திருஷ்டி கழிப்பதில் உள்ள விஞ்ஞானம் என்ன?

வெளியில் சென்று வந்தவுடன் வீட்டிலிருக்கும் பாட்டியோ அல்லது பெரியவர்களோ ஆரத்தி எடுத்துவிட்டு வீட்டினுள்ளே வரச்செய்வது வழக்கம்! இது ஏனென்று கேட்டால் கண்திருஷ்டி கழியும் என்பார்கள். சத்குருவிடம் கேட்டபோது, அதன் அறிவியல் விளக்கம் கிடைத்தது!
 

வெளியில் சென்று வந்தவுடன் வீட்டிலிருக்கும் பாட்டியோ அல்லது பெரியவர்களோ ஆரத்தி எடுத்துவிட்டு வீட்டினுள்ளே வரச்செய்வது வழக்கம்! இது ஏனென்று கேட்டால் கண்திருஷ்டி கழியும் என்பார்கள். சத்குருவிடம் கேட்டபோது, அதன் அறிவியல் விளக்கம் கிடைத்தது!

Question:முன்பெல்லாம் வாரத்துக்கு ஒரு முறையாவது வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி கழிக்கிறோம் என்று சொல்லி ஆரத்தி எடுப்பார்கள். அல்லது வீட்டுக்குள் புதிதாக மணமக்கள் காலடிவைக்கும்போது ஆரத்தி எடுப்பார்கள். எதற்காக இந்தப் பழக்கம்?

சத்குரு:

நமது உடல்தன்மை பலவிதமாகச் செயல்படுகிறது. அடிப்படையாக, ஸ்தூல உடல், சூட்சும உடல் என்று இருக்கிறது. ஸ்தூல உடல் என்பது நாம் கண்ணால் பார்ப்பது. சூட்சும உடல் என்பது ஒளி உடல் என்று சொல்லலாம். சூட்சும உடலும் ஸ்தூல உடலும் ஒரே அளவில் இருக்காது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்களில், உங்கள் சூட்சும உடல், ஸ்தூல உடலைக் காட்டிலும் நன்கு பெரியதாக இருக்கும். ஆனால், நீங்கள் துன்பமாக இருக்கும் நாட்களில், சூட்சும உடலின் அளவு குறைந்துவிடும். மிகவும் உற்சாகமான, ஆனந்தமான நிலையில் இருக்கும்போது, சூட்சும உடல் மிகவும் விஸ்தாரமாக இருக்கும். இப்படி உங்கள் சூட்சும உடல் உங்கள் ஆனந்தம், துன்பத்தைப் பொறுத்து பல அளவுகளில் இருக்கும்.

 

இந்த சூட்சும அல்லது ஒளி உடலை தீயால் சுற்றுவதுதான் ஆரத்தி. இப்படிச் செய்யும்போது, தேவையற்ற எதிர்மறைச் சக்திகள் (கிராமப்புறங்களில் காற்று கருப்பு என்றும் சொல்கிறார்கள்) நீங்க வாய்ப்பு உள்ளது. நாம் சாலையில் நடந்து போகும்போது, ஏதாவது அசிங்கத்தை மிதித்துவிட்டால், வீட்டிற்கு வந்தவுடன் காலைக் கழுவிக்கொள்கிறோம் இல்லையா? அதேபோல், நாம் வெளியே போகும்போது, நம் கண்ணுக்குத் தெரியாத அசிங்கங்கள் இருக்கின்றன. அவை ஒளி உடலில் ஒட்டிக்கொண்டால், எந்த ஒரு காரணமும் இல்லாமல் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது, மனநிலையில் பதற்றம் வருகிறது. அந்த கண்ணுக்குத் தெரியாத அசிங்கங்களைக் கழுவத்தான் ஆரத்தி.

ஆனால், அந்தத் தீ சரியான பொருட்களைக்கொண்டதாக இருக்க வேண்டும். இதற்குச் சில குறிப்பிட்ட புல் வகைகளை உபயோகிப்பார்கள். அல்லது கற்பூரம் அல்லது எள் போன்றவற்றையும் உபயோகிக்கலாம். காய்ந்த எலுமிச்சம் பழத்தையும் உபயோகிக்கலாம். ஆனால், இந்த ஆரத்தி சுற்றுவது என்னும்போது அந்த ஒளி உடலைக் கவனித்து அதற்கேற்ப செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் உங்கள் ஒளி உடல் வெவ்வேறு அளவுகளில் இருக்கலாம். எனவே, அதைச் சரியாகக் கவனித்துப் புரிந்து செய்தால், பலன் அதிகமாக இருக்கும். ஆனால், அனைவரும் புரியாமல் ஏதோ கணக்கில் செய்கிறார்கள். இதிலும் ஓரளவுக்கு பலன் இருக்கிறது!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1