சித்திரையில் ஏன் புது வருடம்?

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத்தை உணரும் சாத்தியமாக இந்த புதுவருடத்தை உணர்ந்திட சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே...
 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத்தை உணரும் சாத்தியமாக இந்த புதுவருடத்தை உணர்ந்திட சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே...

சத்குரு:

தமிழ் வருடப்பிறப்பு என்பது ஜனவரி 1ஆம் தேதி அல்லாமல், சித்திரை மாதத்தில் நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படுவதற்கு காரணம் இருக்கிறது. இந்திய பஞ்சாங்கத்தின் படி சித்திரை மாதப்பிறப்பு புதுவருடமாகக் கருதப்படுகிறது. இந்திய பஞ்சாங்கம், சூரியன் மற்றும் சந்திரனின் ஓட்டத்தை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன்படி கொண்டாடப்படும் புத்தாண்டு தினத்தில் மனித உடலும் மனமும் செயல்படும் விதம், கோள்களின் அசைவுடன் ஒருவரை இசைந்திருக்க செய்கிறது.

சித்திரை மாதத்தில் நாம் புது வருடத்தை கொண்டாடுவது ஏதோ ஒரு நம்பிக்கையினாலோ, வசதியாக இருப்பதாலோ அல்ல.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்களால் பின்பற்றப்படும் சூரியசந்திர நாள்காட்டியின்படி ஒரு புது வருடத்தின் பிறப்பாக சித்திரை கருதப்படுகிறது. கிழக்கத்திய நாடுகளிலிருந்து தோன்றும் அனைத்தும், மனித உடலுக்கும் விழிப்புணர்வுக்கும் எது உயர்ந்த சாத்தியமாக இருக்கும் என்பதைக் கருதியே உருவாக்கப்படுகிறது. இந்த நாள்காட்டியும் அவ்வாறே உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில், பூமியின் சாய்வு காரணமாக பூமியின் வடதுருவம் அதிகபட்ச வெப்பத்தை சூரியனிடமிருந்து பெறுகிறது. வெப்பம் அதிகமாவதால் மனிதர்களுக்கு அசௌகரியமாக இருந்தாலும், இந்த காலகட்டத்தில்தான் பூமியின் பேட்டரி முழுமையான சார்ஜுடன் இருக்கிறது.

வருடத்தின் மிக வெப்பமான இந்நாட்களுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள, வெப்ப மண்டலப் பகுதிகளில் மக்கள் விளக்கெண்ணெய் போன்ற குளிர்ச்சியான எண்ணெய்களை உடலில் பூசிக்கொள்வர். பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள தொடர்பை கவனத்தில் கொள்ளாத நவீன நாள்காட்டிகளைப் போல இல்லாமல், சந்திரமான சௌரமான பஞ்சாங்கம் பூமியின் அமைப்பு மனிதனுக்குள் ஏற்படுத்தும் அனுபவத்தையும் தாக்கத்தையும் கணக்கில் கொள்கிறது. அதனால் பூமியின் அக்ஷரேகைக்கு ஏற்றவாறு இந்தப் பஞ்சாங்கமும் வேறுபடுகிறது.

சித்திரை மாதத்தில் நாம் புது வருடத்தை கொண்டாடுவது ஏதோ ஒரு நம்பிக்கையினாலோ, வசதியாக இருப்பதாலோ அல்ல, அதன் பின்னணியில் மனித நல்வாழ்வை பலவிதங்களில் மேம்படுத்தும் அறிவியல் இருக்கிறது. வேறுசில நாடுகள் பொருளாதாரரீதியாக நமக்கு முன்னால் சென்றுவிட்ட ஒரே காரணத்தால், இந்த நாட்டின் ஆழமான அறிவு இன்று புறம் தள்ளப்பட்டுள்ளது. நாம் பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தை நோக்கிச் சென்றாலும், இந்தக் கலாச்சாரத்தின் ஆழங்களை வெகுசில ஆண்டுகளில் உருவாக்கிவிட முடியாது. இது ஆயிரமாயிரம் ஆண்டுகள் செய்த செயல்களால் கிடைத்த வரம்.

இந்த புதுவருடத்தில், நீங்கள் செய்யக்கூடிய ஒரு சாதாரணமான செயல், அலைபேசியை கையிலெடுத்தால் “ஹலோ” என்று சொல்லாமல், “வணக்கம்” என்றோ “நமஸ்காரம்” என்றோ சொல்லலாம். இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரிப்பது முக்கியம். எதை நீங்கள் கடவுளிடம் சொல்வீர்களோ, அதை உங்களைச் சுற்றியிருப்பவர்களிடமும் சொல்லுங்கள், வாழ்வதற்கான சிறந்த வழி இது.

ஒரு பொருள் உங்களுக்கு புனிதமானதாகவும் மற்றொன்று புனிதமற்றதாகவும் இருந்தால், நீங்கள் வாழ்வின் அடிப்படையையே புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத்தை உணரும் சாத்தியமாக இந்த புதுவருடத்தை உணர்ந்திடுங்கள்.

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1