ஏகாதசி விரதம் - கேன்சரை குணமாக்குமா?

ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி நாட்களில், ஈஷா யோகா மையத்தில் வாழ்வோர் பகல் முழுவதும் விரதம் இருந்து, விரதத்தினை இரவில் எளிமையான, சத்தான உணவுடன் நிறைவு செய்கின்றனர். இந்த வழக்கம் எதனால்? சத்குரு சொல்வதைக் கேட்போம்...
 

ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி நாட்களில், ஈஷா யோகா மையத்தில் வாழ்வோர் பகல் முழுவதும் விரதம் இருந்து, விரதத்தினை இரவில் எளிமையான, சத்தான உணவுடன் நிறைவு செய்கின்றனர். இந்த வழக்கம் எதனால்? சத்குரு சொல்வதைக் கேட்போம்...

சத்குரு:

உங்கள் உடலை கவனித்தால் 40 லிருந்து 48 நாட்களுக்குள் அது ஒரு சுழற்சிக்கு உள்ளாவதை உங்களால் உணர முடியும். இந்தக் காலத்தை ஒரு மண்டலம் என்கிறோம். ஒவ்வொரு மண்டலத்திலும் உடலுக்கு 3 நாட்களுக்கு உணவு தேவைப்படுவதில்லை. உடல் செயல்படும் விதத்தின் மீது உங்களுக்கு முழு விழிப்புணர்வு இருந்தால், சில நாட்களில் உடலுக்கு உணவு தேவையில்லை என்பதை நீங்கள் உணரமுடியும். சிரமமில்லாமல் அந்நாட்களில் நீங்கள் உணவை தவிர்க்க இயலும். ஏன், வளர்ப்பு பிராணிகளான பூனை, நாய் கூட ஒரு சில நாட்களில் உணவினைத் தவிர்ப்பதை நீங்கள் கவனித்திருக்க முடியும். குழந்தைகளும் இதைச் செய்வர். ஆனால் இன்றோ பெற்றோர், தங்கள் குழந்தைகளை உணவு உண்ணச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இப்படித் திணிக்கத் தேவையில்லை.

ஒரு மாதத்தில் ஓரிரு நாட்கள் ஒருவர் ஜுஸ் டயட் எனப்படும் பழச்சாறு ஆகாரத்தில் இருக்கலாம்.

உங்கள் உடலை நீங்கள் கவனித்தால், ஒரு சில நாட்கள், உணவு உண்ணத் தேவையில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள். அந்நாட்களில் கட்டாயப்படுத்திக் கொண்டு உணவு உட்கொள்வது சிறப்பானதாய் இருக்காது. விரதம் என்பது உங்கள் உடல் உங்களிடம் கேட்கும் இடைவேளை. இதனை புரிந்துகொள்ளும் சூட்சுமம் பலருக்கும் இல்லாததால், இந்தியாவில் ஏகாதசி என்னும் ஒரு நாளை குறிப்பிட்டு வைத்தனர். இப்படி குறிப்பிட்டாலாவது மக்கள் இதனை தவறாமல் கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் செய்தனர். ஆனால் உடலை வருத்தி, கட்டாயப்படுத்தி உணவில்லாமல் செய்வது சரியல்ல.

ஒருவர் நீண்ட நாட்களுக்கு விரதமிருக்க விரும்பினால், அதற்கு சாதனாவின் துணையும் தேவை. சாதனா செய்து உங்கள் சக்தி உச்சநிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் சக்தியில்லாமல் உணர்ந்தால், உங்கள் உடல் தடுமாறினால், நீங்களும் எதையோ சாதிப்பதைப்போல் “நான் சாப்பிடவே மாட்டேன்” என்ற உறுதியுடன் இருந்தால், அதில் பிரயோஜனமே இல்லை. உங்கள் உடல் உணவு கேட்கும்போது, நான் சாப்பிட மாட்டேன் என்று உணவளிக்காமல் இருப்பது சரியான பழக்கமல்ல. இப்படி விரதமிருப்பது உங்கள் உடலை பாதிக்கும். ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாக உங்கள் உடலுக்கு ஓய்வளிப்பது நல்லது.

ஒரு மாதத்தில் ஓரிரு நாட்கள் ஒருவர் ஜுஸ் டயட் எனப்படும் பழச்சாறு ஆகாரத்தில் இருக்கலாம். நாள் முழுவதும் தேனும் நீரும் கலந்து பருகலாம் அல்லது இளநீர் பருகலாம். ஆனால் சிறந்தது சாம்பல் பூசணி ஜுஸ். உங்களால் ஜுஸ் டயட்டில் இருக்க இயலாவிட்டால், பழ ஆகாரத்தில் இருக்கலாம். உடலிற்கு இது சற்றே இலகுவாய் இருக்கும், தினசரி எடுக்கும் உணவை பதம் செய்யும் பணி உடம்பிற்கு இல்லாமல்போகும். இதுபோல் ஒரு மாதத்தில் இரண்டு நாட்களுக்கு நீங்கள் விரதமிருந்தால் உடலிலுள்ள கேன்சர் விளைவிக்கும் செல்கள் குறைக்கப்படும். ஏனெனில், இயல்பான செல்களைவிட கேன்சர் செல்களுக்கு 40 லிருந்து 45 மடங்கு அதிக உணவு தேவை. உடலுக்கு உணவளிக்காத பட்சத்தில் சாகும் முதல் விஷயம் கேன்சர் செல்களே. இந்த கேன்சர் செல்களால் உணவில்லாமல் உயிர் வாழ முடியாது.

ஒரு பிச்சைக்காரர் வந்தால் அவருக்கு பழைய உணவையோ அல்லது ஏதோ ஐந்து, பத்து ரூபாயை வீசியெறியும் வழக்கம் உள்ள நம்மில் பலரும், உங்கள் ஒருவேளை உணவை அவருக்கு வழங்கலாம். ஒரு நாளைக்கு அந்தப் பிச்சைக்காரரை உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அரசனை போல் உணவளிக்கலாம். அந்த உணவை அந்த ஒரு நாளைக்காவது அவர் ரசிக்கட்டும், ருசிக்கட்டும். அது அவருக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

ஈஷா மையத்தில் ஏகாதசி இரவுகளில் வழங்கப்படும் உணவு...

பப்பாளி பழ சாலட்

அவரவர் தேவைக்கேற்ப பப்பாளி துண்டுகளை நறுக்கி பரிமாறலாம். வீட்டில் இருக்கும் பழுத்த பழங்களை நறுக்கி சுவைக்கு தேன் கலந்தால், பழ சேலட் ரெடி.

முளை கட்டிய பச்சை பயிறு

 • இரவு உண்பதற்கு, காலையில் பச்சை பயிறை 6-8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
 • அது முளைவிட துவங்கியதும், தண்ணீரை வடித்து ஒரு துணியில் சுற்றி வைத்து விடுங்கள்.
 • அந்தத் துணி ஈரப்பதத்திலேயே இருக்க வேண்டும்.
 • ஒரு செமீ அளவிற்கு முளை விட்டிருந்தால் உண்பதற்கு தயார் என்று அர்த்தம்.
 • ஒரு செ. மீட்டருக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ முளைத்திருந்தால் அந்தப் பயிறு வாயுப் பிரச்சனையை உண்டாக்கும்.

கறுப்பு சுண்டல்

தேவையான பொருட்கள்:

கறுப்பு சுண்டல்
எண்ணெய்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை
துறுவிய தேங்காய்
எலுமிச்சை சாறு
உப்பு சுவைக்கேற்ப

செய்முறை:

 • கறுப்பு சுண்டலை 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
 • தண்ணீரை வடித்துவிட்டு மென்மையான பக்குவத்திற்கு சுண்டலை வேக வைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானவுடன் தாளிக்கவும்.
 • தாளிதத்தில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 • வதங்கியபின் சுண்டலைச் சேர்க்கவும்.
 • சுண்டலை நன்கு வதக்கியபின் நெருப்பைவிட்டு இறக்கிவிடவும்.
 • அதில் துருவிய தேங்காயையும் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கொள்ளவும்.
 • நன்கு கலந்து, பின் பரிமாறவும்.
 • மாங்காய் சீசனில் மாங்காயையும் சேர்த்து வதக்கலாம்.

பொரியல்

கேரட், பச்சை பட்டாணி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை வேகவைத்துக் கொண்டு, வாணலியில் தாளித்து, காய்கறிகளைச் சேர்த்து, கடைசியில் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் பொரியல் தயார்.

நெல்லிக்காய் துவையல்

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லி 5-6,
துருவிய தேங்காய் 1 கப்,
கறிவேப்பிலை,
மல்லி - 1 சீப்பு,
சிவப்பு மிளகாய்,
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

 • நெல்லிகளை கழுவி, விதை நீக்கி, நறுக்கிக் கொள்ளவும்.
 • நறுக்கிய நெல்லியையும் இதர பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அளவாக நீர் விட்டு, துவையல் பதத்தில் அரைத்து இறக்கிக் கொள்ளவும்.
 • கரகரவென இருக்கட்டும். பரிமாறும்போது தாளித்து கொட்டி பரிமாறவும்.

கஞ்சி

தேவையான பொருட்கள்:

அரிசி அல்லது கோதுமை
துவரம் பருப்பு
சீரகம்
உப்பு
தேங்காய் (சுவை சேர்க்க)

செய்முறை:

 • அரிசியையும் பருப்பையும் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
 • அரிசி 1 கப் என்றால் பருப்பு அரை கப் எடுத்துக் கொள்ளலாம்.
 • நன்கு வெந்ததும் அதில் சீரகம், உப்பு சேர்க்கவும்.
 • கூடுதல் சுவைக்கு தேங்காய் பாலையும் சேர்த்து கொதி வந்ததும் இறக்கிவிடலாம். எளிமையான சுவையான கஞ்சி ரெடி.