இறப்பும் இருப்பும் - குழப்பமான பதிலால் விளக்கிய ஜென்குரு!
உயிரை நீங்கள் முழுமையாக உணர்ந்து புரிந்து கொண்டால், மரணம் என்பதும் உயிரின் இன்னொரு பரிமாணம்தான் என்பதை உங்களால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியும். அதை விடுத்து மரணத்தை மட்டும் தனியாகப் புரிந்துகொள்ள முயன்றீர்கள் என்றால், சுவாரசியமான கதைகளில் தான் சிக்கிக்கொள்வீர்கள்.
ஜென்னல் பகுதி 47
தோலி என்ற ஜென் குருவிடம் யுவாங் என்றொரு சீடன் இருந்தான்.
குருவின் நண்பர்களில் ஒருவர் இறந்துவிட்டபோது, துக்கம் விசாரிக்க சீடனையும் அழைத்துப் போயிருந்தார், தோலி.
இறந்தவரின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர்கள் வெளியே வந்தனர்.
மடத்துக்குத் திரும்புகையில், யுவாங் குருவிடம் கேட்டான்: “உங்கள் நண்பர் எப்போது இறந்தார்?” தோலி சொன்னார். “அவன் இறந்துவிட்டான் என்று சொல்ல முடியாது”
யுவாங் திடுக்கிட்டான். "ஐயோ, அவரை எரிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனவே! அவர் உயிரோடு இருக்கிறார் என்றால் அவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டுமே!"
“அவன் உயிரோடு இருப்பதாகவும் சொல்ல முடியாது” என்றார், தோலி.
யுவாங் எரிச்சலானான்.
"அவர் இறந்ததாகவும் சொல்ல முடியாது. உயிரோடு இருப்பதாகவும் சொல்ல முடியாது என்றால் என்ன அர்த்தம் குருவே?"
"அது அப்படித்தான்..!"
"ஏன்?"
“சொல்ல முடியாது என்றால், சொல்ல முடியாது” என்றார் தோலி.
யுவாங் பொறுமையிழந்தான். “சீடனின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியாதவர் எதற்காக குருவாக இருக்க வேண்டும்?” என்று அவரைக் கன்னா, பின்னாவென்று தாக்கிவிட்டு யுவாங் விலகிச் சென்றுவிட்டான்.
Subscribe
பிற்பாடு தோலி உயிர் நீத்த போதும், அவன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தச் செல்லவில்லை. காலம் உருண்டது.
பிற்பாடு அதே ஊருக்கு வேறொரு ஜென் குரு வந்திருப்பதாக அறிந்தான். அவர் தங்கியிருந்த குடிலுக்குச் சென்றான். அந்த குரு யுவாங்கை அருகே அழைத்தார்.
“உன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயம் ஏதோ இருக்கிறது. சரியா?” என்று கேட்டார்.
யுவாங் அவரைப் பணிந்தான். "உண்மைதான், குருவே.. முன்பு நான் குருவாக நினைத்த தோலி என்னை ஏமாற்றிவிட்டார். நான் கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்லாமல் தவிர்த்தார்..."
"நீ என்ன கேட்டாய்? அவர் என்ன சொன்னார்?"
தோலியிடம் தான் கேட்ட கேள்வி பற்றி யுவாங் விளக்கிச் சொல்லி, “நீங்களாவது விளக்கம் கொடுப்பீர்களா?” என்று கேட்டான்.
“அவன் இறந்துவிட்டான் என்று சொல்ல முடியாது. அதேசமயம் அவன் உயிரோடு இருப்பதாகவும் சொல்ல முடியாது” என்று தோலி சொன்னதையே இந்த ஜென்குருவும் சொன்னார்.
ஆனால், இந்தமுறை யுவாங் அந்தக் கணமே ஞானமடைதான்.
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
ஜென் குரு தோலி சீடனுக்கு விளக்கம் கொடுக்காமல் தவிர்த்த காரணம் எளிமையானது. ‘உயிரையே புரிந்து கொள்ளாதவன், இறப்பை எப்படிப் புரிந்து கொள்வான்?’ என்பதே ஜென் குருவின் யோசனை.
இந்தக் கணம் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் உயிர்ப்பை நீங்கள் எந்த அளவு உணர்ந்திருக்கிறீர்கள்? அதையே முழுமையாக உணர முடியாதவராக இருக்கையில், நீங்கள் அனுபவித்திராத மரணம் என்பதை எப்படி உங்களுக்கு உணர்த்த முடியும்?
உண்மையில் மரணம் என்பது அறியாமையில் எழும் வெறும் பிரமைதான். உயிரை நீங்கள் முழுமையாக உணர்ந்து புரிந்து கொண்டால், மரணம் என்பதும் உயிரின் இன்னொரு பரிமாணம்தான் என்பதை உங்களால் உணர்ந்து புரிந்துகொள்ள முடியும். அதை விடுத்து மரணத்தை மட்டும் தனியாகப் புரிந்துகொள்ள முயன்றீர்கள் என்றால், சுவாரசியமான கதைகளில் தான் சிக்கிக்கொள்வீர்கள்.
மரணம் என்பது உங்களுக்கு நிகழாதவரை அதை உங்களால் உணர முடியாது. வேறு ஒருவருடைய மரணத்தை வைத்து நீங்கள் கற்பனையாகச் சில முடிவுகள் கொள்ள முடியுமே தவிர, அதை உண்மையாக உணர்ந்துவிட முடியாது.
மரணத்துக்கான அதே விதிமுறைதான் வாழ்க்கைக்கும். வேறு ஒருவருடைய வாழ்வை வைத்து வாழ்க்கையைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. நேரடியாக நீங்களே அனுபவித்துத்தான் அதை உணர முடியும். அனுபவம் என்று நான் சொல்வது உங்களுக்கு நேர்ந்த நிகழ்வுகளின் தொகுப்பை அல்ல. அனுபவம் என்பது வாழ்க்கையின் முழுமையை நேரடியாக உய்த்து உணர்வது.
வாழ்க்கையின் முழுமையை நீங்கள் கவனித்தால், அது மரணத்தையும் உள்ளடக்கியது என்பதை கவனிப்பீர்கள்.
ஒருவர் வாழ்கிறார் என்பதும், செத்துவிட்டார் என்பதும் சமூகத் தீர்மானங்களாகத்தான் இங்கு முக்கியம் பெறுகின்றன. ஆனால், பிரபஞ்சத்தின் கோணத்தில், வாழ்வது என்பதும், மரணம் என்பதும் முற்றிலும் வேறு அர்த்தம் கொண்டவை. ஜென் குருமார்கள் இந்தக் கோணத்தையே உண்மையான கோணம் என்று உணர்ந்திருப்பதால், சமூகத்தின் தீர்மானங்களை ஏற்கப் பிரியப்படுவதில்லை.
விழித்திருக்கிறீர்களா, கனவு நிலையில் இருக்கிறீர்களா என்பதே உங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை.
உண்மையையும், உண்மையற்றதையும் ஆழமாக அழுத்தமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்தக் கணத்தின் வாழ்வை முழுமையான கவனத்தோடு அணுக வேண்டும். ஏனென்றால், உண்மையான வாழ்வு என்பது நினைவுகளால் ஆன இறந்தகாலமும் அல்ல. கற்பனைகளால் கட்டப்பட்ட எதிர்காலமும் அல்ல. உண்மையான அனுபவம் தரும் இந்தக் கணம் மட்டும்தான் உயிர்ப்புடன் நீங்கள் இருக்கக் கூடிய ஒரே தருணம். இந்தக் கணத்தை நூறு சதவீத உள்ளுணர்வோடு நீங்கள் உணர்ந்துவிட்டால், வாழ்க்கையின் பிரமாண்டமான முழு வீச்சையும் அறிந்து கொண்டவர்களாகி விடுவீர்கள்.
இந்தக் கணத்தில்தான் அந்த அனுபவத்துக்கான வாயிற்கதவு திறக்கப்படக் காத்திருக்கிறது. அதை விடுத்து, கற்பனையாக மரணத்தைப் பற்றி பல்வேறு குழப்பங்கள் கொள்வதால், வாழ்வையும் புரிந்துகொள்ள முடியாது, மரணத்தையும் புரிந்துகொள்ள முடியாது. மரணத்தையும், வாழ்வையும் மட்டுமல்ல, முற்றிலுமான உண்மையை உணர்வதற்கு இந்தக் கணத்தைத் தவிர வேறு எந்தக் கணத்திலும் சாத்தியமேயில்லை.
இரண்டு குருமார்களும் இதையே சீடனுக்கு உணர்த்த முற்பட்டனர். முதல்முறை தவறவிட்ட சீடன் இரண்டாவது முறை உணர்ந்தான். ஞானம் பெற்றான்.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418