‘ஆசையே துன்பத்திற்கு காரணம்!’ என்று புத்தர் சொன்னதாக இன்று பலர் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், நம் மனதில் உருவாகும் ஆசை பிரபஞ்சத்தையே உருவாக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தது என சத்குரு சொல்கிறார். இது எப்படி சாத்தியம்... அதன் சூட்சுமம் என்ன... தொடர்ந்து படித்தறியலாம்!

Question: சத்குரு, நான் நிறைய நிர்வாகத்திறன் புத்தகங்கள், சுயஉதவிப் புத்தகங்களை படித்திருக்கிறேன். அவற்றில், எண்ணங்கள் மிக வலியது என்றும், அவை எப்படி இந்த உலகத்தையே வடிவமைக்கின்றன என்றும் எழுதியிருந்தார்கள். அதோடு, இன்று நாம் உருவாக்கும் எண்ணங்கள் நிச்சயம் உண்மையாகும் என்றும் சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

சத்குரு:

எண்ணங்கள் பற்றி அவர்கள் சொன்னது போதாது என்று இன்னும் வேறு எண்ணங்கள் வேண்டுமா? எண்ணங்கள் பற்றிய எனது எண்ணங்களா..?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எண்ணம் என்பதற்கு இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று, அந்த எண்ணத்தின் கரு. அந்த கரு, அந்த மையப் பொருள் நிச்சயம் உங்களுடையது அல்ல. இத்தனை காலம் நீங்கள் வாழ்ந்தபோது, எத்தகைய பதிவுகள் உங்களுக்குள் நுழைந்ததோ அவை தான் எண்ணத்தின் கருவாக இருக்கும். ஆனால் எண்ணங்களின் அடிப்படை என்று பார்த்தால், அது உங்கள் மனதில் தோன்றும் ஒரு குறிப்பிட்ட அதிர்வு. இந்த அதிர்வை, மையப் பொருள் இல்லாமலும் உருவாக்கலாம்.

உங்கள் மனதில். எண்ணங்களைக் கொண்டு, வேண்டிய வகையில் உங்கள் மனதில் அதை உருவாக்குவீர்கள். அடுத்து, அதன் பிம்பம் காகிதத்தில் தோன்றலாம். அதன்பின் அது நிஜத்தில் எழும்பி நிற்கும்.

பொருள் நிலையில் உங்களுக்கு வேண்டியவற்றை உருவாக்கிக்கொள்வது பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், அதில் எண்ணங்களுக்கு நிச்சயம் பங்கு உண்டு. உங்கள் எண்ணங்களின் தெளிவானது நீங்கள் என்ன உருவாக்க விரும்புகிறீர்களோ அதன் உருவாக்கத்தில் நிச்சயம் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் பிழைப்பு தாண்டி, வாழ்வை அதன் ஆழத்தில் அணுகும்போது, எண்ணங்களுக்கு அங்கு வேலையில்லை. இவ்வுலகில் உங்கள் பொருள் வாழ்விற்கு என ஏதோ ஒன்றை நீங்கள் உருவாக்க நினைக்கிறீர்கள் என்றால், உதாரணத்திற்கு ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள நினைக்கிறீர்கள் என்றால், முதலில் அந்த வீட்டை எங்கு உருவாக்குவீர்கள்? உங்கள் மனதில். எண்ணங்களைக் கொண்டு, வேண்டிய வகையில் உங்கள் மனதில் அதை உருவாக்குவீர்கள். அடுத்து, அதன் பிம்பம் காகிதத்தில் தோன்றலாம். அதன்பின் அது நிஜத்தில் எழும்பி நிற்கும். உங்கள் மனம் எனும் வரைபலகையில் அந்த வீட்டை உருவாக்காமல், அதை நிஜத்தில் உருவாக்க முடியாது. ஏனெனில், ஆசையின்றி எதுவும் உருவாகாது. ஆசையில்லையேல், செய்வதற்கு வேலையும் இல்லை.

ஆசை என்பது எண்ணத்தின் ஒரு பரிமாணம் தான். ஏதோ ஒன்று வேண்டும் என்று நீங்கள் பேசும்போது, அதைப் பற்றிய எண்ணத்தை மட்டும் அல்ல, ஆசை பற்றியும் பேசுகிறீர்கள். இப்போது, வாழ்வில் ஏதோ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சொல்லும்போது, அதை வெறும் ஒரு எண்ணமாக சொல்கிறீர்களா, அல்லது அந்த எண்ணத்தையே ஒரு ஆசையாக சொல்கிறீர்களா? எண்ணத்தைத்தான் ஒரு ஆசையாக சொல்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் ஏதோ ஒன்று நடக்கவேண்டும் என விரும்புகிறீர்கள். நோக்கம் இல்லாத ஒரு எண்ணம் வெறும் எண்ணம் மட்டுமே. ஆனால் நோக்கத்துடன் கூடிய எண்ணம் ஒரு ஆசை.

நீங்கள் எதற்கு ஆசைப்பட முடியும்? உங்களுக்குத் தெரியாத ஒன்றிற்கு நீங்கள் ஆசைப்பட முடியுமா? உங்களுக்கு என்ன தெரியுமோ, அதற்குத் தான் நீங்கள் ஆசைப்பட முடியும். அல்லது உங்களுக்குத் தெரிந்ததின் சற்று மிகையானதற்கும் நீங்கள் ஆசை கொள்ளலாம். ஆனால் இதற்கு முன் உங்களுக்கு அறிமுகமே இல்லாத ஒன்றிற்கு நீங்கள் ஆசைப்பட முடியுமா? முடியாது. வேறு வார்த்தையில் சொல்வதானால், ‘ஆசைப்படுவது’ என்பது உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதை, நீங்கள் ஏற்கனவே அறிந்ததைதான் உருவாக்கித்தரும். ஆனால் உள்நிலை உணர்தல் போன்ற வாழ்வின் பிற சாத்தியங்கள் உங்களுக்கு இன்னும் அறிமுகம் ஆகவில்லை. எனவே ஆசைப்படுதல் என்னும் செயல்முறை, அந்த சாத்தியங்கள் இதுவரை உங்களுக்கு அறிமுகமாகாத காரணத்தால் அந்த சாத்தியங்களை முற்றிலுமாய் நீக்கிவிடும். இந்த அர்த்தத்தில் தான் கவுதம புத்தர், ‘ஆசையை அகற்றுங்கள், உங்களுக்கு முக்தி கிடைத்துவிடும்’ என்று சொன்னார். ஏனெனில் ஆசை என்பது ஏற்கனவே அறிமுகமானதை மட்டுமே உங்களுக்கு உருவாக்கித் தரும். ஆனால் நம்ப முடியாத வகையில், புத்தரின் கூற்றுக்குத் தவறாக அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டன.

இதுவரை நீங்கள் ஆசைப்பட்ட பொருட்கள், மனிதர்கள் எல்லாம் உங்கள் வீட்டு வாசலில் வந்து சேர்ந்துவிட்டால், உங்களால் வாழ முடியுமா? அதனால் பெரும்பாலான ஆசைகள் நிறைவேறாமல் போவது நல்லதுதான்.

ஆசை என்றாலே அது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றிற்குத் தான் வரமுடியும். உங்களுக்குத் தெரிந்தவற்றிற்கு மட்டும் ஆசைப்படும்போது, புதிதாய் எதுவும் உங்களுக்கு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. உங்கள் முழு வாழ்க்கையும் உங்களுக்குத் தெரிந்தவற்றை அடைவதற்கே செலவு செய்துவிடுவீர்கள். உங்களுக்கு எது தெரியாதோ அது உங்கள் வாழ்வில் எப்போதும் நிகழப் போவதில்லை. இதனால் தான் புத்தர் சொன்னார், ‘ஆசையற்று இருங்கள்’ என்று. ஆனால்... அது எத்தனை பெரிய தவறாகிவிட்டது!

அன்றிலிருந்து, ‘ஆசையை விட்டுவிட்டால் முக்தி கிடைத்துவிடும்’, ‘ஆசையை விட்டுவிடு, சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம்’ என்று பலவாறாக மக்கள் பேசத் துவங்கிவிட்டார்கள். சரி, நான் கேட்கிறேன்... ‘முக்தி கிடைப்பதும், சொர்க்கத்திற்குப் போவதும், அப்படி என்ன சிறிய ஆசையா?’ ‘இல்லையில்லை. எனக்கு ஆசையெல்லாம் எதுவுமில்லை... கடவுளை அறியவேண்டும் அவ்வளவு தான்’. அடக்கடவுளே! இது தான் இருப்பதிலேயே மிகப் பெரிய ஆசை! ‘எனக்கு நிறைய பணம் வேண்டும்’ என்பது ஒன்றும் பெரிய ஆசையில்லை. அது அல்ப ஆசை. ‘எனக்குக் கடவுளையே அறியவேண்டும்’ என்பது தான் இருப்பதிலேயே மிகப் பெரிய ஆசை, இல்லையா? இதுதான் பேராசையின் உச்சம். ஆம், ஏனெனில் படைப்பு போதாது, எனக்குப் படைத்தவனே வேண்டும் என்றல்லவா கேட்கிறீர்கள்!

நாம் ஏற்கனவே நமக்கு வகுத்துக் கொண்டுள்ள எல்லைகளுக்குள் வாழ்வை நடத்திக் கொள்வது போதுமென்றால், ஆசை என்பது சரிதான். அது நமக்கு வேண்டியதை உருவாக்கக் கைகொடுக்கும். ஆனால் இப்போது உங்கள் கட்டுப்பாடுகளைத் தாண்டி, வாழ்வை இன்னும் ஆழமாக உணர நீங்கள் விரும்புகிறீர்கள். இப்போது உங்களுக்கு ஆசை உதவ முடியாது. ஏனெனில் நீங்கள் ஏற்கனவே அறிந்ததற்கு மட்டும்தான் ஆசை கொள்ள முடியும். உங்களுக்கு என்ன தெரியாதோ அதற்கு ஆசை கொள்ள முடியாது.

ஒரு எண்ணம், ஒரு கருப்பொருளை மையமாக வைத்தும் உருவாகலாம், கரு இல்லாமலும் உருவாகலாம். அதே போல் ஆசையும் ஏதாவது ஒரு பொருளை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது பொருள் இல்லாமலும் உருவாகலாம். ஆனால் ஆசைக்கு ஒரு பொருளை இலக்காக வைக்கிறீர்கள் என்றால், அப்பொருள் உங்கள் மனதிற்கு ஏற்கெனவே பரிச்சயமான ஒன்றாய் தான் இருக்கமுடியும். இது வேண்டும் அல்லது இவர் வேண்டும் என்பதற்காக இல்லாமல், எந்த நோக்கும் இல்லாத ஆசையை மிகப் பெரிதாக நீங்கள் வளர்த்துக் கொண்டால், அப்போது உங்கள் வாழ்வில் நடக்கவேண்டியது எல்லாம் தானாய் நடப்பதை நீங்களே உணர்வீர்கள். இதை எப்படி செய்வது என்று மட்டும் நீங்கள் தெரிந்துகொண்டால், பின்னர் எதற்காகவும் நீங்கள் யோசிக்கவோ, வேண்டிக் காத்திருக்கவோ, வாய்விட்டுக் கேட்கவோ தேவையிருக்காது. எல்லாம் தானாகவே நடக்கும்.

உங்கள் ஏக்கத்திற்கு காரணம் இல்லாமல், பொருள்-நோக்கு இல்லாமல் இருந்தால், இந்த உலகில் நீங்கள் எதையுமே செய்ய வேண்டியிருக்காது. கடவுளே உங்கள் சேவகனாகி, உங்கள் வேலையை செய்து தருவார். அவரை நீங்கள் வணங்க வேண்டாம், அவரிடம் நீங்கள் எதையும் கேட்கவேண்டாம், எதற்கும் ஆசைப்பட வேண்டாம். நீங்கள் ஒரு பெரும் ஏக்கத்தை, காரணமற்ற, பொருள்நோக்கற்ற ஒரு மாபெரும் ஏக்கத்தை உருவாக்குங்கள். அதுவே ஒரு பெரும் சக்தியாய் உருவெடுக்கும். ஆம், நீங்கள் ஆசை என்று அழைப்பது ஒருவித சக்தி. இப்போது ஆசை எனும் சக்தியை எதனெதன் பின்னோ செலுத்தி, அந்த சக்தியை விரயம் செய்து கொண்டிருக்கிறீர்கள். எதைப் பார்த்தாலும், உடனே அது வேண்டும் என்று அதற்காக ஆசை கொள்வது தான் தற்போது உங்கள் மனதின் குணமாக இருக்கிறது. இதுவரை நீங்கள் ஆசைப்பட்ட பொருட்கள், மனிதர்கள் எல்லாம் உங்கள் வீட்டு வாசலில் வந்து சேர்ந்துவிட்டால், உங்களால் வாழ முடியுமா? அதனால் பெரும்பாலான ஆசைகள் நிறைவேறாமல் போவது நல்லதுதான். நீங்கள் ஆசைப்பட்டது எல்லாம் உங்களுக்கு நடந்துவிட்டால், உங்களுக்குப் பெரும்பாடாகிப் போய்விடும்.

உங்கள் ஆசையை, எந்த ஒரு நோக்கத்துடனும் இணைக்காமல், சும்மா வெறுமனே ஒரு ஆழமான ஏக்கமாய் வைத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கை மிக அற்புதமாக நடக்கத் தொடங்கிவிடும். நீங்கள் இதுவரை கற்பனை கூட செய்யாதவையும் உங்களை நோக்கி நடைபோடும்.

உங்கள் ஆசையை, எந்த ஒரு நோக்கத்துடனும் இணைக்காமல், சும்மா வெறுமனே ஒரு ஆழமான ஏக்கமாய் வைத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கை மிக அற்புதமாக நடக்கத் தொடங்கிவிடும். நீங்கள் இதுவரை கற்பனை கூட செய்யாதவையும் உங்களை நோக்கி நடைபோடும். ஏனெனில் அப்போது உங்கள் உயிர்சக்தி அதன் உச்ச தீவிரத்தில் இருக்கும். உங்கள் உயிர்சக்தியை அதன் உச்சத்தில் வைத்திருந்தால், மிக மிக அழகானவற்றை எல்லாம் அது தன்பால் ஈர்த்துவிடும். அது வேறு எப்படியும் இருக்க முடியாது.

வாழ்வில் சில குறுகிய இலக்குகளை மட்டும் நீங்கள் வைத்திருந்தால், அதற்காக ஆசை உருவாக்கி, அதை நிவர்த்தி செய்துகொள்ளலாம். ஆனால் உங்கள் வாழ்வின் ஏக்கம், இதுவரை நீங்கள் அறிந்திருக்கும் எல்லாவற்றையும் தாண்டிப் போகவேண்டும் என்பதாக இருந்தால், அப்போது ஆசை எந்த நோக்கமும் இல்லாமல் இருக்கவேண்டும். பாவஸ்பந்தனா நிகழ்ச்சியில் (ஈஷாவில் நடக்கும் உயர்நிலை வகுப்பு), மனித வாழ்வில் சாத்தியம் என்று யாரும் நினைத்திடாத அளவிற்கு பரவசத்தில் அவர்கள் திளைப்பதை நீங்கள் பார்க்கமுடியும். இந்தப் பரவசம் எல்லாம் உங்களுக்குள்ளேயே இருப்பதுதான். ஆனால் தொடர்ந்து நடக்கும் விரயத்தில் அதன் வீரியம் காணாமற் போகிறது. வெறும் மூன்றே நாட்கள், உங்கள் எண்ணங்களுக்கு எவ்வித நோக்கமும் அளிக்காமல், நீங்கள் சும்மா அமர்ந்திருந்தாலே உங்களுக்குள் பரவசம் வெடித்துக் கிளம்பும்.

இந்த உயிர்சக்தி சாதாரணமானது அல்ல. இதுதான் படைப்பின் மூலம். இதை விரயம் செய்யாதிருந்தால், அதை ஒரு குறிப்பிட்ட வகையில் இருக்க நீங்கள் அனுமதித்தால், அது வெடித்துக் கிளம்பும். ஏனெனில் அதன் திறன், வெறும் ஒரு உடலை மட்டும் உருவாக்குவதோடு நிற்பதல்ல. உங்களுக்குள் இருக்கும் அந்த சக்தி, இப்பிரபஞ்சத்தையே உருவாக்கக்கூடிய சக்தி. அதனோடு தொடர்பு ஏற்பட்டுவிட்டால், உங்கள் வாழ்க்கை முற்றிலுமாய் மாறிவிடும்.

அதோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், இது, அது என்று எதன் பின்னும் ஓடி உங்கள் உயிர்சக்தியை நீங்கள் விரயம் செய்யக்கூடாது. இந்த அர்த்தத்தில் தான் ‘ஆசையற்ற’ நிலை பேசப்பட்டது. இந்த அர்த்தத்தில் தான் துறவு, பிரம்மச்சரியம், சந்நியாசம் எல்லாம் பேசப்பட்டது. ஆனால் இன்று அதற்கெல்லாம் சம்பந்தமே இல்லாத அளவிற்கு அவற்றைத் திரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் உபதேசிக்க ஆரம்பித்து விட்டார்கள், ‘ஆசையை விடு. இதைச் செய், அதைச் செய்’ என்று. உங்கள் ஆசையை நீங்கள் துறக்கமுடியாது. ஆனால் நீங்கள் ஆசையில் இருந்து நோக்கத்தை அகற்றிவிட்டு, அதாவது ஆசையின் கருவை அகற்றிவிட்டு அதை பெரிய அளவில் வளர அனுமதிக்கலாம், அப்போது அந்த ஆசை கட்டுக்கடங்காது வளர்ந்து பொருள்நிலையின் எல்லைகளைக் கடந்து விரிவடையும்.