பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் மறைவது எப்படி? (Bermuda Triangle in Tamil)
கடந்த தலைமுறையில் ஒரு புரியாத புதிராக இருந்த பெர்முடா முக்கோணத்தைப் பற்றியும், ஒன்றை கற்பனையில் உருவாக்குவதைவிட உண்மையைக் கண்டறிவது தான் மிகவும் முக்கியமானது என்பதையும் சத்குரு இந்தக் கட்டுரையில் எடுத்துரைக்கின்றார்.
சத்குரு:
கப்பல் பயணம் சாகசம் நிறைந்தது
பெர்முடா முக்கோணம் கடந்த தலைமுறையில் ஒரு புரியாத புதிராக இருந்த ஒன்று. ஆனால் தற்போது அப்படி இல்லை. இன்று பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் சென்று மோதிக்கொள்வதில்லை. அது கப்பல் பயணம் செய்வதற்கு கடினமான ஒரு இடம்.
போஸ்பரஸில் பயணம் செய்வது எவ்வளவு கடினமானது என்பதை காண்பிக்கும் ஆவணப்படம் ஒன்று ஒரு செய்தி சேனலில் ஒளிப்பரப்பப்பட்டது. துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரின் இரு பகுதிகளுக்கு நடுவில் உள்ள நீர்நிலை போஸ்பரஸ் என்று அழைக்கப்படுகின்றது. இது பயணம் செய்வதற்கு கடினமான ஒரு இடம். தற்போது எட்டு ரேடார் நிலையங்கள் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கப்பல் பயணம் சற்று சிக்கலானது.
முற்காலங்களில் பல கப்பல்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிக்கொண்டு விபத்துகளுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு சில சாலை வளைவுகள் இருக்கும், அங்கே அன்றாடம் விபத்துகள் நடந்துகொண்டே இருக்கும். மக்கள் உடனடியாக, அங்கு சில பேய்கள் காத்துக்கொண்டு இருந்து, விபத்துகளை உருவாக்கி மேலும் பேய்களைச் சேர்த்துக்கொண்டு இருக்கின்றது என்று சொல்வார்கள்.
கெங்கேரி - சாலை வளைவு
பெங்களூரு மைசூரு சாலையில் கெங்கேரி என்ற ஒரு இடம் இருந்தது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது மூன்று அல்லது ஐந்து பேர் இந்த வளைவில் இறப்பார்கள். இது ஒரு சாலை, அங்கே ஏற்றத்தில் கூர்மையான வளைவு இருக்கும், கீழே ஒரு ரயில் பாதை இருக்கும். அந்த இடத்தில் தினமும் மக்கள் தங்கள் வண்டிகளை இடித்துக்கொள்வார்கள். 'ஆபத்தான, விபத்து நிகழும் இடங்கள்' என்று எழுதப்பட்ட பலகைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அதை படித்தப்பிறகு தான், அங்கே விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் போல.
Subscribe
இந்த வளைவில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிர் இழந்துள்ளார்கள். அதனால் இந்த இடம் பிரபலமான ஒரு இடம். என்னுடைய மோட்டார் சைக்கிளில் மைசூரு-பெங்களூரு பயணத்தை ஒரு மணி முப்பத்தி நான்கு நிமிடங்களில் பயணித்த சாதனை எனக்கு உள்ளது. அப்போது சாலைகள் இதுபோன்று இல்லை. நான் ஒருநாள் முழு வேகத்தில் பயணித்து வரும்போது, அந்த வளைவைக் கடக்கத் துவங்கினேன். கிட்டத்தட்ட அந்த வளைவின் மூலையில் சிக்கியிருப்பேன். அங்கு என்னுடைய வண்டியை நிறுத்தி, அந்த இடத்தை திரும்பிப் பார்த்தேன். நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும் என்றுகூட தேவையில்லை, அது மிகவும் எளிதான விஷயம் தான். ஆனால் அந்த சாலை, பார்ப்பவர்களை ஏமாற்றும் விதமாக இருந்தது.
ஏமாற்றக்கூடிய சாலை வளைவுகள்
அது ஒரு கூர்மையான ஏற்றம் போல தெரியும். அதனால் நீங்கள் தேவைப்படுவதைவிட அதிக அளவில் உங்களது வேகத்தை கூட்டுவீர்கள். மேலும் ஒரு சாலை அதுபோல திரும்பும்போது, ஒரு குறிப்பிட்ட விதத்தில் அது வடிவமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த சாலை அதுபோன்று வடிவமைக்கப்பட்டு, உங்களது பார்வையை சற்று ஏமாற்றும் விதமாக இருந்தது. இவை ராக்கெட் அறிவியல் ஒன்றும் இல்லை, உங்களுக்கு சாதாரணமாக தெரிந்த விஷயங்கள்தான். ஆனால் அந்த குறிப்பிட்ட சாலையின் அமைப்பு, அதன் பின்பக்கம் இருக்கின்ற மரங்கள், ரயில் பாதை செல்கின்ற விதம், மேலும் அதன் மறுபக்கம் இருக்கும் விதம் - இவை அனைத்தும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட காட்சியை உருவாக்குகிறது.
நான் கிட்டத்தட்ட அதில் சறுக்கியிருப்பேன்! அன்று அந்த சாலையில் மேலும் கீழுமாக அரைமணி நேரம் நடந்து கவனித்தேன். எவ்வாறு அங்கு என்னுடைய கட்டுப்பாட்டை இழந்தேன், என்ன தவறு நிகழ்ந்தது, இவையனைத்தையும் நான் புரிந்துகொள்ள விரும்பினேன். இன்று அரசு அந்த வளைவை அகற்றி நேரான ஒரு நெடுஞ்சாலையாக அமைத்துவிட்டார்கள். அதன் பிறகு கெங்கேரியில் யாரும் இறக்கவில்லை, பேய்களும் இல்லாமல் போய்விட்டது.
பெர்முடா முக்கோணத்தின் இரகசியம் (Bermuda Triangle in Tamil)
இதுபோன்று பெர்முடா முக்கோணமும் பயணிப்பதற்கு கடினமான ஒரு இடம். ஏனென்றால் அது ஒரு பழைய எரிமலைப் பகுதி. கடலுக்கு அடியில் சிறிய சிகரங்கள் ஈட்டி போன்று இருக்கும். இதைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு தான் ஒருவர் அங்கு பயணிக்க வேண்டும். இத்தாலி நாட்டின் கடற்கரையிலும் இந்த விதமான விபத்துகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
சில இடங்களில் பயணம் செய்வது கடினமான ஒன்றாக இருந்தது. அந்த இடங்களில் பயணிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட திறமை தேவைப்பட்டது. இன்று இந்த விஷயங்கள் மிகவும் குறைந்துவிட்டது. எவரும் பெர்முடா முக்கோணத்தினுள் சென்று மறைவது இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு கப்பலிலும் சிறுசிறு விஷயங்களையும் கூட காட்டுகின்ற பல உபகரணங்கள் தற்போது இருக்கின்றன. லட்சம் விஷயங்களையும் துல்லியமாக உங்களுக்கு காட்டுகின்ற சோனார் ரேடார்கள் மற்றும் ரேடியோ அல்டிமீட்டர்கள் இருக்கின்றன. அதனால் இப்போது கப்பல்கள் மோதிக்கொள்வதில்லை. முற்காலத்தில் கப்பல் மாலுமிகள் தங்களது பார்வை மற்றும் புலன் திறன்களை மட்டுமே வைத்து கப்பல்களை செலுத்தினார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
படைப்பின் கதவுகளை திறந்தறிதல்
அதனால், மக்கள் எப்போதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விஷயங்களையே தேடுகின்றார்கள். அது ஒன்றும் தவறான விஷயம் கிடையாது. இவர்கள் அனைவரையும் ஆர்வத்துடன் இருக்கின்ற மறைஞானத்தின் மாணவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். எதனாலென்றால், அவர்களுக்கு புரிந்துகொள்ளும் வழி தெரியாததால் ஏதோவொன்றை அவர்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒன்றை கண்டுபிடிப்பதற்கு பதிலாக அவர்களே ஏதோவொன்றை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதனால் நீங்களே எதையும் உருவாக்காமல், ஏதொவொன்றை கண்டுபிடிப்பது முக்கியமானது. ஏனென்றால் உண்மையான ஒன்றைக் கண்டறியலாம், இல்லாத ஒரு விஷயத்தை தான் நீங்கள் உருவாக்க முடியும். அதனால் எதனையும் நீங்கள் பொய்யாக உருவாக்காதீர்கள். ஏதோவொன்றை கற்பனை செய்வதைவிட படைப்பின் கதவுகளை திறந்து அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.