ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் அவர்கள் சத்குருவிடம் லிங்கபைரவி, பைரவி யந்திரம் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள் ஆகியவை குறித்து விளக்கங்கள் கேட்டுப் பெறுகிறார்.

Question: சத்குரு, நீங்கள் லிங்கபைரவி பிரதிஷ்டை நடக்கும்போது சொன்னீர்கள், “சேகர், நீங்கள் ஒரு படைப்பாளி. ஆதலால் கண்டிப்பாக வரவேண்டும்” என்று! எனவே இன்று உங்களிடம் என்னுடைய முதல் கேள்வியே பைரவி பற்றிதான். சத்குரு, பைரவிக்கும் படைப்பாற்றலுக்கும் என்ன தொடர்பு என்று சொல்ல முடியுமா?!

சத்குரு:

இந்த உலகில் படைக்கப்பட்ட மிகச் சிறந்த படைப்பென்றால் நாம் அனைவரும் அறிந்துள்ள இந்த உடல்தான்! இதைப்போல் வேறொரு அற்புதமான நுட்பம்வாய்ந்த இயந்திரம் வேறெதுவுமில்லை! ஆண்தன்மையிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட பங்களிப்பு அதில் இருந்தாலும், அடிப்படையாக அது பெண்தன்மையின் கருவறையில் உற்பத்தி செய்யப்பட்டதுதான். பைரவி பெண்தன்மையின் உச்சபட்ச தன்மை கொண்டவளாக இருக்கிறாள், படைப்பாற்றலின் சாரமாகவே இருக்கிறாள்.

Question: எனது படைப்பாற்றலுக்கு எனது பெண்தன்மையின் இயல்புதான் அடிப்படை என்று நீங்கள் சொல்கிறீர்களா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஒரு மனிதன் படைப்பாளியாக இருக்கமுடியும் என நான் நம்பவில்லை! நாம் நம்மைச் சுற்றியுள்ள படைப்பை ஒரு குறிப்பிட்ட அளவில் ஆழமாகப் புரிந்து கொள்ளும்போது, நம்மால் அதனை பல்வேறு வழிகளில், பலவித கலவைகளில் மாற்றி வழங்கமுடிகிறது. அதுவே சமூகத்தில் படைப்பாகப் பார்க்கப்படுகிறது. எனவே உண்மையான படைப்பாளிகள் நாம் அல்ல. எவையெல்லாம் படைக்கப்பட முடியுமோ அவையெல்லாம் ஏற்கனவே படைக்கப்பட்டுவிட்டன. நாம் எப்போதுமே ஒரு புத்திசாலியான கைவினைக் கலைஞராக மட்டுமே இருக்கிறோம். நீங்கள் படைப்பாற்றல் என்ற வார்த்தையை விளக்கும்போது, அது ஏதோ ஒன்றை நீங்கள் உண்மையாகவே படைப்பதைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு திரைப்படம் எடுக்கும்போதோ அல்லது ஓவியம் தீட்டும்போதோ அல்லது நான் ஒரு கட்டிடத்தை கட்டுவதனாலோ, நான் பேசுவது அல்லது நான் எந்தவொன்றை செய்தாலும், இதெல்லாம் படைத்தல் ஆகாது. அது வெறுமனே ஏற்கனவே இருப்பதைப் பார்த்து புத்திசாலித்தனமாக இன்னொன்றை செய்வது மட்டுமே. நாம் வாழ்வின் பல்வேறு அம்சங்களை மிகக் கூர்ந்து கவனிப்பதனால், சாத்தியமற்றது என்று மற்றவர்கள் நினைக்கிற செயல்களையும், நம்மால் செய்ய முடிகிறது.

Question: சத்குரு, பரிமாற்றச் செயலுக்கும் பைரவிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நான் எப்படி அவளின் அங்கமாக மாறுவது அல்லது அவளின் மூலத்தை எப்படி ஏற்பது?

சத்குரு:

பைரவி தன்னிலையில் ஒரு பரிமாற்றமாகவே இருக்கிறாள். நாம் ‘ஜன்னல்’ (window)என்ற வார்த்தையை யோகத்தில் எப்போதும் பயன்படுத்துவோம். பில் கேட்ஸ் இதனை நம்மிடமிருந்து களவாடிவிட்டார். ஏனெனில் அவர் அளவிற்கு நாம் அதனை பிரபலப்படுத்தாமல் போய்விட்டோம். பரிமாற்றம் என்பது ஒரு புதிய ஜன்னல் திறப்பது போலத்தான்! நீங்கள் ஒரு புது ஜன்னலை திறப்பீர்களானால், உடனே இந்த படைத்தல் உங்களுக்கு முற்றிலும் வித்தியாசமான ஒன்றாக தெரியும்! ஒரு வேளை நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு வீட்டின் உள்ளேயே சிக்கியபடி வாழ்ந்திருந்தால், இப்போது நீங்கள் ஒரு ஜன்னலைத் திறந்தீர்களென்றால், நீங்கள் ஒரு கோயிலைப் பார்க்கும்போது, இந்த உலகமே ஒரு கோயில்தான் என்று நீங்கள் நினைப்பீர்கள். இன்னொரு ஜன்னலைத் திறந்தால், இந்த உலகமே ஒரு மலை என நினைப்பீர்கள். இன்னொரு விதமான ஜன்னலைத் திறக்கும்போது, இந்த உலகமே ஒரு நகரம் என நினைப்பீர்கள். இப்படி, பல லட்சம் ஜன்னல்களை உங்களால் திறக்க முடியும். அதே வேளையில், அவை ஒவ்வொன்றும் புதிதாக இருக்கும், அதுதான் படைப்பின் அற்புதம்!

மனிதன் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வழியில் செய்யும் வேலைகளை சற்று மேம்பட்ட நிலையில் செய்வதற்காகவே எப்போதும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. நாம் ஒன்றை சிறிய அளவில் செய்யும்போது இயந்திரங்கள் அவற்றைப் பெரிய அளவில் செய்கின்றன.

பைரவியே ஒரு ஜன்னலாக இருக்கிறாள். எதை வைத்தும் ஒரு ஜன்னலை உருவாக்க முடியும், ஆனால் அப்படி செய்யப்படவில்லை. நாம் இங்கே ஒரு ஜன்னலை நிர்மாணித்து எப்போதும் அது திறந்திருக்கும்படியாக செய்திருக்கிறோம். அப்போதுதான் அதிக மக்களால் அதனைக் காணமுடியும். மக்கள் தாங்களாகவே செய்ய இயலாதவற்றை பைரவியின் மூலமாக அனுபவித்து உணர்கிறார்கள், அறிகிறார்கள் மற்றும் பலவற்றை அடைகிறார்கள். பைரவி யந்திரத்தின் வாயிலாக தினமும் பைரவி சாதனா செய்யும் பல்லாயிரம் மக்களிடம் அவர்களின் அற்புத அனுபவம் குறித்து நீங்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும். அவையெல்லாம் நம்ப முடியாதவையாக இருக்கிறது. அவளை நீங்கள் ஒரு ஜன்னலாக உபயோகித்தால் அவள் திடீரென்று உங்களுக்காக திறன்மிக்க மற்றும் செயலாற்றல்கொண்ட புதியதொரு பரிமாணத்தைத் திறப்பாள்.

யந்திரங்கள்: அவை சக்தி இயந்திரங்கள்

இன்னொரு வகையில் பார்த்தால், அனைத்து தெய்வ வடிவங்களுமே யந்திரங்களாகவும் கூட குறிக்கப்படலாம். ஒரு வழியில், ஒரு யந்திரம் என்பது ஒரு இயந்திரம்தான். யந்திரம் என்ற வார்த்தை உண்மையில் வடிவம் என்ற பொருளைக் குறிக்கிறது. ஒரு இயந்திரம் என்பது பல வடிவங்களின் சிக்கலான தொகுப்பே. நாம் ஏன் இயந்திரங்களைக் கண்டுபிடித்தோம்? மனிதன் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட வழியில் செய்யும் வேலைகளை சற்று மேம்பட்ட நிலையில் செய்வதற்காகவே எப்போதும் இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. நாம் ஒன்றை சிறிய அளவில் செய்யும்போது இயந்திரங்கள் அவற்றைப் பெரிய அளவில் செய்கின்றன. நம்மால் நடக்க முடியும், எனவே நாம் சைக்கிளைக் கண்டுபிடித்தோம். நாம் மரங்களைப் போல நகரமுடியாதவர்களாய் இருந்தால், நீங்கள் சைக்கிளைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்.

தொலைபேசி, மிதிவண்டி, ஒரு மகிழ்வுந்து, ஒரு கணினி அல்லது வேறு சாதனங்கள் எதுவாயினும் நமது செயல்திறனையும் திறமையையும் மேம்படுத்திக்கொள்வதற்காகவே உள்ளன. அதே போல், ஒரு பைரவி யந்திரம் என்பதும் கூட அத்தகைய ஒரு கருவிதான். அவள் ஒரு பொருள் நிலையிலான இயந்திரமாக இல்லாமல், சக்தி நிலையிலான ஒரு இயந்திரமாக இருப்பதால், அவளுடன் பல்வேறு விதங்களில் நாம் செயலாற்ற வாய்ப்புள்ளது. நீங்கள் சரியான கடவுச்சொல்லை, ஒரு மந்திரத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவளுடன் தொடர்புகொண்டால், அவள் உங்களுக்காக செயலாற்றுவாள்! அப்போது திடீரென்று உங்கள் திறன் பல்வேறு நிலைகளில் மேம்படுவதை உங்களால் பார்க்கமுடியும்.

நீங்கள் நினைவுபடுத்திப் பார்த்தால், முதன்முதலில் நீங்கள் சைக்கிள் ஓட்டப் பழகியபோது அது புதிய நிலையிலான சுதந்திர உணர்வாக, அற்புதமாக இருந்தது. சைக்கிள் ஒரு சாதாரண இயந்திரம்தான் என்றாலும் நீங்கள் முதன்முதலில் சைக்கிள் ஓட்டிய அனுபவம், உங்கள் திறனை அடுத்த படிக்கு எடுத்து செல்லக்கூடிய அற்புதமான ஒன்றாக இருந்தது. இந்த பூமியில் மனிதர்கள் ஏன் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளார்கள் என்றால், நாம் கருவிகளையும் இயந்திரங்களையும் உருவாக்கியதால்தான். உங்களால் ஒரு சிறுத்தையை விட வேகமாக ஓடமுடியாது. உங்களால் ஒரு புலியுடன் சண்டையிட முடியாது. உங்களுக்கும் யானைக்கும் சிறிதளவு கூட சமம் கிடையாது. நீங்கள் ஒரு காளையுடனோ அல்லது பசுவுடனோ கூட சமனாக மாட்டீர்கள். ஒரே ஒரு காரணம், நாம் கருவிகளையும் இயந்திரங்களையும் உருவாக்கினோம், நமது வாழ்க்கை நிலை மேம்பட்டது.

இந்த யந்திரங்கள் முற்றிலும் வித்தியாசமான பரிமாணத்தில் செயல்படும் இயந்திரங்கள் ஆகும். அவை உள்நிலைக்காக உருவாக்கப்பட்டுள்ள இயந்திரங்கள். நான் தியானலிங்கத்தை ஒரு கருவி என அழைக்கும்போதெல்லாம் மக்கள் எதிர்ப்புணர்வு கொள்கிறார்கள். அவர்கள் “சத்குரு, தயவுசெய்து தியானலிங்கத்தை கருவி என அழைக்க வேண்டாம் - எங்களுக்கு தியானலிங்கம் ஒரு கடவுள்!” என்கிறார்கள். “அதுசரி... கடவுளும் ஒரு கருவிதான்” என நான் சொல்வேன். மக்கள் கோயிலுக்குச் செல்லும்போது, “சிவா, எனக்காக நீ இதைச் செய்” என்கிறார்கள்! அவர்கள் தங்கள் நல்வாழ்விற்காக அவரை ஒரு கருவியாக உபயோகிக்க முயல்கிறார்கள். மக்களுக்கு கருவி என்பது எவ்வளவு அற்புதமான ஒன்று எனப் புரிவதில்லை! கடவுள் அற்புதமானவரல்ல, கருவிகள் அற்புதமானவை! நான் உங்களை ஒரு மரச்சாமானில் உள்ள திருகாணியை கழற்றும்படி கூறினால் - உங்களது அனைத்து விரல்களின் நகங்களையும் இழந்தாலும், பற்கள் உடைந்தாலும் கூட அதனை கழற்ற இயலாது. நான் உங்களிடம் ஒரு ஸ்குரூ டிரைவரை கொடுத்தால் அந்த வேலை எளிதாக முடிந்துவிடும். அதுதான் கருவியின் சக்தி - உங்களால் செய்ய இயலாத செயல்களை செய்யும் சக்தியை கருவி உங்களுக்கு அளிக்கிறது.

நீங்கள் சரியான கடவுச்சொல்லை, ஒரு மந்திரத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவளுடன் தொடர்புகொண்டால், அவள் உங்களுக்காக செயலாற்றுவாள்! அப்போது திடீரென்று உங்கள் திறன் பல்வேறு நிலைகளில் மேம்படுவதை உங்களால் பார்க்கமுடியும்.

நீங்கள் தலைகீழாக நின்றாலும் கண்களை உருட்டி பல வகையில் பார்த்தாலும் உங்களுக்குள் தியானம் நிகழவில்லை. இப்போது நீங்கள் தியானலிங்கத்திற்கு வந்து அமர்ந்தவுடன் நீங்கள் தியான நிலைக்குச் செல்கிறீர்கள். தங்கள் வாழ்க்கை முழுவதிலும் தியானத்தை உணராத பலரும் அங்கே சென்று அமர்ந்து தியான நிலைக்கு செல்கின்றனர். இந்த மாதிரியான ஒரு சக்திவாய்ந்த கருவியாக அது இருப்பதனால்தான் ‘தியானலிங்கம்’ என அது அழைக்கப்படுகிறது. அதைப் போலவே பைரவியும், வேறு வகையில், நல்வாழ்விற்கான ஒரு கருவியாக இருக்கிறாள். நீங்களாகவே சென்றடைய இயலாத அத்தகைய நிலைகளுக்கு உங்களை கொண்டு சேர்ப்பதற்காகத்தான் இத்தகைய சக்திவாய்ந்த வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள்

நான் அத்தகைய இடங்களை அடைந்திருக்கவில்லை என்றால், என்னால் பைரவியை அவள் தற்போதுள்ள வகையில் உருவாக்கியிருக்க இயலாது. கருவிகளின் துணையில்லாமல், இயந்திரங்களின் துணையில்லாமல் அனைவரும் அந்த இடங்களை அடைய வேண்டுமென்றால், அது மிகவும் கடுமையான பணியாக இருக்கும். அடிப்படையாகவே, ஒரு தலைமுறை ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுச்செல்லும் ஒன்றை, அடுத்த தலைமுறை முதலிலிருந்து துவங்காமல் அல்லது முந்தைய படிநிலையை மீண்டும் செய்யாமல் அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவது எதனால் என்றால், கருவிகள் மற்றும் இயந்திரங்களின் இருப்பினால்தான்!

இந்த யந்திரங்கள் சக்திவாய்ந்த கருவிகளாக உள்ளன. இந்த வகை அறிவியலானது தற்போதைய நவீன அறிவியலை விட மிகவும் தொன்மை வாய்ந்ததாக, மிகவும் ஆழம் கொண்டதாக, மேலும் மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருப்பதோடு, இயற்கையாகவே தன்னுணர்வு சார்ந்து இயங்குகிறது. நவீன விஞ்ஞானம் பிரபஞ்சத்தின் பொருள்நிலையில் மட்டுமே கவனம் கொண்டுள்ளது. பொருள்நிலையை மாற்றியமைத்தால் நீங்கள் வாழ்வின் புறத்தோற்றத்தை மட்டுமே மாற்ற முடியும் - வாழ்வின் தரத்தை உங்களால் எந்தவிதத்திலும் மாற்றமுடியாது. நீங்கள் தினமும் சைக்கிள் ஓட்டுவதால், ஓடுவதால், உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உடலின் தோற்றம் மாறும், சமூக அளவில் சில மாற்றம் நிகழும். ஆனால், வாழ்வை உணரும் உங்கள் தன்மையில் எந்த மாற்றமும் நிகழாது. நீங்கள் வலிமையான தசை கட்டுகளை அடைந்திருக்கலாம். ஆனாலும் துன்பத்தில்தான் இருப்பீர்கள்.

ஆனால், பொருள்நிலை கடந்த பரிமாணத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இருக்கும்நிலை, நீங்கள் வாழ்வை உள்வாங்கும் விதம் என அனைத்தும் மாறும்! இந்த பிரபஞ்சத்துடனான உங்கள் அடிப்படையான தொடர்பும் மாறும். எப்படியிருப்பினும், வாழ்க்கை என்று சொல்லக்கூடிய எதையும் உண்மையில் உங்களால் செய்யமுடியாது. வாழ்க்கையில் உங்களுக்கு உள்ள வாய்ப்பு, கிரகிப்பது மற்றும் உணர்வது மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக இன்றைய உலகில் பொருள்நிலை குறித்த மடமையின் காரணமாக, அந்த பரிமாணம் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.

ஆசிரியர்: ஜூலை 22ஆம் தேதி யந்திரா வைபவம் நடைபெற இருக்கிறது. சத்குரு முன்னிலையில் லிங்கபைரவி யந்திரம் வழங்கப்படுகிறது. யந்திரத்தை பெறும்போது சக்திவாய்ந்த யந்திர செயல்முறைக்கான தீட்சையை சத்குருவிடமிருந்து நீங்கள் நேரடியாகப் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, மின்னஞ்சல் செய்யவும் yantra@lingabhairavi.org அல்லது கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 94890 45133