ஜென்னல் பகுதி 16

குரு சீடனை அழைத்தார், “எனக்கு வயதாகிவிட்டது. எனது வாரிசாக உன்னை அறிவிக்கிறேன். அதற்கு அடையாளமாக இந்தப் புத்தகத்தை உன்னிடம் கொடுக்கிறேன்!” என்றார்.

“குருவே, உங்களிடமிருந்து இதுவரை பெற்றவையே எனக்குப் போதும். புத்தகம் தேவையில்லை!”

“மறுக்காதே. தலைமுறை, தலைமுறையாக குரு தன் வாரிசாகக் கருதும் சீடனுக்கு வழங்கும் புனிதப் புத்தகம் இது.”

குரு வற்புறுத்தியதால், சீடன் புத்தகத்தை அவரிடம் இருந்து வாங்கினான். நெருப்பில் எறிந்தான்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

ஆன்மீகத்தின் அடிப்படை இந்த உயிர் பற்றியது. இதைப் பற்றி கடவுளே சொன்னது என்று நீங்கள் நம்பக் கூடியதானாலும், அந்தப் புத்தகத்தைப் படித்து, உயிர் பற்றி உணர்ந்துவிட முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.
படைத்தவனே உருவாக்கிய புத்தகம் நீங்கள். அதைப் புரிந்துகொள்ளாமல், வேறு ஏதோ புத்தகத்தை எதற்காக நாடிப் போக வேண்டும்?

புத்தகத்தில் இதைச் சொல்கிறேனே, இதையே ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகப் புரிந்து கொள்வார்கள். ஆயிரம் விதமான தத்துவங்களை உருவாக்கிக் கொள்வார்கள். எதைக் கொடுத்தாலும், அதை அதன் போக்குக்கு ஏற்றவாறு சிதைத்துப் புரிந்துகொள்ளும் தன்மை, மனிதனின் மனதில் மேலோங்கியிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எல்லாவிதக் குழப்பமும் வந்துவிட்டது.

புத்தகம் படிப்பது ஒரு உத்வேகத்துக்காகத்தான். யாரோ ஒரு மகான் பற்றி, அவர் வாழ்ந்த வாழ்க்கை பற்றி, அவர் எப்படி எல்லாம் இருந்தார் என்பது பற்றிப் படிக்கையில் நம் வாழ்க்கையும் அப்படி அமையவேண்டும் என்று நமக்கு ஊக்கம் வரலாம். ஆன்மீகப் பாதையில் பயணம் செய்ய உத்வேகம் வரலாம். மற்றபடி, புத்தகம் மூலமாகச் சொல்லிக் கொடுக்கும் தன்மையல்ல ஆன்மீகம்.

படைத்தவனே உருவாக்கிய புத்தகம் நீங்கள். அதைப் புரிந்துகொள்ளாமல், வேறு ஏதோ புத்தகத்தை எதற்காக நாடிப் போக வேண்டும்?

சிஷ்யனுக்குப் புரிந்தது அந்த குருவுக்குப் புரியவில்லை. ஆன்மீகம் தொடர்பான எல்லாப் புத்தகங்களையும் அந்தச் சீடனைப்போல் எரித்துவிட்டால், தேவை அற்ற போதனைகள் குழப்பாது. உயிரை உணர்வதற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது!


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418