இறப்பு வீட்டுக்குச் சென்றால் குளிக்க வேண்டுமா?

நாம் மரணம் நிகழ்ந்த வீட்டிற்கு சென்றுவந்தால் குளிப்பது சம்பிரதாய வழக்கமாக உள்ளது. இது வெறும் சடங்கு மட்டும்தானா அல்லது இதன் பின்னால் சூட்சும விஷயங்கழ் மறைந்துள்ளதா? சத்குரு இந்த பதிவில் இதுகுறித்து பேசுகிறார்.
irappu-veetukku-sendral-kulikka-venduma-ishatamilblog-featureimg
 

question-image-tamilblogகேள்வி: மரணம் சம்பவித்துள்ள வீட்டிற்குச் சென்று வந்தால், குளிக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உள்ளது. ஏன்?

சத்குரு: நீங்கள் இருக்கும் இடத்தில் விளக்கு ஒன்று ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். இப்போது அந்த விளக்கு தானாகவே அணைந்து விட்டால் எப்படி இருக்கும்? கவனித்திருக்கிறீர்களா? சக்திநிலையில் ஒரு சூன்யம், வெறுமை ஏற்படும். அந்த சூன்யம் உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அங்கு கார்பன் மோனாக்சைடும் உருவாகும். ஆனால் அதைத் தவிர்த்து உங்கள் உடல்நிலையிலும் தாக்கம் இருக்கும். அதனால் நாம் இருக்கும் இடத்தில் விளக்கு அணைந்து விட்டால், அதை அவ்வாறே விட்டுவிடக் கூடாது. அதை மீண்டும் ஏற்றி வைக்கவேண்டும்.

ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்கு அணையும்போது, அது உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்த முடியுமெனில், உயிருடன் இருக்கும் மனிதர் இறக்கும்போது உங்கள் மீது தாக்கம் இருக்காது என்றா நினைக்கிறீர்கள்? நிச்சயம் இருக்கும்.

ஏதேதோ கருவிகள் இப்போது வந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் இந்த தாக்கத்தை அளவிடும் கருவிகளும் வந்துவிடும். சூட்சுமமான நிலையில் இருந்தால், இதை உங்கள் உடலிலேயே நீங்கள் உணரமுடியும். உங்கள் உணர்வுகளைப் பற்றி சொல்லவில்லை. உங்களுக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் இறந்தால், அது உணர்வளவில் உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம், அது வேறு. ஆனால் அந்தச் சூழ்நிலையில் இருக்கும்போது அதைத் தவிர்த்து, உங்கள் உடலிலும் தாக்கம் இருக்கும். அதனால்தான் குளிக்கவேண்டும் என்றார்கள்.

“குளிப்பது” என்றால் ஆற்றிலே குளிப்பது. இன்று ஆறுகள் இருக்கும் நிலையில் அவற்றில் குளிக்கமுடியாது என்பதால், வீட்டிலே குளிக்கிறோம். அது பரவாயில்லை. ஆனால் ஏன் ஆற்றிலே குளிக்கவேண்டும்? ஆற்றுநீர் உங்களைத் தொட்டுச் சென்றவாறு இருக்கும். ஓடும் நீரிலே கழுத்துவரை நீரில் சிறிது நேரம் இருந்தால், அது உங்களுக்குள் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும், புத்துணர்வு பிறக்கும்.

மயானம் செல்வதற்கு அல்லது வேறெங்கு செல்வதற்கும் உங்களுக்கு பயமில்லை என்று வைத்துக்கொள்வோம். காரணமின்றி சும்மா மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்றுவிட்டு வாருங்கள். உங்களுக்குள் எப்படி இருக்கும்?

பங்கேற்பாளர்கள்: துக்கமாக இருக்கும்...

சத்குரு: துக்கம் என்பது உணர்ச்சி. உணர்ச்சியைத் தாண்டி கவனித்தால், சும்மா அவ்விடத்திற்குள் சென்று வருவதாலேயே உங்கள் உடலில் ஒருவித மந்தம் உருவாகும்.

உயிருடன் இருப்பதற்கும் இறப்பதற்கும் இடையே வித்தியாசம் என்னவெனில், அங்கு “உயிரோட்டம்” இல்லாமல் போய்விட்டது. மரணம் நிகழ்ந்திருப்பது ஒரு மனிதனுக்கு என்பதால், இதை நீங்கள் உடலளவில் உணர முடிகிறது. ஒருவேளை இறந்தது ஒரு நாயாகவோ, வேறேதேனும் மிருகமாகவோ இருந்தால், உடலளவில் இதேவிதமான தாக்கம் உங்களுக்கு ஏற்படாது. இறந்தது உங்கள் நாயாக இருந்தால், உங்களுக்கு உணர்வளவில் பாதிப்பு இருக்கலாம். ஆனால், அதன் தாக்கம் உங்கள் உடலிலே இருக்காது.

ஏனென்றால், ஒரு மனிதனுடைய உயிருக்கும் நமக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. அதனால்தான், இறந்தவர் உங்களுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் சரி, இல்லை அந்நியமாக இருந்தாலும் சரி, இறந்தது மனிதனாக இருக்கும் பட்சத்தில், அங்கு ஒரு சூன்யம் உருவாகும். ஒரு மனிதன் இறந்துவிட்ட நாலரை மணிநேரத்திற்குள் அவர் உடலை எரித்துவிட வேண்டும் என்று வழங்கினர். ஏனெனில், இறந்த உடலை அப்படியே வைத்திருந்தால், அது வேறுவிதமான சூழ்நிலையை உருவாக்கும். அந்தச் சூழ்நிலையில் மக்கள் இருந்தால் அது அவர்களை பலவிதங்களில் பாதிக்கும். அதில் அடிப்படையான ஒன்று, உங்கள் உயிர்தன்மை குறைந்துபோவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதனால்தான், மரணம் நிகழ்ந்துள்ள இடத்திற்குச் சென்றுவந்தவுடன் குளிக்கச் சொன்னார்கள். அந்த நேரத்தில் நாம் உண்ணக்கூடாது. முதலில் குளித்து, உடலை சுத்தப்படுத்திக்கொண்ட பின்னரே மற்றது செய்யவேண்டும். அதுமட்டுமல்ல, இறந்த உடல் இருக்கும் இடத்தில் சரியானதொரு அதிர்வை உருவாக்கும் நோக்கத்தில், அங்கு மந்திரங்கள் தெரிந்தவர்கள் ஏதோ நான்கு மந்திரங்களை உச்சரிப்பார்கள் அல்லது வேறேதோ செய்வார்கள். அவ்விடத்தில் இருக்கும் அதிர்வுகளை மாற்றி அங்கு வரும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கே அங்கு தொடர்ந்து மந்திரங்கள் உச்சரிக்கவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது அது திரிபடைந்து விட்டது.

அந்த சூழ்நிலையில் உச்சரிப்பதற்கு என்று குறிப்பிட்ட மந்திரங்கள் இருந்தன. நாமும் அதுபோன்றதொரு மந்திரம் உருவாக்கி இருக்கிறோம். அந்த மந்திரத்தை ஒலிக்கச் செய்தால், அங்கு வருபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

அப்படியென்றால் பேய், பிசாசு எல்லாம் இருக்கிறதா? அதிலிருந்துதான் பாதுகாப்பு தேவையா? அப்படியில்லை. நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒருவித சக்தி செயல்படுகிறது. இங்கு கோவிலை ஒருவிதமாக பராமரிக்கிறோம். அதுபோல் நாம் இருக்கும் ஒவ்வொரு இடத்தையும் ஒருவிதமாக பராமரிக்கவேண்டும். நம் வீட்டையும், நம் தெருவையும், நாம் இருக்கும் ஒவ்வொரு இடத்தையுமே கோவில்போல் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் நம் நோக்கம்.

தமிழ்நாட்டிற்கு கோவிலை அறிகுறியாக வைத்ததற்கும் அதுதான் காரணம். இது உணர்ச்சிவசத்தால் எடுத்த முடிவல்ல, இன்னும் பல கோவில்கள் கட்டவேண்டும் என்றும் அல்ல, நம் நாடே கோவிலாக வேண்டும் என்பதுதான் நோக்கம். அப்படி ஒரு ஆழமான உணர்வோடு வளர்ந்தது இந்த கலாச்சாரம். எந்தவிதமான சக்தி சூழ்நிலையில் வாழ்ந்தால் ஒரு மனிதன் நன்றாக வாழ்வான், உயர்ந்த மனிதனாக வளர்வான் என்று விஞ்ஞானப்பூர்வமாக உணர்ந்து உருவாக்கிய சூழ்நிலை இது.

மரணம் என்பது தவறல்ல. எல்லோருமே ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். ஆனால், உயிருடன் இருப்பவர்கள் அதற்கு முயற்சி செய்யக்கூடாது. எப்படியும் ஒருநாள் இறக்கத்தான் போகிறீர்கள். அதற்கு உங்கள் முயற்சி தேவையே இல்லை. அதனால் இப்போது இறப்புடன் தொடர்பு ஏற்பட்டால், அதை நாம் கழுவிக் கொள்ளலாம்!

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1