தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

தரிசனம் இன்று சற்று தாமதமாக அறிவிக்கப்பட்டாலும் அன்பர்களின் ஆவலுக்கும் எதிர்பார்ப்பிற்கும் சற்றும் குறைவில்லை. வழக்கமான இடம், வழக்கமான ஏற்பாடுகள், வழக்கமான தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆசிரவாசிகள் என்றாலும், சத்குருவின் தரிசனமும் அவரது இருப்பும் ஒவ்வொரு நாளும் புதியதாகவும் சலிப்பு தட்டாத சுவாரஸ்யமாகவுவே இருக்கிறது.

"ஜெய ஜெய ஜெய மஹாதேவ ... "என்ற பாடலுடன் துவங்கிய சத்குரு, தனது உரையை தொடர்ந்தார்.

சத்குரு பேசியதிலிருந்து...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மீக பாதையில் செல்வதற்கு முன், மக்கள் எப்போதும் எவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றும் எவற்றை நம் சுற்றியுள்ளவர்களுக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் பார்க்கிறார்கள். வாழ்க்கை அரிதானது என்பதால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க சொல்கிறார்கள். எல்லோரும் வாழ்க்கை அரிதானது என்றே சொல்கிறார்கள். ஆனால், இந்த வாழ்க்கையின் மதிப்பைப் உண்மையாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்றால், அதன்பின் வாழ்க்கையுடன் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள். வாங்குவதும் கொடுப்பதும் மார்க்கெட்டில்தான் நடக்கும். படைத்தலின் மூலத்திற்கும் கொடுக்கல் வாங்கல் என்பது கிடையாது.

ஒரு கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் பணம் சேர்ப்பதிலேயே கழித்தான். ஒருநாள் எமன் தன் வாகனமாகன எருமையில் வந்துவிட்டான். அப்போது அந்த கஞ்சன் "நான் வாழ்க்கை முழுவதும் வாழாமல் சேர்த்து வைப்பதிலேயே வீணாகக் கழித்து விட்டேன். நான் இப்போது வாழ்க்கையை அறிய விரும்புகிறேன். எனவே எனக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுங்கள். நான் அதற்கு கைமாறாக 50 ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன்" என்றான். எமன் அதற்கு மறுத்து விட்டார்.

"ஒரு லட்ச ரூபாய் கொடுக்கிறேன்."

அதற்கும் எமன் மறுத்து விட்டார்.

"ஒரு கோடி." அதற்கும் மசியவில்லை எமன். 100 கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்றார். அதற்கும் எமன் மறுத்து விட்டார்.

ஒருநாள் வாழ்க்கையானதுஅவ்வளவு மதிப்பானது. எனவே அடுத்த 24 மணி நேர உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் என்ன கொடுக்க விரும்புகிறீர்கள்?!

யோகா மூலம் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை நீடித்துக் கொள்ள முடியும். ஆனால் உங்களால் மரணத்தை தவிர்க்க முடியாது. சிலர் எதையாவது எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

நடுத்தர வயதைத் தாண்டிய பெண்மணி ஒருத்திக்கு புற்றுநோய் வந்துவிட்டது. நிச்சயம் இறந்துவிடுவாள் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அவள் தனது உருவத்தை வரையச் சொல்லி வாங்கி, தன் கணவனிடம் தான் இறந்த பின் படுக்கையறையில் எப்போதும் வைத்துக்கொள்ளுமாறு கூறினாள்.

அந்தப் படத்தைப் பார்த்த கணவன், அதில் அவள் அணிந்திருந்த விலையுயர்ந்த ஆபரணங்களைக் கண்டு வியந்து,
'இதுபோன்ற விலையுயர்ந்த தங்க-வைர நகைகள் நம்மிடம் இல்லையே?! படத்தில் ஏன் வரையப்பட்டுள்ளது?' என்று கேட்டான்.

'எனக்கு பின்னால் நீ மணந்து கொள்ளும் பெண், அந்த நகைகளையெல்லாம் வீடு முழுக்க எப்போதும் தேடிக்கொண்டே இருக்க வேண்டும், அதற்காகத்தான்' என்றாள்.

இதுபோலத் தான் சிலர், பொருள் தேடுதலில் எப்போதும் இருக்கிறார்கள். அப்படியென்றால் சத்குரு நாங்கள் இப்போது என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் சுவாசியுங்கள், இப்போது சென்று இரவு உணவு உட்கொள்ளுங்கள். ஆனால், உங்கள் மனதுக்கும் உடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிடுங்கள். உங்கள் மனதும் உடலும் அதன் தன்மையை எப்போதும் வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கும். நீங்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.

இப்படி இன்றைய உரை பொருள் தேடலில் சிக்கிக்கொண்டுள்ள மனித வாழ்க்கை, உண்மை தேடலை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதாக அமைந்தது.

தனது உரையை முடித்த சத்குரு, கண்களை திறந்த நிலையில் வைத்திருக்குமாறு குறிப்புகொடுத்தார். சத்குருவின் இருப்பு, அந்த நேரத்தில் பலருக்கு ஆழமான அனுபவத்தை தந்தது. பலர் அந்த நிலையைத் தாளமுடியாமல் கூச்சலிட்டு பின் சாந்தமாகினர்.

சில நிமிடங்களுக்குப் பின்னர், "பிரம்மானந்த ஸ்வரூபா" உச்சாடனையை சத்குரு உச்சரிக்க வார்த்தைகளில் விவரிக்க முடியாததாய் இருந்தது அந்த வெளி.

ஒரு ஹிந்தி மெல்லிசை செவிகளையும் இதயங்களையும் குளிர்விக்க ஆசி தந்து விடைபெற்றார் சத்குரு.