போதையில் சிவன்...

அப்படியெனில் சிவனும் சோமபானம் அருந்தினாரா? அவரையும் இந்த போதை மயக்கம் அடிமைப் படுத்தியதா? அனைத்தையும் அடக்கி ஆண்ட சிவன் எப்படி..?
போதையில் சிவன்..., Shiva
 

சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 6

அப்படியெனில் சிவனும் சோமபானம் அருந்தினாரா? அவரையும் இந்த போதை மயக்கம் அடிமைப் படுத்தியதா? அனைத்தையும் அடக்கி ஆண்ட சிவன் எப்படி..?

சத்குரு:

இன்று வாழ்வில் இருக்கும் தீவிரம் போதாமல், ஏதோ ஒரு பரவசத்தை உணர போதைப் பொருள் நாடிப் போகும் இளைஞர்கள் பலர். அலுப்பு தட்டும் ஒரே வகையான வாழ்க்கையை இளைஞர்கள் ஏற்க மறுக்கிறார்கள். தீவிரமான ஏதோ ஒன்றை உணர வேண்டும் என்பதற்காக, அதற்கு என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நான் அவர்களை குறை கூற மாட்டேன். இன்னும் சொல்லப்போனால், அவர்கள் ஏக்கத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் அதற்காக அவர்கள் மேற்கொண்ட வழி தான் தவறு. பரவசத்திற்கு ஏங்கவில்லை என்றால், அவரெல்லாம் எவ்வகையான மனிதர்? தேங்கிப்போனவர் அல்லவா?

சிவன் எப்போதுமே இந்தப் பரவசப் போதையிலே தான் திளைத்திருந்தார்... எப்படி?

சிவனுக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் பெயர் 'சோமா' அல்லது 'சோமசேகரா'. 'சோமா' என்பது நிலவைக் குறிக்கும் என்றாலும், 'சோமா' என்றால் மயக்கம் அல்லது போதை என்றும் பொருள். ஆம், சிவன் எப்போதும் போதையில் திளைத்திருந்தார்.

தேவையான அளவு 'ஆனந்தமைட்' ஐ நம் உடலிலே உற்பத்தி செய்தால், எல்லா நேரமும் போதையிலேயே - ஆனால் முழுமையான விழிப்புடன் இருக்கலாம்.

ஒருவர் போதையில் இல்லாவிட்டால் (வெளிப் பொருட்களை உட்கொள்ளாமல் வாழ்க்கையை வாழும் நிலையிலேயே அவருக்கு போதை உண்டாகாவிட்டால்), மிகச் சாதாரண விஷயங்களான காலையில் எழுவது, காலைக் கடன்களை செய்வது, உண்பது, பணம் சம்பாதிப்பது, உங்களின் 'சுய-பாதுகாப்பு' செயல்கள், இரவில் உறங்கப்போவது போன்றவற்றை செய்வதே மிகப் பெரிய வேலையாகத் தோன்றும். அதுதான் இன்று பல மனிதர்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. வாழ்வின் சாதாரண விஷயங்கள் கூட நரகமாக மாறிவிட்டன. இது வாழ்வை ஆனந்தமாகப் பருகாமல் அதை மேலோட்டமாக வாழ முற்படுவதால்தான் ஏற்படுகிறது.

நிலவை 'சோமா' என்றழைப்பார்கள், அதாவது போதை உண்டாக்குவது. மின் விளக்குகள் இல்லாத இடத்தில், அல்லது சும்மா நிலவைப் பார்த்து உட்கார்ந்திருந்தாலும் கூட, மெதுவாக தலை இலேசாகிவிடும். இந்நிலையை நிலா வெளிச்சம் இல்லாமலும் அடையலாம், ஆனால் நிலா வெளிச்சம் இதை இன்னும் நன்றாகவே செய்திடும். நிலவின் இந்தக் குணத்தினால்தான் அதனைப் போதை உண்டாக்கி என்றழைத்தார்கள். இதே காரணத்திற்காகத்தான் சிவன், தன் தலையில் நிலவை அணிந்திருக்கிறார் - அவர் எப்போதும் போதையில் இருப்பதைக் குறிக்க.

என்றாலும் சிவனின் போதையில் ஒரு சிறு வித்தியாசம்...

சிவன், போதையேறிய நிலையில், ஆனால் முழு விழிப்பில், நிதானத்தில் இருக்கும் மாபெரும் யோகி. போதையில் திளைக்க வேண்டுமானால், நீங்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். நீங்கள் மதுபானம் அருந்தும்போது கூட விழித்திருந்து அந்தப் போதை நிலையை அனுபவிக்கவே ஆசைப்படுவீர்கள். என்ன, போதை ஏறியவுடன், அதை அனுபவிக்க முடியாமல், நிதானத்தை இழந்து, மயங்கிக் கீழே விழுந்துவிடுவீர்கள். ஆனால் நம் யோகிகளோ முழு போதையில், ஆனால் முழு விழிப்புடன், நிதானத்துடன் இருப்பார்கள். இந்த போதை வெளிப் பொருட்களை உட்கொள்வதால் உண்டானதல்ல. தங்கள் இயல்பு நிலையிலேயே அவர்கள் போதையில் திளைப்பார்கள்.

அது எப்படி உடலிலேயே போதைப் பொருள் உண்டாக்கிக் கொள்வது?

கடந்த இருபது ஆண்டுகளில், மனித மூளையில் பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. இதில், ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானி, மனித மூளையில் ஆயிரமாயிரம் ‘கஞ்சா ஏங்கி’கள் (cannabis/cannabinoid receptors) இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைத்திருந்தால், அது தானாகவே போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும். அப்படி உற்பத்தியாவதை உட்கொள்ள மூளை காத்துக் கிடக்கிறது. மனித உடலால் தனக்குத் தேவையான போதையை உள்ளிருந்தே உற்பத்தி செய்து கொள்ள முடிவதால்தான், சந்தோஷம், இன்பம், அமைதி ஆகியவை வெளித் தூண்டுதல் இல்லாமல் உங்களுக்குள்ளேயே உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

அந்த இரசாயனத்திற்கு ஏற்ற பெயரைச் சூட்ட, அந்த விஞ்ஞானி உலகின் எல்லா சாஸ்திரங்களைத் தேடியும், திருப்தியான பெயரை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை. கடைசியாக இந்தியாவிற்கு வந்த அவர், 'ஆனந்தா' (பேரானந்தத்தைக் குறிக்கும் சொல்) என்ற பெயரைக் கண்டுகொண்டார். அந்த இரசாயனத்திற்கு, 'ஆனந்தமைட்' என்று பெயர் சூட்டினார். தேவையான அளவு 'ஆனந்தமைட்' ஐ நம் உடலிலே உற்பத்தி செய்தால், எல்லா நேரமும் போதையிலேயே - ஆனால் முழுமையான விழிப்புடன் இருக்கலாம்.

யோக விஞ்ஞானம், வெளிப்பொருட்களின் உதவியில்லாமல், எல்லா நேரமும் போதையில் மூழ்கியிருக்கும் பேரின்பத்தை ஒருவருக்கு வழங்குகிறது. யோகிகள் இன்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல. சிற்றின்பங்கள் போதும் என்று இருந்துவிட அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் பேராசைக்காரர்கள். ஒரு குவளை மதுபானம் குடித்தால், கொஞ்சம் கிர்ரென்று ஏறும், ஆனால் மறுநாள் காலை தலைவலி மற்றும் பிற உடல் உபாதைகளோடு எழுந்திருக்க நேரிடும் என்று அவர்கள் அறிவார்கள். அது அவர்களுக்கு ஆகாது, போதாது. யோகாவின் உதவியோடு, எல்லா நேரத்திலும் முழுக் குடிகாரனைப் போல் போதையேறிய நிலையில், ஆனால் அதே நேரம் நூறு சதவிகிதம் நிதானமாகவும் விழிப்பாகவும் இருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையை எதையேனும் குடிப்பதாலோ, ஏதோ இரசாயனத்தை உட்கொள்வதாலோ அடைய முடியாது. இந்நிலையை அடைய வேண்டும் என்றால், உங்களுக்குள்ளேயே நீங்கள் போதைப்பொருள் உற்பத்தி செய்து, நுகர வேண்டும்.

இந்த விஞ்ஞானத்தை வழங்கியவர் ஆதியோகி! என்றும்... எக்கணமும் போதையில், பரவசத்தில், பேரானந்தத்தில் திளைத்த நம் ஆதியோகி சிவன்!!!

அடுத்த பதிவில்...

மயானத்தில் சிவன்... ஏன், எதற்கு?

சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்