரியா யோகி, மற்றொருவர் பக்தி யோகி, இன்னுமொருவர் ஞான யோகி. இந்த நால்வரும் எப்போதும் ஒன்று சேர மாட்டார்கள், ஆனால் அன்று சேர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போதும் ஒன்று சேர மாட்டார்கள் என்று ஏன் சொன்னேன் என்றால், ஞான யோகி எப்போதும் அறிவைப் பயன்படுத்தி எதையும் தர்க்க ரீதியாகப் பார்ப்பவர், அவர்களுக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து ராம், ராம் என்று உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களாகத் தெரிவார்கள். எதையும் தர்க்க ரீதியாகப் பார்ப்பவர்களுக்கு, வாழ்க்கையை கூறுபோட்டுப் பார்ப்பவர்களுக்கு, பக்தர்களைப் பார்த்தால் முட்டாள்களாகத்தான் தெரியும். பக்தி யோகிகளோ எப்போதும் அனைவரையும் பார்த்துப் பரிதாபப்படுபவர்கள். கடவுள் இங்கேயே பக்கத்திலேயே இருக்கும்போது அவர் கைப் பிடித்து நடப்பதை விட்டுவிட்டு எதற்காக கஷ்டப்பட்டு மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்? எதற்காக தலைமீது நிற்கவேண்டும்? என்று பக்தி யோகிகள் மற்றவர்கள் மீது பரிதாபப்படுகிறார்கள்.

சாவதற்கு 3 நாட்கள் முன்னதாக ஆன்மீகத்திற்கு மாறிக்கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டார்கள்
கர்மயோகி நினைக்கிறார், பக்தி, ஞான, கிரியா யோகிகள் சோம்பேறிகள். வேலைக்குப் பயப்படுபவர்கள். வேலைக்குப் பயந்தே எல்லாவிதமான தத்துவங்களையும், யோகப் பயிற்சிகளையும் கண்டுபிடித்திருக்கின்றனர் என்று நினைப்பவர். கிரியா யோகியோ அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்குபவர். முழு பிரபஞ்சமுமே சக்திதான், தங்கள் சக்தியை மாற்றத் தெரியாமல் எதற்கு வெற்றுப் பேச்சு பேசுகிறார்கள்? கடவுள், பிசாசு என்பதெல்லாம் வெறும் பேச்சுதான் என்று அவர் நினைக்கிறார்.

அப்படி இந்த 4 பேரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொண்டிருந்தனர். எனவே எப்போதும் இந்த நால்வரும் ஒன்று சேரமாட்டார்கள். ஆனால் அந்த 4 பேரும் அன்று காட்டுக்குள் ஒன்றாக சேர்ந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, புயல் மழை பெய்யத் துவங்கியது. நேரம் செல்லச்செல்ல மழை கடுமையானதால் அவர்கள் தங்குவதற்கு இடம் தேடினர். அப்போதுதான் பக்தி யோகி, இந்தத் திசையில் போனால் ஒரு பழைய கோவில் உள்ளது, அங்கு போய்த் தங்கலாம் என்று சொன்னார். அவருக்கு எல்லாக் கோயில்களின் இருப்பிடமும் தெரியும். மற்றவர்கள் அனைவரும் அவரை நம்பினார்கள். எனவே விரைந்து அந்த இடத்தை நோக்கி ஓடினார்கள். ஓடி அந்த பழைய கோவிலை அடைந்தார்கள். அந்தக் கோயிலின் சுவர்கள் முன்பே இடிந்து விழுந்திருந்தன. 4 தூண்களும் கூரையும் மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த நால்வரும் கோவிலுக்குள்ளே ஓடினார்கள். ஓடியது கடவுள் மேல் இருந்த அன்பால் அல்ல, மழையிலிருந்து தப்பிப்பதற்காக. அந்த புயல்மழையோ மிக ஆக்ரோஷமாக அடித்ததால் சாரல் எல்லா பக்கமும் வந்தது.

கோவிலின் நடுவே கடவுள் சிலை இருந்தது. அங்கு மட்டுமே மழையின் சாரல் குறைந்திருந்தது. எனவே அனைவரும் அந்த சிலையின் அருகே ஓடினர். ஓடியவர்கள் அந்த சிலையின் அருகே இறுக அணைத்து உட்கார்ந்திருந்தனர். அப்போது கடவுளே நேரில் தோன்றினார். கடவுளைப் பார்த்தவுடன் அனைவர் மனதிலும் ஒரே கேள்விதான் ஓடியது, ‘நான் நிறைய பூஜை செய்தபோதெல்லாம நீ தோன்றவில்லை, நான் 11 ரூபாய் காணிக்கை கொடுத்து அர்ச்சனையும் செய்தேன், அப்போதெல்லாம் நீ தோன்றவில்லை, வெறுமனே மழைக்காக இங்கே ஒதுங்கியபோது தோன்றுகிறாய்! என்று. பிறகு அவர்கள் கடவுளிடமே, ‘நான் பல காலங்கள் உனக்காக என்னென்னவோ செய்தேன், அப்போதெல்லாம் நீ வரவில்லை, இப்போதோ மழைக்காக மட்டும் இங்கே ஒதுங்கினோம், இப்போது தோன்றுகிறாய்’ என்று கேட்டனர். அதற்கு கடவுள் கூறினார், “கடைசியாக நீங்கள் 4 முட்டாள்களும் ஒன்று சேர்ந்திருக்கிறீர்களே! எனவேதான் வந்தேன்” (கைதட்டல்).

வாழ்க்கையை ஆன்மீக செயல்முறைக்கு எதிராகவும் ஆன்மீக செயல்முறையை வாழ்க்கைக்கு எதிராகவும் மாற்றி மனித சமுதாயம் முழுவதற்கும் ஆனந்தமாக வாழக்கூடிய வாய்ப்பைத் தடுத்துவிட்டோம்.
உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திநிலைகளை ஒன்றாக ஒரு திசையில் செலுத்தாவிட்டால், பிறகு உங்கள் பயணம் வலி மிகுந்த பயணமாகிவிடும். மேலும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டுவிடுவீர்கள். இப்போது நீங்கள் ஆன்மீகப் பாதை மற்றும் யோகா என்று தனித்தனியாக்கிப் பார்க்கிறீர்கள். நீங்கள் ஆன்மீகப் பாதைகள் என்று கூறுபவற்றை மக்கள் துரதிருஷ்டவசமாக வாழ்க்கைக்கு எதிரானது என்று கருதுகிறார்கள். நீங்கள் நன்றாக வாழவில்லை என்றாலோ, நன்றாக சாப்பிடவில்லை என்றாலோ, நன்றாக உடை அணியவில்லை என்றாலோ நீங்கள் நிச்சயமாக ஆன்மீகப் பாதையில் இருப்பவர், அப்படித்தானே, இல்லையா? யாராவது இங்கே சரியாக உடை அணியாமல், பட்டினி கிடக்கும் முகத்தோடு சரியாக வாழ்பவராகத் தெரியாவிட்டால், அவர் நிச்சயம் ஆன்மீகவாதி. எனவே முழு சமுதாயமும் ஆன்மீகத்திற்கு எதிராக ஒவ்வாமையை வளர்த்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை. சாவதற்கு 3 நாட்கள் முன்னதாக ஆன்மீகத்திற்கு மாறிக்கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டார்கள் (அனைவரும் சிரிக்கின்றனர்). நாம் வாழ்க்கையையும் ஆன்மீகத்தையும் பிரித்துவிட்டோம். இது மனித சமுதாயத்திற்கு எதிராக நாம் செய்த மிகப்பெரிய தவறு. வாழ்க்கையை ஆன்மீக செயல்முறைக்கு எதிராகவும் ஆன்மீக செயல்முறையை வாழ்க்கைக்கு எதிராகவும் மாற்றி மனித சமுதாயம் முழுவதற்கும் ஆனந்தமாக வாழக்கூடிய வாய்ப்பைத் தடுத்துவிட்டோம்.

சமுகத்துடன் இணைந்தே இயங்கும் ஆன்மீகம்!

எனவே கடந்த சில நாட்களாக நீங்கள் இங்கு செய்து கொண்டிருப்பவை எல்லாம் 4 - சக்கரங்களையும் ஓட வைப்பதைத்தான். நாம் சொல்லிக் கொடுக்கும் வகுப்பு கர்மா, கிரியா, பக்தி, ஞானம் என எல்லாப் பரிமாணங்களையும் கொண்டிருக்கிறது. இந்த நான்கையும் பயன்படுத்தினால்தான் ஆன்மீக செயல்முறைகளில் ஆனந்தமாகச் செல்லமுடியும். மேலும் சமூகத்திலும் ஒப்புக்கொள்ளப்படுவீர்கள். இந்த நான்கில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துச் சென்றால் சமூகம் உங்களைப் புறக்கணிக்கும். நீங்கள் ஒரு குடும்பத்திலோ அல்லது சமூக சூழ்நிலையிலோ வாழ முடியாது. உங்களையே நீங்கள் அப்படி ஆக்கிக்கொள்வீர்கள். ஆன்மீகத்திலும் இருந்து, சமூகத்திலும் இருக்க விரும்பினால் அந்த 4 சக்கரங்களும் ஓட வேண்டும். இதயம் (பக்தி) வேலை செய்கிறது, ஆனால் மூளை (ஞானம்) வேலை செய்யவில்லை என்றால் யாரும் உங்களுடன் சேர்ந்து வாழ விரும்பமாட்டார்கள். எல்லா பக்தர்களையும் கவனியுங்கள். அவர்கள் சென்று பல காலம் ஆகிவிட்டதால் இப்போது வேண்டுமானால் நீங்கள் அவர்களை பாராட்டுவீர்கள்.

உங்கள் பக்தியைக் குலைப்பதற்காக நான் இதை சொல்லவில்லை. பக்தி ஒரு அழகான விஷயம்தான். உச்சபட்ச சாத்தியத்தை அடைய பக்தி ஒரு வேகமான வழி. ஆனால் நீங்கள் ஒரு பக்தியாளராக மாறினால் வாழ்க்கையில் வேறு எந்த நோக்கமும் வைத்துக்கொள்ளக்கூடாது. உங்களுக்கென்று எந்த செயல்திட்டமும் இருக்கக்கூடாது. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பக்தருக்கு சொந்தமாக எந்த செயல்திட்டமும் கிடையாது. அவருடைய ஒரே நோக்கம் பக்தியிலேயே கரைந்து போவதுதான். நீங்கள் கோவிலுக்குச் சென்று ‘கடவுளே! இதைக் கொடு, அதைக் கொடு, காப்பாத்து! என்று வேண்டினால் அது ஏமாற்றிக் கொள்வது, அது பக்தியல்ல. நீங்கள் செய்யும் தந்திரம் அது. பக்தி உங்களை ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு எடுத்துச் செல்லும் வாகனம்.

எனவே, நீங்கள் ஒரு பக்தராக மாறினால் சமூக ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் மிகவும் ஒதுக்கப்படுவீர்கள். பக்தர்களின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் ஔவையார் இருந்தார், அவர் சமூகத்திற்கு ஒத்துவரவே இல்லை. பிறகு மீராபாய், அவரும் ஒத்துவரவில்லை. அவருடைய கதை உங்களுக்கு தெரியுமா? உங்கள் கணவனோ அல்லது மனைவியோ இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதாக நம்புகிறார். அவருடன் வாழ்கிறார், அவருடன் நடனமாடுகிறார், அவரை காதலிக்கிறார், அவருடன் எல்லாவகையிலும் உறவு வைத்துக் கொள்கிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கிறீர்கள். வாழ்க்கை பற்றிய உங்களது கருத்து இதுவல்ல, இல்லையா? அதனால்தான், எல்லோரும் தங்கள் குடும்பங்களிலிருந்து ஆன்மீகத்தைத் துரத்திவிட்டார்கள். ஆன்மீகத்தை தங்கள் குடும்பத்தில் நுழையவிட்டால் தாங்களும் அப்படி ஆகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள்.

ஈஷா யோகாவில் உள்ள 4 தன்மைகள்...

ஈஷா யோகா என்பது காலையில் உட்கார்ந்து பயிற்சியை செய்து கொண்டிருப்பதல்ல. அந்த வகுப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.
எனவே உலகிலுள்ள எல்லா குடும்பத்தினருக்கும் நான் ஒரு உத்தரவாதம் கொடுக்க விரும்புகிறேன். வேறுமாதிரியான ஆன்மீகத்தை, நான்கு சக்கரங்களும் சுற்றும்படியான ஆன்மீகத்தை நாம் கொண்டுவருவோம். அப்போது அவர்கள் தங்களுக்குள் ஆன்மீகம் மிகுந்தவராகவும் அதேநேரத்தில் குடும்பத்திலும் சமூகத்திலும் அற்புத மனிதராகவும் இருக்க முடியும். குகைகளுக்குப் போவதோ அல்லது கோவிலில் குடியிருப்பதோ தேவையிருக்காது. ஏனெனில் இது ஒரு உள் செயல்முறை. எல்லா பரிமாணங்களும் செயல்படுத்தப்பட்டால் நீங்கள் ஆன்மீகத்தில் அற்புதமாகவும் அதேநேரத்தில் குடும்பத்திலும் சமூகத்திலும் சிறந்த மனிதராகவும் இருக்கமுடியும். மேலும் அது இன்றைய தேவையாகவும் இருக்கிறது, ஏனெனில் நீங்கள் எல்லோரும் செல்ல இப்போது முதலில் இருந்த அளவு காடுகளும் குகைகளும் இல்லை. மேலும் நீங்கள் அனைவரும் காட்டிற்குச் சென்றால் காட்டில் சுற்றுப்புறச் சூழ்நிலையும் கெட்டுவிடும் (சிரிக்கிறார்). யோகாவைத் தேடி நீங்கள் அனைவரும் காட்டிற்குப் புறப்பட்டு விட்டீர்கள் என்றால் நாங்கள் என்ன செய்வது?

பக்தி தவறானதா? பக்தி என்பது உங்கள் உணர்ச்சிகளின் இனிப்புப் பகுதி, அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் உணர்ச்சிகளின் இனிமையைப் பற்றி மட்டும் பேசவில்லை. உங்கள் உடல் இனிமையாக மாற வேண்டும். உங்கள் மனம் இனிமையாக மாற வேண்டும். உங்கள் உணர்ச்சிகளும் இனிமையாக மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் சக்தி நிலையும் இனிமையாக மாற வேண்டும். ஏனெனில் அதுவே ஒவ்வொன்றிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வகுப்பில் நான்கு பரிமாணங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

எனவேதான் ஈஷா யோகா என்பது காலையில் உட்கார்ந்து பயிற்சியை செய்து கொண்டிருப்பதல்ல. அந்த வகுப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன். 21 நிமிடப் பயிற்சியை சொல்லிக் கொடுப்பதற்காக உங்களுடன் 35 மணி நேரங்களுக்கும் மேலாக செலவிட்டிருக்கிறார்கள். ஏனெனில் எல்லா அம்சங்களும் ஒரே அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த ஏற்பாடுகள் இல்லாமல் நீங்கள் இந்தப் பயிற்சியை மட்டும் செய்தால், மெதுவாக நீங்கள் குகைக்குப் போக ஆரம்பித்து விடுவீர்கள். குகைக்குத்தான் போக வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் நீங்களே எதிர்பாராமல் அங்கே போய்ச் சேர்ந்தீர்கள் என்றால் அது உங்களுக்கு சரியான இடம் அல்ல, இல்லையா? அங்குதான் போக வேண்டும் என நீங்கள் நினைத்தால் அது சரிதான். ஆனால் நீங்கள் அங்கு போக விரும்பவில்லை, ஆனால் அங்கே போய் விழுந்துவிட்டீர்கள் என்றால் அது உங்களுக்கு சரியான இடமல்ல, இல்லையா?


 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1