சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! - பகுதி 1

நிலவை, பூமியைச் சுற்றி வரும் ஒரு பொருளாக நாம் அறிவோம். ஆனால் அதுதான் நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பது தெரியுமா? அது நம்மில் செய்யும் மாயாஜாலங்கள் பற்றி தெரியுமா? தெரியாது... நிலவைப் பற்றி நாம் அறிந்திராத சில அரிய சூட்சுமங்களை கட்டவிழ்க்கிறது இத்தொடர்...

Question: மறையியல் நூல்களில் சந்திரனை உவமைக்காகப் பயன்படுத்துவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே மறையியலுக்கும் சந்திரனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இரண்டு முட்டாள்கள் இருந்தார்கள். ஒருவன் சொன்னான், “விடுமுறைக்கு நாம் சூரியனுக்குப் போகலாம்” என்றான். அதற்கு இன்னொருவன் சொன்னான், “அங்கு மிகவும் சூடாக இருக்குமே!” அதற்கு முதலாமவன் பதில் சொன்னான், “அப்படியென்றால் நாம் இரவில் போகலாம்”(சிரிக்கிறார்). உங்கள் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறுகியது. அமாவாசை அன்று கூட சந்திரன் இருக்கும் என்பது உண்மை அல்லவா? சந்திரனின் தாக்கம் என்பது நீங்கள் அதனைப் பார்க்கும் நாட்களைவிட பார்க்க முடியாத நாட்களில் அதிகமாக இருக்கும்.

பெண்களின் சுழற்சி முறை

தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தின் ஒரு பகுதி எப்போதும் சந்திரனுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

கரடுமுரடாகக் காணப்படும் நிலப் பகுதியைக் கொண்ட சந்திரனுக்கும் மறையியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? மனிதனின் பிறப்பு முறை, உடல் உருவாகும் வழிமுறை இவை அனைத்துக்கும் சந்திரனின் சுழற்சியுடன் தொடர்பு இருக்கிறது. ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் சுழற்சி கூட சந்திரனின் சுழற்சியுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது சந்திரன் இந்த கிரகத்தைச் சுற்றிவரும் காலத்திற்கும் மனித உடலில் ஏற்படும் பருவ மாற்றங்களுக்கும் மற்றும் மனித உடல் உருவாகும் வழிமுறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
எப்போதும் கணக்கு போட்டு பார்க்கும் தர்க்க ரீதியான மனதை விட்டுவிட்டு உள்ளுணர்வு அடிப்படையில் வாழ்க்கையைப் பார்ப்பதற்கு சந்திரன் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உங்களுக்குள்ளே நீங்கள் ஆழமாகத் தோண்டிப் பார்க்கும்போது, சந்திரனுக்கும் மனித இனப் பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. சந்திரனின் பல்வேறு தோற்றங்கள் மனித உடல் மீதும், மனித மனத்தின் அமைப்பு மீதும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எனவே தர்க்க ரீதிக்கு அப்பாற்பட்ட பரிமாணத்தின் ஒரு பகுதி எப்போதும் சந்திரனுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

சந்திரனின் வெவ்வேறு நிலைகள்

பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடையே, மீண்டும் அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே எத்தனையோ நிகழ்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் பார்க்கும் சந்திரனின் வெவ்வேறு நிலைகளை மனிதனின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த முடியும் என்பது இந்திய கலாச்சாரத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு பகுதி ஆகும். சந்திரன் என்பது ஒரு பிரதிபலிப்பு. மனிதன் என்பதும் மனிதனின் பார்வை என்பதும் கூட ஒரு பிரதிபலிப்பே. எந்த ஒரு பார்வையும் உண்மையில் ஒரு பிரதிபலிப்புதான். சந்திரனின் இயல்பே பிரதிபலிப்புதான் என்னும்போது, தர்க்க ரீதியாக அலச முடியாத வாழ்க்கை குறித்த ஆழ்ந்த பார்வையும் எப்போதும் சந்திரனுடனேயே உருவகப் படுத்தப்படுகின்றன.

சோமா

ஆங்கிலத்தில் சந்திரனைப்பற்றி குறிப்பிடும்போது லூனார் (lunar) என்று சொல்வார்கள். பித்து பிடித்தவனைப் பற்றிக் குறிப்பிடும்போது லூனாடிக் (lunatic) அதாவது பித்து பிடித்தவன் என்பார்கள். பித்து பிடித்தலை சந்திரனுடன் ஏன் தொடர்பு படுத்தினார்கள் என்றால், இந்திய கலாச்சாரத்தை தாண்டி மற்ற கலாச்சாரத்தில் உள்ளவர்கள் தர்க்கரீதியானவற்றிற்கு அப்பாற்பட்டவை அனைத்தையும் கிறுக்குத்தனம் என்பார்கள். எவையெல்லாம் தர்க்கரீதியைத் தாண்டி இருக்கிறதோ அவற்றை கிறுக்குத்தனமாக நினைத்தார்கள். ஆனால் இந்த கலாச்சாரத்தில் தர்க்கரீதியானவற்றிற்கு அப்பாற்பட்டவை எப்போதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தக் கலாச்சாரத்திலோ சந்திரனை "சோமா" என்பார்கள். சோமா என்றால் போதை மயக்கம் (intoxication) அல்லது மதிமயக்கம் என்று பொருள். போதை மயக்கம் என்றால் மனநோய் என்று பொருளல்ல. இரண்டுக்கும் வேறுபாடுண்டு. எவரும் மன நோயை நாடிப்போவதில்லை. ஆனால், மக்கள் போதை மயக்கத்தை தேடிப் போகிறார்கள்.

மக்கள் போதை மயக்கத்தை நோக்கி ஏன் போகிறார்கள் என்றால், அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் மோசமான தர்க்கத்தை நிறுத்த முடியவில்லை. அந்த தர்க்கங்கள் உலகத்தை தூள்தூளாக்குகிறது. உங்களால் எவருடனும் நட்புடன் இருக்க முடியவில்லை, ஆனால் உங்களுடன் சேர்ந்து மது அருந்தும் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள். அதற்குக் காரணம் உங்களுடன் உட்கார்ந்து குடிக்கும்போது உங்களுக்குள் ஓரளவு ஒன்றாய் இருத்தல் என்பது உருவாகிவிடுகிறது. உங்களுடைய தர்க்ககுணம், எதிர்ப்பு சக்தி ஆகியவை உருகிப்போய், ஒன்றாகச் சிரித்து, ஒன்றாக பாட்டுப் பாடி, ஒன்றாக அழுது, ஒருவேளை சாக்கடையில் ஒன்றாகப் புரளவும் நேரிடலாம். (சிரிக்கிறார்) அவர்களால் சாதாரணமாக செய்ய முடியாத காரியங்களை எல்லாம் அப்போது செய்கிறார்கள். குளியலறையில்கூட பாட முடியாதவர்கள், குடித்துவிட்டால், பாடவும் ஆடவும் செய்கிறார்கள். ஏனென்றால் போதை மயக்கம் அவர்களை ஓரளவு தளர்த்தி விடுகிறது. எனவே இதுதான் போதை மயக்கத்தின் சாரம். அதுதான் போதை மயக்கத்திற்கான ஈர்ப்பு.

அடுத்த வாரம்...

சந்திரனை ஏன் சோமா என்று குறிப்பிடுகிறார்கள்? உண்மையில் சந்திரனைப் பார்த்தால் போதை மயக்கம் ஏற்படுமா? தெரிந்துகொள்வோம் அடுத்த வாரப் பதிவில்...

சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! தொடரின் பிற பதிவுகள்