புத்த தர்மம் அறிய நினைத்த சீடனுக்கு குரு வழங்கிய நூல்!
நான் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று வேறுபடுத்திப் பார்ப்பது ஒரு முடிவுக்கு வந்தபோதுதான் சாமுண்டி மலையில், நான் என் தன்னிலை உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் நான் இருந்தேன். எல்லாவற்றிலும் நான் இருந்தேன். எனக்குள் எல்லாம் கலந்திருந்தது. அதுதான் உண்மையான யோகா. அதுதான் புத்த தர்மம்.
 
புத்த தர்மம் அறிய நினைத்த சீடனுக்கு குரு வழங்கிய நூல்!, Buddha darmam ariya ninaitha seedanukku guru vazhangiya nool
 

ஜென்னல் பகுதி 45

சில மாதங்கள் தன் குருவுடன் தங்கியிருந்த ஒரு சீடன், "குருவே, நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது.." என்றான்.

"எங்கே போகப் போகிறாய்?" என்று கேட்டார் குரு. "எனக்கு புத்த தர்மத்தை அறிந்துகொள்ள ஆசை. இம்மாபெரும் பூமியில் அலைந்து திரிந்தாவது அதை அறிந்துகொள்வேன்.." என்றான் சீடன்.

குரு அவனை ஆழ்ந்து நோக்கினார். "அடடா..! இதை நீ முன்பே சொல்லியிருக்கக்கூடாதா..?"

"சொல்லியிருந்தால்..?"

"நானே உனக்கு அதைக் காட்டியிருப்பேனே..!" என்றார்.

"குருவே, இப்போது சொல்லுங்கள், அது எங்கே இருக்கிறது..? அது என்ன..?" என்று கேட்டான் சீடன்.

குரு தன்னுடைய நீளமான அங்கியிலிருந்து ஒரு நூலை உருவி அவனிடம் நீட்டினார். "இதோ, வைத்துக்கொள்.." என்று கொடுத்தார்.

சீடன் அவர் தன்னைக் கேலி செய்வதாக உணர்ந்து, நூலை எறிந்துவிட்டு, வெளியேறினான்.

சத்குருவின் விளக்கம்:

(தமிழில் சுபா)

ஆன்மிக அனுபவம் என்பதே ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்துப் பார்ப்பதை நிறுத்துவதுதான்.

நான் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று வேறுபடுத்திப் பார்ப்பது ஒரு முடிவுக்கு வந்தபோதுதான் சாமுண்டி மலையில், நான் என் தன்னிலை உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் நான் இருந்தேன். எல்லாவற்றிலும் நான் இருந்தேன். எனக்குள் எல்லாம் கலந்திருந்தது. அதுதான் உண்மையான யோகா. அதுதான் புத்த தர்மம்.

நான் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று வேறுபடுத்திப் பார்ப்பது ஒரு முடிவுக்கு வந்தபோதுதான் சாமுண்டி மலையில், நான் என் தன்னிலை உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் நான் இருந்தேன். எல்லாவற்றிலும் நான் இருந்தேன். எனக்குள் எல்லாம் கலந்திருந்தது. அதுதான் உண்மையான யோகா. அதுதான் புத்த தர்மம்.

சில மாதங்கள் தங்கியிருந்த குருவின் குடிலில் இல்லாத புத்த தர்மத்தை வேறெங்கோ தேடிச் சென்றால் கிடைத்துவிடும் என்று சீடன் நினைத்ததே முட்டாள்தனம்.

எது ஒன்றையும் குப்பை என்றோ, புனிதம் என்றோ, பிரித்துப் பார்க்கத் துவங்கிவிட்டால், அங்கு தர்மம் இல்லை. யோகாவில் சிறக்க, இரண்டே வழிகள்தான் உண்டு. ஒன்று, எல்லாவற்றையும் புனிதமாகப் பார்ப்பது. இன்னொன்று எல்லாவற்றையும் குப்பையாகப் பார்ப்பது. எப்படிப் பார்த்தாலும், அது முழுமையாகப் பார்க்கப்படும்போது வேலை செய்யும். ஆனால், ஒன்றைக் குப்பையாகவும், இன்னொன்றைப் புனிதமாகவும் பார்க்க முற்பட்டால்தான், வாழ்க்கை முட்டாள்தனமாக முடிந்து போகும். ஆன்மிகம், லௌகீகம், குடும்பம், வீடு என்று பல்வேறு பாகுபாடுகளில் சிக்கிப் போகும்போது, அறியாமை மேலோங்குகிறது. அப்படியில்லாமல் எல்லாவற்றையும் புனிதமாகவோ, தெய்வீகமாகவோ பார்க்கத் துவங்கிவிட்டால், ஆன்மிகச் சாதனை எளிதாகும்.

அப்படிப் பார்க்கும் துணிச்சல் உங்களுக்கு இல்லையென்றால், எல்லாவற்றையுமே சாத்தானின் வேலையாகப் பார்க்கலாம். 'இதுவும் சாத்தான், அதுவும் சாத்தான்' என்று பார்த்தீர்கள் என்றாலும், அதுவும் வேலை செய்யும்.

இதைத்தான் அந்த குரு அவனுக்குத் தெரிவிக்க முற்பட்டார். 'இங்கு இல்லாத உண்மையை வேறு எங்கே போய் தேடிக் கண்டுபிடிப்பாய்..? உனக்குள் கண்டுபிடிக்க முடியாத ஒரு தர்மத்தை, இந்தப் பரந்த உலகில் வேறெங்கு தேடிக் கண்டுபிடிக்கப்போகிறாய்..? ஆன்மிகமானாலும், லௌகீகமானாலும் இரண்டும் உனக்குள்தான் புதைந்திருக்கின்றன. அவை வெளியில் நடப்பவை அல்ல.'

நீங்கள் இந்தியாவின் ஏதோ ஒரு தெற்கு மூலையிலுள்ள கிராமத்தில் இருந்தாலும் சரி, இமய மலையின் மீது இருந்தாலும் சரி, அனுபவம் என்பது உங்களுக்குள்தான் நடந்தாக வேண்டும்.

'இதை மாற்றலாமா, அதை மாற்றலாமா, இந்த இடத்தை மாற்றலாமா, அந்த இடத்துக்குப் போகலாமா' என்று பார்ப்பதில் எந்த முன்னேற்றமும் கிடைக்காது.

வெளிச்சூழ்நிலைகள் உங்களுடைய ஆன்மிகச் சாதனைகளுக்கு உகந்ததாக அமைத்துக்கொள்வதற்கு வேண்டுமானால் முயற்சிக்கலாமே தவிர, மற்றபடி வெளிச்சூழ்நிலை உங்கள் உள் சூழ்நிலையை ஒருபோதும் மாற்றாது.

ஒரு துணியின் நூல் பிரியிலிருந்து, வெடித்துச் சிதறும் சூரியன் வரை, எதில் வேண்டுமானாலும் உண்மையை தரிசிக்கலாம். இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வோர் அணுவும் உங்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கும் ஒரு பாதைதான். கதவைத் திறக்க வேண்டியது மட்டுமே பாக்கி. அந்தப் பொறுப்பு உங்களுடையது.

ஜென் என்றால் கடவுள் நம் வழியாக தன்னுடைய கீதத்தை இசைப்பதற்காக நம்மை ஒரு வெற்று மூங்கிலாக்கிக் கொள்வது!


ஆசிரியர்:

என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1