குரு-சிஷ்ய உறவு அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடருமா?

வாழ்வு மற்றும் மரணத்தையும் தாண்டி சில உறவுகள் நீடிக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள். சென்ற பிறவியில் ஒரு குருவிற்கும் சீடருக்கும் இடையில் இருந்த உறவு, பல பிறவிகளுக்கும் தொடருமா?
 

Question:வாழ்வு மற்றும் மரணத்தையும் தாண்டி சில உறவுகள் நீடிக்கும் என்று நீங்கள் சொன்னீர்கள். சென்ற பிறவியில் ஒரு குருவிற்கும் சீடருக்கும் இடையில் இருந்த உறவு, பல பிறவிகளுக்கும் தொடருமா?

சத்குரு:

ஆமாம், நிச்சயமாக. பொதுவாக, இந்த ஒரு உறவுதான் பல பிறவிகளுக்கும் தொடரும். குருவின் பணி தொடர்கிறது. மிகவும் ஆழமாக அன்பு செலுத்தியிருந்தாலும், கணவன்-மனைவி, காதலர்களின் உறவு மீண்டும் அடுத்த பிறவிகளில் தொடர்வது என்பது மிகவும் அரிதானது. பொதுவாக, குரு-சிஷ்ய உறவுதான் பல பிறவிகளுக்கும் தொடரும். பிற உறவுகள் அனைத்தும் ஒரு தேவைக்காகவே ஏற்படுகிறது. அந்தத் தேவை பூர்த்தியாகிவிட்டால், அந்த உறவு முடிந்துவிடுகிறது.

சக்திக்கு எப்போதும் மறுபிறப்புகள் கிடையாது. உடல் மட்டுமே மறுபிறப்பு எடுக்கிறது. சக்தி நீட்சி அடைந்துவிட்டால், பிறகு அந்த சக்தி கரைந்துபோகும் வரை உறவும் தொடர்கிறது.

பிறவிகளுக்கும் அப்பால் அல்லது பிறவிகளின் ஊடே உறவுகள் தொடரும் சாத்தியம், அந்த உறவு உடல்தன்மையின் எல்லையைக் கடந்து நின்றால் மட்டுமே நிகழும். ‘உடல் தன்மை’ என்று நான் சொல்லும்போது, மனம் மற்றும் உணர்ச்சி அளவில் நிகழ்பவற்றையும் சேர்த்துதான் சொல்கிறேன். பொதுவாக குரு-சிஷ்ய உறவுதான் இப்படி உடல்தன்மையின் எல்லையையும் கடந்து நிற்கும். இப்படி நிகழ்வது ஏனென்றால், குரு-சிஷ்ய உறவுதான் எப்போதைக்குமான உறவாக இருக்கிறது. குருவின் இருப்பைப் பற்றி சிஷ்யர் ஏதும் அறிந்திருக்காவிட்டாலும் கூட குருவின் வேலை சிஷ்யரின் இருப்பின் மேல் தொடர்கிறது. இந்த உறவு எப்போதும் சக்தியின் அடிப்படையில்தான் இருக்கிறது. அது உணர்ச்சி ரீதியானதோ, மனம் ரீதியானதோ அல்லது உடல் ரீதியானதோ அல்ல.

சக்திரீதியான உறவு ஏற்பட்டுவிட்டால், பிறகு அந்த சக்திநிலை ஒரே நீட்சியாக அமைந்துவிடுகிறது. மீண்டும் பிறவிகள் நிகழ்ந்தாலும், சம்பந்தப்பட்ட உடல்கள் மாறிவிட்டதா அல்லது அதே உடல்தானா என்பதைக் கூட சக்திநிலை நீட்சி உணர்வதில்லை. அந்த சக்தி கரைந்து முடியும்வரை அந்த உறவு நீடிக்கிறது. சக்திக்கு எப்போதும் மறுபிறப்புகள் கிடையாது. உடல் மட்டுமே மறுபிறப்பு எடுக்கிறது. சக்தி நீட்சி அடைந்துவிட்டால், பிறகு அந்த சக்தி கரைந்துபோகும் வரை உறவும் தொடர்கிறது. எனவே, நிச்சயமாக, இந்த உறவுதான் தொடர்ந்து நீடிக்கிறது.