குழந்தைப் பருவத்திலிருந்தே, இதைச் செய், அதைச் செய்யாதே, என்று பல போதனைகளை நமக்கு கொடுத்து, சில பழக்கவழக்கங்களை திணித்திருப்பார்கள். அது சரி, இதில் எந்த பழக்கம் நல்ல பழக்கம், எந்த பழக்கம் கெட்ட பழக்கம்? சத்குருவிடம் கேட்கலாம்...

சத்குரு:

நீங்கள் பிறந்த தினத்திலிருந்தே, 'கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆகாதே, நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்' என்று அடிக்கடி போதனை செய்திருப்பார்கள்.

உங்கள் புத்திசாலித்தனத்தையும், விழிப்பு உணர்வையும் பயன்படுத்தாமல், செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வதற்கு நீங்கள் என்ன இயந்திரமா?

என்னைக் கேட்டால், அனுபவித்துச் செய்யாமல் பழக்கத்தினால் எதைச் செய்தாலும் அது கெட்டதுதான்!

காலை அலாரம் வைத்து எழுந்திருப்பீர்கள். பரபரவென்று தினப்படி வேலைகளைச் செய்வீர்கள். குளித்து முடித்து டிபனைத் திணித்துக் கொண்டு, ஸ்கூட்டரிலோ, காரிலோ, பஸ்ஸிலோ அலுவலகம் போய்ச் சேர்வீர்கள். மாலை வரை அங்கேயும் பழகிப்போன விஷயங்கள். வேலை முடிந்து வீடு திரும்பி, சாப்பிட்டு, தூங்கி, மறுபடி எழுந்து...

பூட்டப்பட்ட மாடு, வண்டியை இழுத்துக் கொண்டு தினமும் ஒரே இடத்துக்குப் போய் திரும்புவது போல், நாற்பது ஐம்பது வருடங்களை இப்படியே தேய்த்துவிட்டு அடங்கிப் போவதற்குப் பெயர் வாழ்க்கையா?

ஒரு பெரிய இயந்திரத்தில் பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பல்சக்கரங்களில் ஒன்றுபோல் ஆவீர்கள். பக்கத்தில் இருக்கும் சக்கரம் உங்களைக் கொஞ்சம் நகர்த்தும். அதன்படி உங்களை அடுத்துள்ள சக்கரத்தை நீங்கள் நகர்த்துவீர்கள். மற்ற சக்கரங்கள் சுழல்வதைப் பொறுத்துத்தான் உங்கள் இயக்கமே தீர்மானிக்கப்படும் என்ற பரிதாப நிலைக்கு வந்துவிட்டீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளியாகக்கூட இருக்கலாம். ஆனாலும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், உங்கள் சுதந்திரம் பறிபோய் விடுகிறதல்லவா?

சங்கரன்பிள்ளையின் சுதந்திரம்

சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டு 'பாரை' விட்டுப் புறப்பட வெகு நேரமாகிவிட்டது.

'எட்டு மணிக்குள் வீட்டில் இருந்தாக வேண்டும் என்பது உன் மனைவியின் நிபந்தனையாயிற்றே?' என்று நண்பர்கள் கிண்டலடித்தார்கள்.

சங்கரன்பிள்ளை ஜம்பமாக 'நோ, நோ! என் வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது' என்று தலைநிமிர்த்திச் சொன்னார். தெனாவட்டாக வீட்டிற்கு நடந்தார்.

வாசலிலேயே ஆபத்தைப் புரிந்து கொண்டார். மனைவியின் பலவீனம் அவருக்குத் தெரியும். சரேலென அவரைக் கடந்து உள்ளே ஓடினார். பருமனாக இருந்த மனைவியால் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்துத் துரத்த முடியவில்லை. வீட்டின் பல இடங்களுக்கும் துரத்தப்பட்ட சங்கரன்பிள்ளை கடைசியில் கட்டிலுக்கு அடியில் போய்ப் படுத்துக் கொண்டார்.

மனைவியால் கட்டிலுக்குக் கீழே இருந்த இடைவெளிக்குள் நுழைய முடியவில்லை.

உயிரோடு இருப்பது வேறு, வாழ்வது என்பது வேறு.

"நீ என்ன எலியா? ஆண்மகனா? வெளியே வாய்யா!" என்று அவள் கத்தினாள். சங்கரன்பிள்ளை ஹாயாக பதில் சொன்னார்.. "நான்தான் இந்த வீட்டின் ராஜா. எங்கே படுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது"

சங்கரன் பிள்ளையைப் போல்தானே உங்களில் பலரும் சுதந்திரத்துடன் வாழ்வதாக நினைத்துக் கொண்டு, உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்?

முதன் முதலில் நீங்கள் வேலைக்குப் போனபோது, எந்த நாற்காலி உங்களுக்கு சொர்க்கத்துக்கு நிகராகத் தோன்றியதோ, அதே நாற்காலிதான் இன்றைக்கு உங்கள் ரத்த அழுத்தத்தையும், அல்சரையும், இதய வலியையும் உற்பத்தி செய்யும் நரகமாகிவிட்டது.

சந்தோஷம் கொடுக்கும் என்றுதானே இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தீர்கள்? பழகிப் போன பின் சந்தோஷத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்?

படகில் பயணம் செய்வதற்காகத் துடுப்பை எடுத்தவன், படகை விட்டுவிட்டு துடுப்பை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் ஆகிவிட்டீர்களே!

உங்கள் புத்திசாலித்தனத்தையும், விழிப்பு உணர்வையும் பயன்படுத்தாமல், செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வதற்கு நீங்கள் என்ன இயந்திரமா?

ஒரே பக்கத்தைப் பல நூறு ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்து வைத்துக் கொண்டு, அடுத்தடுத்துப் படித்துக் கொண்டிருப்பதுபோல் உங்கள் தினங்களை காலண்டரில் கிழித்துக் கொண்டிருப்பதா வாழ்க்கை?

முழுமையாக வாழ்வது என்றால் என்ன என்று நீங்கள் எப்போதேனும் யோசித்தது உண்டா?

என்றைக்காவது காலையில் பட்சிகள் விழிக்கும்போது, சந்தோஷமாகக் குரல் கொடுப்பதைக் கேட்டு உற்சாகமாகியிருக்கிறீர்களா? எத்தனை நாட்கள் உடலின் ஒவ்வொரு புள்ளியையும் தண்ணீர் நனைத்து இறங்குவதை ரசித்துக் குளித்திருக்கிறீர்கள்? வண்டி ஓட்டும்போது சிந்தனையை எங்கேயோ வைக்காமல், எத்தனை நாட்கள் அனுபவித்து ஓட்டியிருக்கிறீர்கள்?

மிக ருசியான உணவாக இருந்தாலும் முதல் கவளத்தைத்தான் அனுபவித்துச் சாப்பிடுவீர்கள். அடுத்தடுத்த கவளங்களை, கை தன் பழக்கப்படி வாயில் கொண்டு போடும். வாய் தன் பழக்கப்படி கடித்துக் கூழாக்கி உள்ளே தள்ளும். வாயில் போட்ட உணவு எப்படி மெல்லப்பட்டு உணவுக் குழாயின் வழியே இறங்கி வயிற்றுக்குப் போகிறது என்பதை ஒரு தடவையாவது முழுமையாகக் கவனித்திருக்கிறீர்களா?

ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை மறந்துவிட்டு, வேலையில் சிக்கிக் கொண்டதால் இதற்கெல்லாமா நேரத்தை வீணடிப்பார்கள் என்றுதான் உங்களிடமிருந்து பதில் வரும்.

சும்மா முக்கால் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதற்காகவா வந்தீர்கள்? உயிரை உடலில் இருத்தி வைத்துக் கொள்வதற்குத்தான் அது பயன்படும்.

உயிரோடு இருப்பது வேறு, வாழ்வது என்பது வேறு. ஒரு கணம்... ஒரே ஒரு கணத்தையாவது முழு விழிப்பு உணர்வோடு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.