எங்கிருந்தாலும் தரிசனம்
இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது...
 
 

இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது...

 

6:23

சத்குரு வந்து அமர, நாள் முழுவதும் அடித்த வெயிலின் சூடு தணிந்து குளிர்ந்த காற்றடிக்கிறது, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்... ஈஷா இசைக்குழு கபீர் பாடலொன்றைப் பாடிக்கொண்டிருக்க, உடன் சத்குரு மெட்டுப்போடும் ஒலியும் லேசாக கேட்கிறது...

6:33

ஆதிசங்கரரின் “யோகரத்தோவா போகரத்தோவா...” பாடலை சத்குருவைத் தொடர்ந்து அனைவரும் பாட, பாடிமுடித்ததும் பிறவிப்பெருங்கடலை கடந்துவிட்டது போன்றதொரு பரவச உணர்வு.

6:38

“நான் முதன்முதலில் ஈஷா யோக வகுப்பில் கலந்துகொண்டபோது இருந்த பேரானந்த உணர்வு சற்று குறைந்துவிட்டதே!” என்று ஒருவர் கேட்க, “வாழும் செயல்முறையில் பெரும்பாலானவர்கள் தங்களை இப்படியோர் நிலைக்குத் தள்ளிக்கொள்கிறார்கள். தங்கள் ஆளுமைத்தன்மையை வலுப்படுத்தி, இது பிடிக்கும் பிடிக்காது என்று பிரித்துப்பார்த்து, தங்களைத்தவிர அவர்களுக்கு எதுவும் பிடிக்காத பைத்திய நிலைக்குச் செல்கிறார்கள்.

ஒரு பறவையைப்போல் பறக்கமுடியாவிட்டாலும், கண்மூடினால் விவரிக்கமுடியாத வேறொரு பரிமாணத்தைத் தொடும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. ஒரு எளிமையான பயிற்சி கற்றுத்தர 7 நாட்களோ 14 நாட்களோ எடுத்துக்கொண்டதன் காரணம், உங்கள் மனதை அதற்கேற்ப தயார்செய்யத்தான். இப்போதும் எதுவும் தொலைந்துவிடவில்லை, பயிற்சியுடன், வகுப்பில் கொடுத்த கருவிகளை பயன்படுத்திப் பாருங்கள். பேரானந்தத்தில் வெடித்துப்போவீர்கள்.”

6:57

பாரம்பரிய இசைக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று ஒருவர் கேட்க, “இசைக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை. ஆனால் உச்சபட்ச ஈடுபாட்டிற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமுண்டு. பாரம்பரிய இசைமுறையின் நுட்பம், மிகுந்த ஈடுபாடு இருந்தாலொழிய இசைக்கமுடியாததாய் இருக்கிறது. அதனால் அது ஆன்மீகத்திற்கு நெருக்கமானதாகத் தோன்றுகிறது.”

7:16

பாவ ஸ்பந்தனாவில் இருந்ததுபோல நான் எப்படி எல்லாவற்றுடனும் ஒரே ஈடுபாட்டுடன் இருக்க என்று ஒருவர் கேட்க, “இருக்கும் இடத்திலிருந்து அடுத்த படியை வையுங்கள். முதலில் உங்களுக்குப் பிடித்ததை ஈடுபாட்டுடன் கவனிக்கத் துவங்குங்கள்.

நீங்கள் பிரபஞ்சத்தை நடத்தவில்லை, அதுதான் உங்களை நடத்துகிறது, சுவாசிக்கும் காற்று, உட்காரும் பூமி, குடிக்கும் நீர், இவைதாம் உங்களை உயிருடன் வைத்திருக்கின்றன என்பது புரிந்தால், ஒவ்வொன்றையும் முழு ஈடுபாட்டுடன் கவனிப்பீர்கள். வாழ்க்கையை கவனிக்கத் தவறிவிட்டால் அது உங்களைக் கடந்துசென்றுவிடும்.

பாவ ஸ்பந்தனா என்பது ஒருமுறை குதித்து சுவருக்கு அப்பால் இருப்பதை பார்க்க வைக்கிறது. ஈஷா யோகா உங்களுக்கு சுவரைக் கடக்க ஓர் ஏணியை உருவாக்க உதவுகிறது.”

7:37

ஆட்டிசம் உள்ள குழந்தைகள் ஹடயோகா செய்யலாமா என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, “இதை ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் கவனித்துத்தான் சொல்லமுடியும். குழந்தையைப் பொறுத்து மிக எளிய பயிற்சிகள் சிலவற்றைக் கற்றுத்தரமுடியும்” என்றார் சத்குரு.

7:49

ஓர் துள்ளலான வடமொழிப் பாடலை ஈஷா இசைக்குழு இசைக்க, அமர்ந்திருந்தவர்களுக்கு எழுந்து குதிக்கத்தோன்றும் குதூகலம் பொங்க, சம்ஸ்கிருதி குழந்தைகள் எழுந்து நடனமாடத் துவங்கிவிட்டனர்.

இசையை நடுவில் நிறுத்தச்சொல்லி, “அடுத்த 3 நாட்களில் இரவுபகல் சமமாக இருக்கும் equinox வருகிறது. இந்த 22 செப்டம்பர் முதல், அதைத் தொடர்ந்து வரும் சங்கிராந்தி தினமான 22 டிசம்பர் வரையிலான இந்த தட்சிணாயன காலகட்டம், சாதனாவிற்கு மிகவும் முக்கியமான காலம். ஆரம்பத்தில் ஏதோவொரு ஏக்கத்தால் எதிர்பார்ப்புடன் சாதனாவைத் துவங்கியது பரவாயில்லை. ஆனால் அந்த காலகட்டம் கடந்து, சாதனாவின் முக்கியத்துவம் புரிந்தவர்கள், இந்த 3 மாதங்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சுவாசத்தைப் போல சாதனாவைச் செய்யுங்கள். இது என் ஆசையும் ஆசியும்” என்று கூறிச்சென்றார்.

8:00

மீண்டும் இசைக்குழு ஆர்ப்பரிக்க, ஆரவாரமின்றி விடைபெற்றார் சத்குரு.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

Shiva... at this usual best....Lucky are those who could attend the darshan...