அதிகமாக யோசிக்க வைக்கும் ஜென்புதிர் - காரணமும் பின்னணியும்
கோன் என்பது ‘யோசி, யோசி, யோசி’ என்று யோசிக்க வைத்து, யோசனைகளே அற்றுப்போவதற்கு வழி செய்வதற்காகத் தயாரிக்கப்பட்டது. மனதில் காரண காரியங்கள் அற்றுப்போகும் வரை பதில் தேட வைப்பது. எந்த முடிவுக்கும் வர முடியாமல் மனம் திகைத்திருக்கும்போது, உள்ளே சடாரென்று ஒரு பிரகாசம் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
ஜென்னல் பகுதி 21
குரு கேட்டார்...
“இரண்டு பேர் மழையில் நடந்தனர். ஒருவர் நனையவில்லை. ஏன்?”
சீடர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் சொல்லினர்.
“குடை...”
“மழை கோட்...”
“மர நிழல்..”
குரு எல்லாவற்றையும் ‘தவறு’ என்றார். “என் வார்த்தைகளில் கவனம் வைத்தீர்களே தவிர, உண்மையை நீங்கள் உணரத் தலைப்படவில்லை. இருவரும்தான் நனைந்தனர்.”
சத்குருவின் விளக்கம்:
Subscribe
(தமிழில் சுபா)
ஒரு புதிர் போலத் தோன்றினாலும், புதிர் இல்லை. இவற்றை ஜென்கோன்கள் என்று அழைப்பர். இவை எதோ ஒரு கருத்தைச் சொல்வதற்காக உருவாக்கப்படவில்லை. ஒரேவிதமாகச் சிந்திக்கப் பழகிய மனதைத் தட்டி எழுப்புவதற்காக உருவாக்கப்பட்டவை. உங்கள் தர்க்கரீதியான மனதை ஒரு வழி பண்ணுவதற்கு உருவாக்கப்பட்டவை.
எந்தக் கேள்வி கேட்கப்பட்டாலும், அதற்குக் காரண காரியங்களைக் கொண்டு பதில் தரும் மனதை அதிரடிப்பதற்காகப் பலவிதமான ஜென்கோன்களை குருமார்கள் பயன்படுத்தினர்.
கோன் என்பது ‘யோசி, யோசி, யோசி’ என்று யோசிக்க வைத்து, யோசனைகளே அற்றுப்போவதற்கு வழி செய்வதற்காகத் தயாரிக்கப்பட்டது. மனதில் காரண காரியங்கள் அற்றுப்போகும் வரை பதில் தேட வைப்பது. எந்த முடிவுக்கும் வர முடியாமல் மனம் திகைத்திருக்கும்போது, உள்ளே சடாரென்று ஒரு பிரகாசம் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
தர்க்கரீதியான தீர்மானங்களில் இருந்து விடுவித்து, வாழ்க்கையின் உண்மையான அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பல ஜென்கோன்களில் மிகப் பிரபலமான கோன்: ‘ஒரு கை ஓசையைக் கேட்டிருக்கிறாயா?’
காரண காரியங்கள் மனரீதியான தீர்மானங்கள், உண்மையில் இருந்து விலகி இருக்கக்கூடியவை. உங்கள் மனதில் சதா நிகழும் தர்க்கங்களை முற்றிலும் அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கோன் கதைகளில் இதுவும் ஒன்று.
தர்க்கரீதியான விளக்கங்களைத் தாண்டிப் போனால்தான் உயிர் பற்றிய தவறான தீர்மானங்களில் இருந்து விடுபட முடியும். வாழ்க்கை பற்றி அனுபவம் இன்றிச் செய்த முடிவுகளில் இருந்து வெளியே வர முடியும். ஆன்மீகத்துக்கான வாய்ப்பு அப்போதுதான் பிறக்கும்.
பழைய முடிவுகளில் இருந்து உங்களால் விலகிட, தருணத்துக்குத் தருணம் வாழ முடியுமானால், வாழ்க்கை மாபெரும் அனுபவமாக வெடித்து மலரும்!
ஆசிரியர்:
என்றைப் போலவும் இன்றைக்கும் சத்குரு அவர்களின் கருத்துக்கள் ஆணித்தரமானவை, ஆழமான அர்த்தம் பொதிந்தவை. சத்குரு அவர்களுடன் இரட்டை எழுத்தாளர்கள் சுபா அவர்களது உரையாடலின் பயனாய், ஆன்மீகத்தின் சாரம்கொண்ட ஜென் கதைகள் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கின்றன. "ஜென்னல்" என்று புத்தக வடிவம் பெற்றுள்ள இந்த சுவாரஸ்யமான கதைகள் அனைத்து முன்னணி கடைகளிலும் விற்பனைக்கு உள்ளன.
விவரங்களுக்கு: 0422 2515415, 2515418