எத்தனை சுவாசத்தில் உங்கள் வாழ்க்கை உள்ளது?
நமது நினைவுகளில் நேற்று இருக்கும். அதற்கு முந்தின தினங்கள் இருக்கும். ஏன் சில வருடங்களே கூட இருக்கும். அதே போல் நமது கற்பனையில் நாளை இருக்கும். அதற்கு அடுத்த நாள் இருக்கும். அடுத்த சில வருடங்கள் கூட இருக்கும். ஆனால், இவை எல்லாமே கற்பனையான உணர்வுகள்.
ஜென்னல் பகுதி 34
காடு மேடுகளை எல்லாம் கடந்து வந்த தொலைதூர நடைப் பயணத்தினால் அந்த ஜென் சீடர்கள் அலுத்துக் களைத்திருந்தனர். ஒரு திருப்பத்தில் திடீரென்று ஒரு சோலை தென்பட்டது. அடர்ந்த மரங்களுக்கு நடுவில் நீர் நிறைந்த தடாகம் ஒன்று இருந்தது.
தெளிந்த நீர் அவர்கள் தாகத்தைத் தணித்தது. மரங்களின் நிழல் அவர்களது உடற்சோர்வைக் குறைத்தது. சில்லென்று வீசிய காற்று அவர்களுக்கு ஆறுதல் அளித்து ஆசுவாசப்படுத்தியது. ஆனாலும் அவர்களது உள்ளங்களில் நிறைந்திருந்த துயரம் குறையவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அவர்கள், ஐம்பது வயதே நிறைந்திருந்த சக துறவி ஒருவரைப் பறி கொடுத்திருந்தார்கள். இறந்துபோன துறவியும் புத்தரின் சீடர்களில் ஒருவர்தான். அமைதியான முகம். எந்நேரமும் புன்னகை தவழும் இதழ்கள். ஒரு நிறைகுடமாக வளைய வந்து கொண்டிருந்த அவர் இன்று தம்மிடையே இல்லை என்ற உண்மை மற்ற சீடர்களின் முகங்களில் இருந்து சிரிப்பைப் பறித்திருந்தது.
அமைதி தவழும் வதனத்துடன், அவர்களிடையே அமர்ந்திருந்த புத்த பகவானின் குரல் அவர்களிடையே நிலவிய கனத்த மௌனத்தை திடீரெனக் கலைத்தது. அவர் தம் சீடர்களை நோக்கி, 'ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம்?' என்று கேட்டார்.
எதற்கு அவர் இப்படியொரு சாதாரண கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சாக்கிய முனி பதிலுக்குக் காத்திருந்தார். 'எழுபது ஆண்டுகள்' என்றார் ஒரு சீடர். 'தவறு!' என்றார் புத்தர். 'அறுபது ஆண்டுகள்' என்றார் மற்றொரு சீடர். 'தவறு!' என்றார் புத்தர். 'ஐம்பது ஆண்டுகள்' என்றார் இன்னொரு சீடர், இறந்து போன சக துறவியின் வயதை நினைவில் கொண்டு! 'தவறு' என்றார் புத்தர்.
Subscribe
இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே! மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன, என்று திகைத்தார்கள் சீடர்கள்.
“நீங்கள் சொன்ன பதில்கள் எல்லாமே தவறு..” என்றார், புத்தர். “வாழ்க்கை என்பது ஒரு சுவாச அளவு தான்”
சத்குருவின் விளக்கம்:
(தமிழில் சுபா)
சுவாசம் உள்ளே வருகிறது, வெளியே போகிறது. மீண்டும் உள்ளே வருகிறது. வெளியே போகிறது. வெளியே போன சுவாசம் திரும்ப உள்ளே வராமல் நின்று விட்டால், முடிந்தது கதை. உயிர் என்பது அந்த அளவு நிலையற்றது.
நமது நினைவுகளில் நேற்று இருக்கும். அதற்கு முந்தின தினங்கள் இருக்கும். ஏன் சில வருடங்களே கூட இருக்கும். அதே போல் நமது கற்பனையில் நாளை இருக்கும். அதற்கு அடுத்த நாள் இருக்கும். அடுத்த சில வருடங்கள் கூட இருக்கும். ஆனால், இவை எல்லாமே கற்பனையான உணர்வுகள்.
கர்நாடகாவில் “இந்த சாலை எங்கே போகிறது?” என்று கேட்டால், “இது எங்கேயும் போகாது. நீங்கள் தான் எங்கு வேண்டுமோ அங்கு போக வேண்டும்” என்பார்கள். மனதின் கற்பனை அது போலத் தான். மனதளவில் நீங்கள் எத்தனை தொலைவுக்கு வேண்டுமானாலும் பயணம் போகலாம். சொர்க்கம் வரை கூட போகலாம். ஆனால், அடுத்த கணம் நிஜத்தைச் சந்திக்கையில் இங்கே வந்து விழுந்து விடுவீர்கள். இப்படி மனதால் உருவாக்கிக் கொள்வது மனதின் கற்பனைச் செயல். உயிரின் செயல் அல்ல.
உண்மையில் நமது அனுபவத்தில் இருப்பது எது? இப்போதைய சுவாசம் உள்ளே போய் வெளியே வருகிறதே, அந்த நேர அளவுக்குத் தான், எதுவும் அனுபவத்தில் உணரக் கூடியதாக இருக்கிறது. அதாவது உயிர்த்தன்மையுடன் கூடிய அனுபவம் என்பது ஒரு சுவாசம் அளவுக்குத் தான்.
ஈஷா பள்ளியில் ஒரு எட்டு வயது சிறுவன் என்னிடம் கேட்டான். “சத்குரு, வாழ்க்கை என்பது கனவா? நிஜமா?”
நான் சொன்னேன்: “இந்த வாழ்க்கை கனவு தான். ஆனால், இந்தக் கனவு நிஜம்”
நினைவுகள் என்பது இறந்த காலத்தை உயிரோடு வைத்துக்கொள்ள முயற்சி செய்வது. எதிர்காலம் பற்றிய கற்பனை என்பது பிறக்காத ஒன்றுக்கு உயிரூட்ட நினைப்பது. இறந்ததுக்கோ, பிறக்காததுக்கோ எப்படி உண்மையில் உயிரூட்ட முடியும்? உயிரின் அனுபவம் தான் உண்மையான வாழ்க்கை. மற்றபடி ஐம்பது வருடம், அறுபது வருடம் என்பதெல்லாம் நீங்கள் போடும் கற்பனைக் கணக்கு. கற்பனையில் மிகவும் சிக்கினால், உண்மையை விட்டு வெகு தொலைவு விலகிப் போய் விடுவீர்கள்.
பத்து வருடத்துக்கு முன்னால் நடந்தது இப்போது வலிக்கிறது. பத்து நாட்களுக்கு அப்புறம் நடக்கப் போவது இப்போது அச்சுறுத்துகிறது. இப்படி உயிரோட்டம் இல்லாதவற்றுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி நடக்கிறது. அந்த முயற்சியில், இப்போது உயிரோட்டத்துடன் இருக்க வேண்டியது உயிரற்றுப் போய் விடுகிறது. உலகத்தில் இல்லாத ஒன்று உங்களுக்கு பாதிப்பைக் கொடுக்கிறது என்றால், அதற்கு என்ன அர்த்தம்? மனநல மருத்துவரிடம் நீங்கள் செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
சுவாசம் என்பது வெறும் மூச்சுக் காற்று மட்டும் இல்லை. அதுதான் நீங்கள் உண்மையாக உயிர்ப்புடன் இருக்கும் ஆயுள். ஒரு மூச்சு அளவு தான் வாழ்க்கை.
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418