Question: நான் எப்பொழுதும் அழகை ஆராதித்திருக்கிறேன். மிகவும் அழகானவற்றைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, மிக எளிமையானவற்றில் இருக்கும் அழகைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி, இது நான் அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவமா? அல்லது என் பொழுதுபோக்கா? அல்லது ஒன்றை அழகாக உணர்வதில் ஏதேனும் ஆன்மீக முக்கியத்துவம் இருக்கிறதா?

சத்குரு:

இது பொழுதை நகர்த்துவதற்கு ஒரு நல்ல வழி. நீங்கள் ஏதோ ஒன்றை அழகு என்று முத்திரை குத்தும்போது, வேறு சிலவற்றை அசிங்கம் என்று முத்திரை குத்தத்தான் வேண்டும், இல்லையா? ஒன்றைப் பார்க்கும்போது எவ்வித நோக்கமும் இல்லையென்றால், அழகு என்பது அங்கே இருப்பதில்லை, இல்லையா? இந்தப் படைப்புகளில் ஏதோ ஒன்று உங்களை ஸ்தம்பிக்க வைக்கிறது என்றால் அது வேறு. ஆனால் ஒன்றை அழகு என்றும் மற்றொன்றை அசிங்கம் என்றும் முத்திரை குத்துவது வேறு.

ஏதோ ஒன்றை அழகு என்று கருதும் கணமே, நீங்கள் அதை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள். அதைப் பற்றி சுகமான எண்ணங்கள் தோன்றும்.

ஏதோ ஒன்றை அழகு என்று கருதும் கணமே, நீங்கள் அதை நோக்கி ஈர்க்கப்படுவீர்கள். அதைப் பற்றி சுகமான எண்ணங்கள் தோன்றும். அதைப் பற்றி சுகமான உணர்ச்சிகள் தோன்றும். அதேபோல் ஏதோ ஒன்றை அசிங்கம் என்று முத்திரை குத்திவிட்டால், அதை விட்டு விலகிதான் இருப்பீர்கள். அதைப் பற்றி கசப்பான எண்ணங்கள் மற்றும் கசப்பான உணர்ச்சிகள் தோன்றுவது இயல்பாகவே நிகழும். அதைத் தடுக்க முடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“உங்களுக்கு தீமை நினைப்பவர்கள் மீதும் நீங்கள் அன்பு செய்ய வேண்டும்” என்று கூறுவார்கள். அது மிகப்பெரிய பொய். ஏதோ ஒன்றை நீங்கள் கெட்டது என்று முத்திரை குத்திய உடனேயே, நீங்கள் அதை விட்டு எப்போதும் விலகியிருக்கவே விரும்புவீர்கள். ஏதோவொன்றை நல்லது என்று நினைத்தால் மட்டுமே நீங்கள் அதை நோக்கிச் செல்ல விருப்பப்படுவீர்கள்.

ஒருவிதத்தில், நீங்கள் எதை அழகு என்றும் அசிங்கம் என்றும் கருதுகிறீர்களோ, அதைத்தான் நல்லது என்றும் கெட்டது என்றும் சொல்கிறீர்கள். நல்லது கெட்டது என்று உணர்ந்ததை, கண்கள் மூலம் பார்க்கும்போது அதை அழகு-அசிங்கம் என்று பிரிக்கிறீர்கள், இல்லையா? நம் அன்றாட வாழ்வில் விருப்பு-வெறுப்பு என்பதை ஓரளவுக்கு பார்க்க வேண்டியிருக்கிறது. நாம் அவற்றை கையாளத்தான் வேண்டும். அது பரவாயில்லை. ஆனால் அத்தகைய விருப்பு வெறுப்புகள் உங்களுக்குள் நீங்கள் எந்த தன்மையில் இருக்கிறீர்கள் என்பதை பாதித்துவிடக் கூடாது.

‘ஆன்மீகம்’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது அதற்கு அர்த்தம் என்னவென்றால், ‘நான் அனைத்தையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன் அல்லது அனைத்தையும் விலக்கிவிட விரும்புகிறேன்’ என்பதுதான். அதாவது அனைத்தையும் எனக்குள் ஒரு பாகமாக சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன் அல்லது ‘நான்’ உட்பட அனைத்தையும் விலக்கிவிட விரும்புகிறேன். எல்லையற்றுப் போகவேண்டும் அல்லது பூஜ்ஜியமாகிவிட வேண்டும். இப்படி இரண்டே வழிகள் தான். இரண்டு வழிகள் மட்டும் தான். இந்த இரண்டுக்கு மேல் வேறு வழி எதுவும் கிடையாது. அப்படிச் செல்வது ஒரு பொறியில் சிக்கிக்கொள்வதற்குச் சமம். எனவே இரண்டே வழிகள் தான் - எல்லையற்றுப் போவது அல்லது பூஜ்ஜியம் ஆவது. அதனால் நீங்கள் அனைத்தையும் உங்களோடு சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அனைத்தையும் ‘ஒன்றுமில்லை’ என்று புறக்கணிக்கலாம். உலகின் இந்தப் பகுதியில் இந்த இரண்டு வழிகளை மட்டும் தான் நீங்கள் பார்க்க முடியும்.

சில யோகமுறைகள் அனைத்தையும் மதிப்புடன் பார்க்கும்படி கூறுகிறது. மரத்திலும், எல்லாப் பொருளிலும் இறைவன் இருப்பதை உணரச் சொல்கிறது. அதனால்தான் இந்தக் கலாச்சாரத்தில் சிறுசிறு கல்லைக்கூட கடவுளாக வணங்குவதை பார்க்கமுடியும். ஏனென்றால் கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்று அவர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு நாயாக இருந்தாலும், பசு, பாம்பு போன்ற எதுவாக இருந்தாலும் அதை வணங்க வேண்டும். ஏனென்றால் அனைத்துமே இறைவன் தான். இறைவனைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

கிழக்கத்திய வாழ்க்கை முறையில், சாத்தான் என்று எதுவும் இல்லை. அனைத்துமே இறைவனின் வெளிப்பாடுதான்.

சிவனும் தனக்கு கீழ்தான்...

ஏதோவொன்றை எப்போது தீயது என்று ஒதுக்குகிறீர்களோ, அப்போது அதை உங்களுக்குள் இணைத்துக்கொள்ள முடியாது.

இன்னொருவிதமான யோக முறையும் உண்டு. அவர்கள் அனைத்தையுமே துச்சமாக பார்ப்பார்கள். அவர்கள் அனைத்தையுமே தூற்றிக் கொண்டிருப்பார்கள். எதையும் விட்டு வைக்கமாட்டார்கள். அனைத்தையுமே இறைவனாகப் பார்ப்பவர்கள், தினமும் காலையும் மாலையும் வழிபாடு செய்வார்கள். ஆனால் அந்த வகை யோகிகள், அனைத்தையும் துச்சமாகப் பார்ப்பவர்கள், காலையும் மாலையும், இறைவனையும், அவன் படைத்த அனைத்தையும், நன்றாகத் தூற்றுவார்கள். ஒவ்வொரு நாளும் காலையில், விதவிதமான, தேர்ந்தெடுத்த கெட்ட கெட்ட வார்த்தைகளால் சிவனைத் தூற்றுவார்கள். நாள் துவங்கும்போதே, சிவனையும், அவருடைய தாயையும், மற்ற அனைத்தையும் திட்டுவார்கள். ஏனென்றால், படைத்தவனையும் படைப்பையும் அவர்கள் துச்சமாக, கீழ்த்தரமானதாகக் கருதுகிறார்கள்.

இப்படி அனைத்தையும் துச்சமாகப் பார்ப்பது மிகவும் வேகமான வழிதான் என்றாலும் மிகவும் கடினமான, சவாலான வழி. அத்தகைய மனிதர்கள் யாருடனும் சேர்ந்து இருக்க முடியாது. எப்போதும் தனியாகத்தான் இருப்பார்கள். ஏனென்றால் அடுத்தவரை எப்போதும் துச்சமாக, கீழ்த்தரமானவராகத் தான் அவர்கள் நினைப்பார்கள். தங்களையுமே அப்படித்தான் நினைத்துக் கொள்வார்கள். எனவே அவர்களால் யாருடனும் இருக்க முடியாது. அது மிகவும் வேகமான வழி, ஆனால் மிகமிகக் கடினமான வழி.

அனைத்தையும் தெய்வமாகப் பார்ப்பது...

இன்னொரு வழி அனைத்தையும் இறைவனாகப் பார்ப்பது. அது உங்களை இனிமையானவராக வைத்திருக்கிறது. இந்த சமூக சூழலுடன் பொருந்தி வாழ மிகவும் பொருத்தமாக இருக்கும் வழியும் கூட. நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு மனிதரிலும் இறைமையை காணும்போது இந்த சமூகத்துடன் சேர்ந்து வாழ மிகவும் சுமூகமான வழியாகவும் இருக்கிறது.

ஆனால் இது நல்லது, அது தீயது என்று சொல்லும் கணமே நீங்கள் பிளவுபட்டுப் போகிறீர்கள். இது அழகு, அது அசிங்கம், இது தெய்வீகம், அது பிசாசு என்று எப்போது நீங்கள் பிரிக்க ஆரம்பிக்கிறீர்களோ, பிறகு அதற்கு ஒரு முடிவில்லாமல் போகிறது. உண்மையிலேயே அது முடிவில்லாத பொறி தான். கவனித்துப் பாருங்கள். நீங்களே இப்படிச் சொல்லி உலகைப் பிரிக்கிறீர்கள். பிறகு அனைத்தையும் உங்களுக்குள் இணைத்துக்கொள்ள முயற்சி செய்கிறீர்கள். இது உங்களை நீங்களே தோற்கடிக்கும் முயற்சி, அவ்வளவுதான்.

மனிதர்கள் இன்னும், மிக வலிமையான விருப்பு-வெறுப்புகளை பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். அப்படி இருக்கும்போதும், அவர்கள் ஆன்மீகப் பாதையில் நடக்க முயற்சி செய்கிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு ஆன்மீகம் மிகவும் கடினமாகத் தோன்றுகிறது. உண்மையில் ஆன்மீகம் கடினமல்ல.

நீங்கள் மிகவும் வலிமையான விருப்பு-வெறுப்புகளை உருவாக்கிவிட்டீர்கள். விருப்பு வெறுப்பு ஏன் தோன்றுகிறது என்றால் ஏதோ ஒன்றை நல்லது என்றும் மற்றவற்றை தீயது என்றும் அடையாளப்படுத்திவிட்டீர்கள். ஏதோவொன்றை எப்போது தீயது என்று ஒதுக்குகிறீர்களோ, அப்போது அதை உங்களுக்குள் இணைத்துக்கொள்ள முடியாது. அது நிச்சயம் முடியாது. நீங்கள் எவ்வளவு முயன்றாலும் அது நடக்காது. நீங்கள் இணைத்துக் கொண்டதாக நடிக்கலாம். தீயது என்று கருதும் ஒன்றுடன் நீங்கள் இனிமையாக இருக்கலாம், பேசலாம், ஆனால் தீயது என்று முத்திரை குத்திய கணமே அதை உங்களுக்குள் சேர்த்துக்கொள்வது நடக்காது. எனவேதான் ஆன்மீகப் பாதை உங்களுக்கு பெரும் போராட்டமாக மாறிவிடுகிறது.