ஞானமடைந்த சீடனுக்கு ஜென்மடத்தில் என்ன கிடைத்தது?
உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கான ஏக்கம் உங்களுக்கு வரும். தெரியாதவை, தெரிவதற்கான சாத்தியங்களும் உருவாகும். ஆனால் எனக்குத் தெரியாது என்ற உண்மையையே நாம், நமது யூகங்களைக் கொண்டு அடித்து நொறுக்கிவிட்டோம்.
 
 

ஜென்னல் பகுதி 49

ஆறாவது ஜென் பிரிவைச் சேர்ந்த சீடன் ஒருவன் காக்ஸி என்னும் மடாலயத்தில் சேர்ந்து குருவின் வழிகாட்டலால் ஞானம் அடைந்தான்.

குரு அவனை உலகத்தைச் சுற்றி வரப் பணித்தார். அவனும் குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு பயணம் மேற்கொண்டான்.

ஓர் ஊரில் வேறொரு மடாலயத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் அவனைச் சந்தித்து, "எங்கேயிருந்து வருகிறாய்?" என்று கேட்டான். "ஆறாவது பிரிவைச் சேர்ந்த காக்ஸி மடாலயத்திலிருந்து வருகிறேன்.." என்றான் ஞானமடைந்த சீடன்.

"அந்த மடாலயத்தில் உனக்கு என்ன கிடைத்தது?"

"நான் காக்ஸியில் சேர்வதற்கு முன் என்னிடத்தில் இல்லாதது எதுவும் அங்கு இல்லை.." என்றான் சீடன்.

"அப்புறம் எதற்காக அங்கே போனாய்?" என்று கேட்டான் மாணவன்.

"அங்கே போகாவிட்டால், என்னிடம் இல்லாதது எதுவும் அங்கே இல்லை என்பதை எப்படி அறிந்திருப்பேன்?"

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

ஞானம் என்பது ஏதோ ஒன்றைக் கைப்பற்றுவதல்ல. ஓர் இலக்கை எட்டிப் பிடிப்பதல்ல. மலை முகட்டை சென்றடைவதல்ல. அது தன்னிலை உணர்தல், அவ்வளவுதான்.

உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கான ஏக்கம் உங்களுக்கு வரும். தெரியாதவை, தெரிவதற்கான சாத்தியங்களும் உருவாகும். ஆனால் எனக்குத் தெரியாது என்ற உண்மையையே நாம், நமது யூகங்களைக் கொண்டு அடித்து நொறுக்கிவிட்டோம்.

ஏற்கெனவே இங்கே உள்ள உண்மையை உய்த்து உணர்தலைத்தான் (REALISATION) ஞானம் என்கிறோம். இத்தனை நாட்களாக உங்கள் கண்முன் இருக்கும் ஒன்றை நீங்கள் கவனிக்கத் தவறியிருந்து திடீரென்று கவனிப்பது போல்தான் அது.

பொய்யை உருவாக்கலாம். உண்மையைப் புதிதாக உருவாக்க முடியாது. ஏற்கெனவே உள்ள ஒன்றைத்தான் நீங்கள் உய்த்து உணர முடியும். அப்படி உணர்வதே முக்தி நிலை.

ஞானம் என்பதை உணர்வதற்கே அதை முற்றிலும் உணர்ந்த ஒருவரிடம் நீங்கள் போக வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டு உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொள்வீர்கள்.

அப்படியானால் 'ஞானம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது' என்பது முதலில் தெரியவேண்டும்.

இதுதான் பிரச்சினை. மக்கள் தங்களுக்குத் தெரியவில்லை என்பதையே புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான், என்னுடைய சிறு வயதுப் பிரச்சினையே!

கையில் ஒரு இலையை எடுத்தேனென்றால் மணிக்கணக்காக அதையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். வீட்டில் குடிப்பதற்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தால், குடிக்காமல் அதையே மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். படுக்கையில் உட்கார்ந்து முழு இரவும் இருளையே உற்று நோக்கியபடி அமர்ந்திருப்பேன். இது, அது என்றில்லாமல் எப்போதும் ஏதாவது ஒன்றை உற்று நோக்கியபடி இருப்பேன்.

என்னைச் சுற்றியிருந்த மக்கள் எனக்கு ஏதோ மனக்கோளாறு என்று எண்ணினார்கள். சிலர் என்னை ஏதோ காற்று, கருப்பு அடித்து விட்டது என்றும் நினைத்தார்கள்.

ஆனால் உண்மையில் எனக்கு ஒன்றும் தெரியாததால் பார்வையில் தென்பட்டவற்றையெல்லாம் உற்று நோக்கியபடி இருந்தேன். அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை.

என்னைச் சுற்றி இருந்தவர்களோ எல்லாம் தெரிந்தவர்களாகத் தோன்றினார்கள். எல்லாம் தெரிந்திருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பது போலவும் தோன்றியது.

அவர்களுக்கு இங்கே இருப்பவை எல்லாம் என்ன என்பதும் தெரிந்திருந்தது. கண்ணுக்குத் தெரியாமல் இருப்பவை எல்லாம் என்னவென்பதும் தெரிந்திருந்தது.

அவர்களுக்குக் கடவுளைத் தெரிந்திருந்தது. சொர்க்கம் என்றால் என்னவென்று தெரிந்திருந்தது. ஈரேழு உலகங்களும் தெரிந்திருந்தன. மக்கள் தாங்கள் கடவுளோடு பேசியதாகவும், கடவுள் தங்களிடம் பேசியதாகவும் சொல்லிக் கொள்வதை நிறையக் கேட்டிருக்கிறேன்.

மக்கள் கடவுளைச் சந்தித்து, அவருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி முடித்து வந்த பிறகு அவர்களுக்கு என்ன நேர்கிறது, அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். எனவே பல சமயங்களில் ஆலயங்களுக்கு முன்னால் அமர்ந்து அங்கு வருவோர் போவோரைத் தீவிரமாகக் கவனித்துக் கொண்டிருப்பேன்.

ஆலயங்களிலிருந்து வெளிப்பட்ட மக்களோ அடுத்தவரைப் பற்றி புறம் பேசுவதிலும், வதந்திகளைப் பரப்புவதிலும், அவற்றைக் கேட்பதிலுமே ஆவல் உற்றவர்களாகக் காணப்பட்டார்கள்.

கோயிலுக்குச் சென்றால் உங்களது காலணிகள் வேறு ஒருவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டு போய்விடுவது வழக்கமாக நிகழும் ஒன்றுதானே! அது போல் தங்கள் காலணிகள் பறி போய்விட்டதை அறிந்தவர்கள் கடவுளையே கன்னா பின்னாவென்று ஏசுவதையும் பார்த்திருக்கிறேன்.

ஆலயங்களில் இருந்து வெளியே வருபவர்களைவிட, ஹோட்டல்களிலிருந்து வெளிப்படுபவர்களின் முகங்களில் நிறைய ஆனந்தம் தாண்டவமாடியதைக் கவனித்திருக்கிறேன்.

கடவுளா, தோசையா என்று பார்த்தால் தோசையே வென்று கொண்டிருந்தது! இது சரியில்லையே, இதில் ஏதோ பெரிய தவறு இருக்கிறதே! என்று தோன்றும்.

அந்தக் காலகட்டத்தில் எது தெய்வீகம் என்று எனக்குத் தெரியாது. தெய்வீகத்தின் இயல்பு என்ன என்பதும் தெரியாது. ஆனாலும் தெய்வீகத்தின் மூலம் எதுவோ, அது தோசையைக் காட்டிலும் பிரமாண்டமானது என்பதில் மட்டும் நிச்சயமாக இருந்தேன். எனக்கும் தோசை பிடிக்கும். ஆனால் தெய்வீகம் என்பது தோசையைவிட உன்னதமான விஷயம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.

ஆனால் மக்களுக்குக் கடவுளைக் காட்டிலும் தோசைதானே ஆனந்தத்தை அளிக்கிறது!

உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொள்ள எனக்குச் சில காலம் தேவைப்பட்டது.

அவர்கள் ஏதேதோ யூகங்கள் செய்து கொண்டார்கள். அந்த யூகங்களே அவர்களுக்குத் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளித்தன. அந்த யூகங்களை மட்டுமே கொண்டு திருப்தி கொள்ள நான் தயாராக இல்லை.

நீங்கள் யூகங்களை மட்டுமே கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய யூகங்கள், மூட நம்பிக்கைகள் காரணமாக உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதைக்கூட நீங்கள் ஒத்துக்கொள்ளத் தயாராய் இல்லை.

உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கான ஏக்கம் உங்களுக்கு வரும். தெரியாதவை, தெரிவதற்கான சாத்தியங்களும் உருவாகும். ஆனால் எனக்குத் தெரியாது என்ற உண்மையையே நாம், நமது யூகங்களைக் கொண்டு அடித்து நொறுக்கிவிட்டோம்.

ஒரு நல்ல குருவிடம் போவது புதிதாக ஒன்றைப் பெறுவதற்காக அல்ல. உங்களிடமே இருந்த போதிலும், நீங்கள் கவனிக்கத் தவறியதை அவர் உதவியுடன் உணர்ந்து கொள்வதற்குத்தான். எனக்கு சாத்தியமானது, உங்களுக்கும் சாத்தியம்தான். உங்கள் பக்கத்தில் இருப்பவருக்கும் சாத்தியம்தான். உங்கள் எதிரிக்கும் சாத்தியம்தான். யாரும் எதையும் தேடிப் போய் புதிதாகப் பெற்றுத்தான் மேன்மையான நிலையை எய்ய முடியும் என்பதில்லை.

அப்படித்தான் அந்த சீடன் தன்னிடம் இல்லாதது என்று எதுவும் இல்லை என்பதை அந்த ஜென்மடம் மூலம் உணர்ந்தான்.

நீ நீயாகவே இருந்தால் ஜென்னில் இருக்கிறாய் என்று பொருள்.


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1