எது சரியான முடிவு என்று தெரிந்துகொள்வது எப்படி?

எதை தேர்ந்தெடுப்பது என்ற விழிப்பு உணர்வு இல்லாதபோது, கையில் உள்ள வேலையில் முழு மனதோடு ஈடுபடுங்கள்.
எது சரியான முடிவு என்று தெரிந்துகொள்வது எப்படி?, Ethu sariyana mudivu endru therinthukolvathu eppadi?
 

Question:நான் தேர்ந்தெடுத்த விஷயங்களை, நானே பல சமயம் மாற்றிக் கொண்டிருக்கிறேன். உதாரணத்திற்கு, சங்கீதம் பயில வேண்டும் என்று விருப்பம் ஏற்படுகிறது, சில சமயம் படிப்பை தொடர வேண்டும் எனத் தோன்றுகிறது. எது சரியான முடிவு என்று தெரிந்துகொள்வது எப்படி?

சத்குரு:

பெரிய சங்கீத வித்வானாக ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் ஆக முடியாவிட்டால், ஒரு சங்கீத வித்வானின் வீட்டில் சுத்தம் செய்யும் வேலை பார்க்கலாம்; சங்கீதம் சம்பந்தமான பொருட்கள் விற்கும் கடையில் வேலை செய்யலாம்; குறைந்தபட்சம், ஒரு சங்கீதக் கருவியையாவது சுத்தம் செய்யலாம். சங்கீதமோ படிப்போ, உங்கள் உள்ளுணர்வினால் அல்லாமல் சமுதாய உந்துதலினால் தேர்ந்தெடுத்தால், எதில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தேடினால், அது தேர்ந்து எடுப்பது அல்ல.

எதை தேர்ந்தெடுப்பது என்ற விழிப்பு உணர்வு இல்லாதபோது, கையில் உள்ள வேலையில் முழு மனதோடு ஈடுபடுங்கள்.

எதை தேர்ந்தெடுப்பது என்ற விழிப்பு உணர்வு இல்லாதபோது, கையில் உள்ள வேலையில் முழு மனதோடு ஈடுபடுங்கள். கடையைத் துடைப்பதில் முழு மனதோடு ஈடுபட்டால், உங்கள் உள்ளுணர்வு மலர்ந்து உங்களுக்கு உகந்த பாதையில் அழைத்துச் செல்லும். கையில் இருக்கும் வேலையில் முழுவீச்சோடு, வேறு சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் 100% உங்களையே அர்ப்பணியுங்கள்.

மக்கள், தாம் எதிலாவது சிக்கிக்கொள்வோமோ என்ற பயத்திலேயே உழல்கிறார்கள். சிக்கலில் மாட்டிக்கொள்வது பற்றி அல்ல கேள்வி, எதில் ஈடுபாடு கொள்கிறீர்கள் என்பதுதான். எது என்று புரியாத பட்சத்தில், என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.

மக்கள் சாப்பிடுவதிலோ, மூச்சு விடுவதிலோ, முழிப்போ, தூக்கமோ எதையுமே முழு ஈடுபாட்டுடன் செய்வதில்லை. எதையுமே அரைகுறையாக செய்வதால்தான் தப்பான செயலாக தெரிகிறது. முழு ஈடுபாட்டுடன் இருந்தால், வாழ்க்கையே வேண்டியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும், அது எப்போதும் தவறாது.