இசைக்கு விளக்கம் கொடுத்த ஜென்குரு!
வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடாமல், வாழ்க்கையை அனுபவித்து ரசிக்காமல், வாழ்க்கையை ஆழ்ந்து உணராமல், வாழ்க்கை என்றால் என்ன என்று அர்த்தம் தேடினால் வறட்டுத் தத்துவம் தான் வரும்.
ஜென்னல் பகுதி 14
ஜென் குரு ஓர் இசைக் கருவியை மீட்டினார். இனிய சங்கீதம் வெளிப்பட்டது. “குருவே, நீங்கள் வாசித்த இசைக்கு விளக்கம் என்ன?” என்று கேட்டான் சீடன். குரு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. துவக்கத்தில் இருந்து அதே இசையை மறுபடி வாசித்துக் காட்டி, “இதுதான் விளக்கம்” என்றார்.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
Subscribe
வாழ்க்கை என்பதற்கும், உயிர் என்பதற்கும் நேரடியான அர்த்தத்தைத் தேடினால், கற்பனையில்தான் மனம் போகும்.
உயிருக்கு, கண்களால் பார்ப்பதற்கு உருவம் கிடையாது. கேட்பதற்கு ஒலி கிடையாது. ருசிப்பதற்குச் சுவை புரியாது. நுகர்வதற்கு வாசம் தெரியாது. நாமாக அதை இப்படி, அப்படி என்று கற்பனைதான் செய்துகொள்ள முடியும்.
உயிரை உணர வேண்டும் என்றால், அதனுடன் ஈடுபாடாக இருக்கவேண்டும். இசையும் அப்படித்தான். அதனுடன் முழுமையாக ஒன்றி ஈடுபாடாக மனம் இருந்தால், அது நமக்குப் புரியும். வார்த்தைகளில் அர்த்தம் தேடினால், மனம் இஷ்டத்துக்குக் கற்பனை செய்யும். இல்லாத அர்த்தங்களைக் கற்பிக்கும்.
வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடாமல், வாழ்க்கையை அனுபவித்து ரசிக்காமல், வாழ்க்கையை ஆழ்ந்து உணராமல், வாழ்க்கை என்றால் என்ன என்று அர்த்தம் தேடினால் வறட்டுத் தத்துவம் தான் வரும். பிரச்சனை என்னவென்றால், நாம் மனதின் கற்பனையில் (psychological reality) வாழ்கிறோம். மனிதன் எந்த ஒரு பாதிப்புக்கு உள்ளாவதற்கும் இதுதான் அடிப்படை. உங்கள் உயிர் மட்டுமல்ல; உலகத்தில் எல்லா உயிர்களும் பிரமாதமாகத்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அதற்கெல்லாம் அர்த்தம் தேடாமல், வாழ்க்கையை மிக ஆழமாக ரசித்தால் எல்லாமே என்னவென்று புரியும்.
இசையும் அப்படித்தான். அதில் ஒன்றிப்போய் ரசித்துக் கேட்கலாம். மற்றபடி அர்த்தம் என்னவென்று கேட்டால், தரிசாகிப் போன தத்துவம் ஒன்றைக் கற்பனையில் உருவாக்கிச் சொல்லவேண்டி வரும். அப்படிச் செயல்பட விரும்பாத ஜென் குரு, கருவியை மறுபடி இசைத்தார். கேட்பவனுக்குப் புரிந்துகொள்ள இன்னொரு வாய்ப்பு தந்தார். அவ்வளவுதான்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418