ஹடயோகா... பிரபஞ்ச கதவுகளை திறக்கும் சாவி!
ஹடயோகா என்பது உடலுறுதியின் இலக்கணத்தையே மாற்றி எழுதுவதைப் பற்றிய தொழிற்நுட்பத்தை சத்குரு இங்கே விளக்குகிறார்!
ஹடயோகா என்பது உடலுறுதியின் இலக்கணத்தையே மாற்றி எழுதுவதைப் பற்றிய தொழிற்நுட்பத்தை சத்குரு இங்கே விளக்குகிறார்!
சத்குரு:
Subscribe
உறுதி என்பதன் அர்த்தத்தை மாற்றுவது ஹடயோகாவின் ஒரு அடிப்படை. பொதுவாக, பலம் அல்லது உறுதி என்றால் எதிர்க்கும் திறன் என்றே மக்கள் புரிந்து கொள்கிறார்கள். திடமாக எதிர்க்க, பலமாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். யோகாவில், உறுதி என்றால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பது, எதற்கும் எதிர்செயல் செய்யாமல் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வது. ஹடயோகா என்பது மற்றொரு பரிமாணத்தைச் சேர்ந்த உறுதியை உங்களுக்குள் உருவாக்குகிறது. இது இறுக்கமும் எதிர்ப்பும் கொண்டதல்ல, வளைந்து கொடுக்கும் தன்மையும், ஏற்றுக்கொள்ளும் தன்மையும் கொண்டது.
"யமா நியமா" எனும் அடிப்படை விதிகளுள் ஒரு முக்கிய அம்சமாக இருப்பது ஈஷ்வர பிராநித்யானா, அதாவது உங்களுக்கு அப்பாற்பட்ட புத்திசாலித்தனம் ஒன்று உள்ளது என்பதை எப்போதும் அங்கீகரிப்பது.
உங்கள் விதியை நீங்கள் இயக்குங்கள்
பெரும்பாலான மனிதர்களுக்கு, அவர்களுடைய உடல், மனம், உணர்ச்சிகள் எல்லாம் ஏதோவொரு நாடகத்தினை நடத்திக்கொண்டே இருக்கிறது. இதில் உங்கள் மனப்பரப்பு, கிரகித்துக்கொள்ளும் தன்மையும் அனுபவமும் உள்ளடங்கும்.
யோக செயல்முறை மூலம், நீங்கள் எல்லாவற்றையும் எப்படிப் பார்க்கிறீர்கள், எவ்வளவு ஆழமாகப் பார்க்கிறீர்கள், எவ்வளவு உள்ளார அல்லது மேலோட்டமாக வாழ்க்கையை உணர்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும். மேலோட்டமாக உடலை முறுக்குவதாலும், வளைப்பதாலும் இது வராது. இதற்கு அளப்பரிய ஈடுபாடு தேவை.
முழு ஈடுபாடு
விடியற்காலையில் யோகா செய்வது இனிமையாக இல்லாது இருக்கலாம், ஆனால் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்துப் பார்க்காமல் முழுமையாக ஈடுபடுவதே இதற்கான விடை. வேப்பிலை உருண்டை உங்களுக்குப் பிடித்ததாக இல்லாவிட்டாலும், அதில் ஈடுபட்டு, அதனை உங்களுக்குள் ஒரு பாகமாகச் செய்வது, ஈடுபாட்டைக் கொண்டு வருவதற்கு அடிப்படையானது. உங்கள் ஈடுபாடு ஆழமாக ஆக, உங்கள் அனுபவமும் ஆழமாகிறது. தேவையான ஈடுபாடு காட்டினால், பல அடுக்குகள் கொண்ட பிரபஞ்சத்தின் கதவுகள், ஒவ்வொன்றாகத் திறந்துகொள்ளும்.
பாகுபாடற்ற ஈடுபாட்டினை உருவாக்குங்கள். அதாவது, என்ன தேவையோ அதை அப்படியே செய்வது. உங்களுக்குப் பிடித்ததை அதிகமாகச் செய்து, பிடிக்காததைக் குறைவாகச் செய்வதல்ல. இப்படி வாழ்கையில், வாழ்க்கை உங்கள் மீது ஒரு சிறிய கீறலைக்கூட ஏற்படுத்த முடியாது.
உங்கள் வாழ்க்கைக்குள் ஒருவித வைராக்கியத்தைக் கொண்டு வருவது பற்றிய ஓர் அம்சம், ஹடயோகா. இந்தியக் கலாச்சாரம் முழுவதும் வைராக்கியத்தில் இருந்தே வளர்ந்துள்ளது. இன்று இது அதிவேகமாக மாறிவருகிறது.