ஆரோக்கியத்தை உங்கள் ஆளுமையில் வைத்திருக்க..
பிரபல அமெரிக்க மருத்துவரும் அறிஞரும் நியூயார்க்கின் முன்னணி பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ்ஸின் ஆசிரியருமான திரு.மார்க் ஹைமன் அவர்களும் சத்குருவும் ஆரோக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்கின்றனர். ஏழையும் பணக்காரரும் நோயில் விழுவதற்கு உணவே காரணமாக இருப்பதையும், நம் வாழ்க்கைமுறை சீர்கெட்டதற்கான காரணத்தையும், இதனை சரிசெய்ய சத்குருவின் திட்டத்திலுள்ள 3 படிநிலைகளையும் பற்றி தொடர்ந்து படித்தறியலாம்!
ஏழையும் பணக்காரரும் நோயில் விழ, உணவே காரணமா?
DR.ஹைமன்: சத்குருவுடன் ஆரோக்கியம் குறித்து பேசுவதற்கு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான வாய்ப்பு இது. இன்றைக்கு உலகில் நோய்வாய்ப்படுதல் மிகுதியாகக் காணப்படுவதால் அது குறித்துப் பேச வேண்டியது முக்கியமாக இருக்கிறது. மனித இனத்தின் பரிணாமத்தில் முன்பு எப்போதும் கண்டிராத அளவுக்கு ஒரு நெருக்கடியை நாம் சந்தித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. தொற்று நோய் மூலம் இறப்பதைப்போன்று, இரண்டு மடங்கு மக்களைக் கொன்று கொண்டிருக்கும் நாள்பட்ட நோய்களை இப்போது நாம் உலகெங்கும் எதிர்கொண்டிருப்பதால் எனக்கு இது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. இருநூறு கோடி மக்களுக்கும் அதிகமானோர் அதிக பருமனாக இருப்பதை நாம் காண்கிறோம். பசித்த வயிறோடு உறங்கச் செல்லும் மக்களை விட இரண்டு மடங்குக்கும் கூடுதலானவர்கள் அதிக பருமனாக இருக்கின்றனர்.
இருவரில் ஒரு அமெரிக்கர் டைப்-2 நீரிழிவு நோயுடன் இருப்பதை நாம் பார்க்கிறோம். உலகின் எண்பது சதவிகித டைப்-2 நீரிழிவு நோயை வளர்ந்துவரும் நாடுகளில் நாம் காண்கிறோம். நமது உணவை நாம் வளர்த்தெடுக்கும் முறையில் ஒரு நெருக்கடியை நாம் எதிர்கொள்வதுடன், சுற்றுச்சூழலில் ஒரு நெருக்கடி, இது தவிர உடல் ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான ஆரோக்கியத்திலும் நெருக்கடியான நிலையில் இருக்கிறோம். இவற்றை ஆராய்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் நான் கேட்க விரும்புவது – உலகளாவிய நிலையிலும், தனி மனித நிலையிலும் ஆன்மீக ரீதியான தவறான மனோபாவமும், உடல் ரீதியான தவறான மனோபாவமும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டுள்ளது?
சத்குரு:
தொற்று நோய்களுக்குக் காரணமான கிருமிகளுக்கெதிரான ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, “நமக்கு நாமே” திட்டத்தில் இப்போது நாம் இருந்துகொண்டிருப்பது மிகவும் முரணான ஒன்று. நமக்கே நாம் நோயை உருவாக்கிக்கொள்கிறோம் – நமக்காக அதைச் செய்வதற்கு எந்தக் கிருமியும் நமக்குத் தேவையில்லை. நீங்கள் கூறியவாறு, முக்கியமாக, நாள்பட்ட நோய்களின் தோற்றுவாய் நமக்குள்தான் இருக்கிறது. நமது உடலே நமக்காக நோயை அல்லது ஒரு வலியை ஏன் உருவாக்கப்போகிறது? உடலின் ஒவ்வொரு அணுவும் ஆரோக்கியத்துக்காக ஏற்படுத்தப்பட்டது; ஒவ்வொன்றும் பிழைத்திருப்பதற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் போரிடுகிறது.
திரு.ஹைமன்: உண்மைதான். நாம் உண்ணுகின்ற பல உணவுகளும் அடிமைப்படுத்தக்கூடியதுதான்.
சத்குரு:
ஆகவே இரண்டு வழிகளில், மக்கள் துன்பப்படுகின்றனர். நீங்கள் பசியினால் துன்பப்பட்டாலும் அல்லது அஜீரணத்தால் துன்பப்பட்டாலும், அதைக் கவனிக்கத் தேவைப்படுகிறது. வறுமையில் வாழ்கின்றவர்களின் தேவைகளை நாம் கவனத்தில் கொள்ளும் அதே நேரத்தில், மிதமிஞ்சிய உணவினால் எழும் பிரச்சனையையும் நாம் கவனம் செலுத்தத் தேவைப்படுகிறது. இதனுடைய மற்றொரு பரிமாணம் என்னவென்றால், மனித உடலின் இயக்கத்தை எப்படி நடத்திக்கொள்வது என்பதைக் குறித்த கல்வியும், விழிப்புணர்வும் இல்லை. ஆரோக்கியத்தை எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதைக்கூட நாம் யோசனை செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் உடலானது உள்ளிருந்து உருவாக்கப்படுகிறது, அது ஆரோக்கியமாக இருப்பதற்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமின்மையை உருவாக்காமல் இருப்பது மட்டும்தான் நமக்கான பணி. இதைப் பல வழிகளில் புரிந்துகொள்ளலாம். மிக எளிமையாகப் புரிந்துகொள்வதென்றால் – உதாரணத்திற்கு என் கைகள் என்னையே அடித்தும், என் கண்களைக் குத்தியும் காயப்படுத்தினால் – அப்போது நான் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் என் கைகள் நலமாக இல்லை என்பதை நிச்சயம் நீங்கள் எண்ணுவீர்கள். இதைத்தான் மக்களது மனங்கள் இப்போது செய்துகொண்டிருக்கின்றன. அது வெடிக்கிறது, அங்குமிங்கும் குதித்துத் தாவுகிறது; அவர்களை அது குத்தியும், பிராண்டியும் தாக்குகிறது; அவர்களை அழ வைக்கிறது, அது அவர்களை வேதனைப்படுத்துகிறது. அது குறித்து நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறோம். மக்கள் அவர்களது மனதை எப்படி உபயோகிப்பது என்று வழிகாட்டும் அடிப்படையான குறிப்புக் கையேடுகளைக்கூட புரட்டிப்பார்த்திருக்கவில்லை. அது சக்திவாய்ந்த ஒரு கருவி. நீங்கள் உங்கள் மனதில் உருவாக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் உங்களது உடலின் இரசாயனமே மாறுபடுகிறது.
சமையலும் மூலப்பொருட்களும் – ஒரு உதாரணம்!
திரு.ஹைமன்: உங்களது எண்ணத்தினால் உங்கள் மரபணுகூட மாறுகிறது என்பது நாம் அறிந்ததே.
Subscribe
சத்குரு:
இதை நாம் இந்த விதமாகவும் பார்க்கலாம் – ஒரு இரசாயனக் குழம்பாக இருக்கின்ற இந்த மனித உடல் மகத்தான ஒன்றாகவோ அல்லது மோசமானதாகவோ இருக்கிறது. இரண்டு காரணங்களால் குழம்பு மோசமாகிறது. நீங்கள் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் தரமில்லாமல் இருக்கிறது அல்லது நீங்கள் சமைக்கும் முறை சரியில்லாமல் இருக்கிறது. சரியான எல்லா மூலப்பொருட்களும் உங்களிடம் இருக்கலாம், ஆனால் அப்போதும் நீங்கள் குழம்பை மோசமாக்கிவிடக்கூடும். அல்லது மூலப்பொருட்கள் மோசமாக இருக்கும் காரணத்தால், நீங்கள் குழம்பைக் குளறுபடியாக்கிவிட முடியும். மூலப்பொருட்கள் மோசமாக இருக்கும் ஒரு இடம் வறுமை, அதனால் குழம்பு மோசமாக்கப்படுகிறது. வளமான ஒரு இடத்தில் மூலப்பொருட்கள் சிறப்பாக இருக்கிறது ஆனால் சமைப்பவர் மோசமாக இருப்பதால், மறுபடியும் உங்களுக்கு ஒரு மோசமான குழம்புதான் கிடைக்கிறது.
ஆரோக்கியத்தை எங்கே தேடுவது?
திரு.ஹைமன்: இந்த உடலானது, இயற்கையாகவே நலமுடன் வாழக்கூடிய இயல்பைக் கொண்டது. இந்த இயல்பை நமது எண்ணங்களும், இந்த உடலை நமது உணவும் மாற்றியமைப்பதால், நாம் நமது இயற்கையான தன்மையிலிருந்து விலகிச் செல்கிறோம் என்பதைக் குறித்துப் பேசுவது இப்போது மிகவும் அவசியமானது. ஆகவே, நாம் அதிகமான விழிப்புணர்வும், நிகழ்கணத்திலும், உண்மையுடன் நெருக்கமான தொடர்பிலும் இருக்கக்கூடிய ஒரு நிலையை உருவாக்கவேண்டியுள்ளது. இந்த மாற்றத்திற்காக, நமது எண்ணங்களையும், உணவுப் பழக்கத்தையும் எவ்விதம் பயன்படுத்தமுடியும் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன்.
சத்குரு:
உண்மையுடன் தொடர்பில் இருப்பதைப் பற்றி நீங்கள் பேசும்போது – உண்மை என்பது ஒரு கருத்தோ அல்லது மனத்தோற்றமோ அல்ல, அது நீங்கள் படிக்கின்ற அல்லது உங்கள் மனதில் உருவாக்கும் ஒரு தத்துவம் அல்ல. உடல் குறித்த உண்மை என்பது, நீங்கள்தான் அதற்கு உணவளித்தீர்கள், ஆனால் உடலானது உள்ளிருந்து உருவாக்கப்பட்டது. நீங்கள் வெளியிலிருந்து அதைச் செய்யவில்லை. இந்த உடலைப் படைப்பதற்கு நீங்கள் ஒரு சிற்பியை வரவழைக்கவில்லை. அது உள்ளிருந்து செதுக்கப்பட்டது. அல்லது வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், உடலை உருவாக்கம் செய்தவர் உள்ளே இருக்கிறார். உடலை உருவாக்கியவர் உள்ளே இருக்கும் நிலையில், ஏதாவது செப்பனிடவேண்டியிருந்தால், நீங்கள் உருவாக்கியவரிடம் செல்ல விரும்புவீர்களா அல்லது உள்ளூர் பழுதுபார்ப்பவரிடம் செல்வீர்களா? உற்பத்தியாளரின் அடையாள எண்ணை நீங்கள் தொலைத்துவிட்டிருந்தால், அப்போது உள்ளூர் பழுது பார்ப்பவரிடம் செல்கிறீர்கள். ஒரு வாழைப்பழத்தை, மனித உடல் என்ற நுட்பமான இயந்திரமாக மாற்றக்கூடிய ஒரு புத்திசாலித்தனம் உங்களுக்குள் இருக்கின்றது. உள்ளிருக்கும் இந்த புத்திசாலித்தனம் அல்லது படைப்பின் மூலத்துடன் உங்களுக்குத் தொடர்பிருந்தால், ஆரோக்கியம் இயல்பான ஒரு நிகழ்வாக இருக்கும். அது நீங்கள் துரத்திச் செல்லவேண்டிய ஏதோ ஒன்றல்ல. ஆரோக்கியம் என்பது, உங்களுக்கு உள்ளேயும், சுற்றிலும் இருக்கும் அனைத்துடனும் இணக்கமாக வாழ்வதன் இயல்பான விளைவாகவே இருக்கின்றது. ஆரோக்கியம் என்பது கடைசியாக கவனம் செலுத்துவதாக இருக்கவேண்டும், ஆனால் இன்றைக்கு அது மிகப்பெரிய விஷயங்களுள் ஒன்று. நீங்கள் என்ற இந்த உயிருடன் ஒத்திசைவில் நீங்கள் வாழ்ந்தால் அது மிகப்பெரிய விஷயம் அல்ல. ஒரு மரம் அதன் ஆரோக்கியம் குறித்து வருந்துவதில்லை; ஒரு பறவை அதன் ஆரோக்கியம் குறித்து வருத்தப்படுவதில்லை; காட்டிலிருக்கும் ஒரு எருது அதன் ஆரோக்கியம் குறித்து வருத்தம் கொள்வதில்லை – அவர்கள் இயற்கையுடன் ஒன்றியிருக்கின்றனர், ஆரோக்கியமாக உள்ளனர்.
எப்படி வாழவேண்டுமென்பதை வியாபார சக்திகள் முடிவுசெய்வதா?
திரு.ஹைமன்: அந்த நிலைக்கு நாம் எப்படித் திரும்புவது? அதிலிருந்து வெகு தூரம் விலகி வந்துவிட்டோம். நாம் நம்மிடமிருந்தும், நமது மனங்கள் எவ்விதம் செயல்படுகிறது என்பதிலிருந்தும், நாம் உண்ணும் உணவிலிருந்தும் எந்த அளவுக்குத் தொடர்பில்லாமல் இருக்கிறோம் என்றால், ஆரோக்கியத்தை உள்ளிருந்து நம்மால் உருவாக்கமுடியும் என்ற இந்த நடைமுறைக் கருத்திலிருந்தும்கூட விலகி இருக்கிறோம். “எனக்கு நானே எப்படி இதைச் செய்வது?” என்று மக்கள் திகைக்கும்போது, நடைமுறையில் அவர்கள் அதை எப்படி நிகழச் செய்வார்கள்?
சத்குரு:
இப்போது, இந்த ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மனித நல்வாழ்வைத் தேடித்தான் நாம் வர்த்தகம் தொடங்கினோம். ஆகவே வர்த்தகம் எப்போதும் மனிதர்களின் நல்வாழ்வுக்கு வழி செய்யவேண்டும். ஆனால் இப்போது, பொருளாதாரத்தின் ஆரோக்கியத்திற்காக, மனிதரின் ஆரோக்கியத்தை நாம் சரணாகதி செய்கிறோம். நீங்கள் என்ன சாப்பிடவேண்டும், நீங்கள் என்ன அருந்தவேண்டும் மற்றும் நீங்கள் எப்படி வாழவேண்டும் என்பதை வியாபார சக்திகள் முடிவு செய்கின்றன. இது இந்த விதமாக இருக்கவே கூடாது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு உலகெங்கும் இந்த முன்மாதிரியை நாம் தேர்வு செய்துள்ளோம் – அதாவது மனிதகுலத்தின் வாழ்க்கை இயல்பையே வியாபார சக்திகள் முடிவு செய்கின்றன. மனித விழிப்புணர்வு மனிதர்களின் வாழ்வை முடிவு செய்யவேண்டும். வியாபார சக்திகள் அந்த நோக்கத்திற்கு துணைபோகவேண்டும். நாம் இதைத் தலைகீழாக மாற்றிவிட்டோம். நாம் தவறாகப்போய்விட்ட அடிப்படையான இடம் இதுதான்.
உலகளாவிய ஆரோக்கியத்ததை திரும்பப் பெற 3 படிநிலைகள்!
திரு. ஹைமன்: ஆம். தனிமனிதர்களாக அதை நாம் எப்படி மாற்றுவது? வணிகத்தின் தாக்கங்களிலிருந்து நாமே தேர்வு செய்வதற்கான நமது அதிகாரத்தை எப்படித் திரும்பப்பெறுவது?
சத்குரு:
இதனை மாற்றுவதற்கு மூன்று தெளிவான படிகளை நான் வைத்திருக்கிறேன். முதலாவது, பிரச்சாரம் செய்வது. மக்களுக்குச் சேவை செய்யவேண்டிய சக்திகளால் எந்தவிதத்தில் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள் என்பதைக் குறித்து மக்கள் விழிப்புணர்வடைய வேண்டும். அடுத்ததாக, தனிமனிதர்களின் வாழ்வில் எவ்விதம் கல்வியைப் புகுத்துவது என்பது. அடுத்த விஷயம், கொள்கை வரைவு. இதே வரிசையில், இந்த மூன்று விஷயங்களும் நிகழவேண்டும். வரிசைக்கிரமம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவரும், தாங்கள் தவறு செய்வதை உணரவேண்டும். நீங்கள் உலகளாவிய ஒரு மாற்றத்தை வேண்டினால், ஒவ்வொருவரும் தாங்கள் சாப்பிடும், அருந்தும் முறையை அறிந்துகொள்வதுடன், இந்த உலகில் செயல்படுவதற்குத் தாங்கள் கட்டாயப்படுத்தப்படும் முறை தவறானது என்பதையும் உணரவேண்டும். அதன் பிறகு கல்வி – எது சரியான செயல்? பிறகு கொள்கை வரைவு.
திரு.ஹைமன்: அது பெரிய படிகள்தான். பெரும்பாலான மக்களும் ஆரோக்கியம் எங்கோ வெளியில் இருக்கிறது என்று எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையில் உள்ளே இருக்கிறது. அவர்களின் இப்போதைய செயல்களையும், விருப்பங்களையும் மாற்றிக்கொள்வதன் வாயிலாக உண்மையாகவே கொள்கையை மாற்றக்கூடிய சக்தி அவர்களுக்கு இருப்பதை அவர்கள் தெரிந்துகொள்வதில்லை.
சத்குரு:
எந்தவிதமான சமூகக் கட்டமைப்பிலும், தனிப்பட்ட சூழலிலும், எப்படிப்பட்ட உலகச்சூழ்நிலையிலும் நாம் இருந்தாலும், தனிமனிதர்களுக்கென்று விருப்பத்தேர்வுகள் உண்டு. நாம் அனைவரும் ஒரே சமூகத்தில்தான் வாழ்கிறோம், ஆனால் அனைவரும் சரியானதைத் தேர்ந்தெடுக்காமல் இருக்கலாம். நாம் என்ன சாப்பிடுகிறோம், நாம் எப்படி உட்காருகிறோம், நிற்கிறோம் – இது நிச்சயம் நமது விருப்பத்திற்கு உட்பட்டதுதான். ஆனால் பெரும்பாலான மக்கள் மந்தை மனப்பான்மையில் இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்.
திரு.ஹைமன்: ஆமாம், இந்தப் பிரச்சனைகள் உலகளாவியவைதான், ஆனால் தீர்வுகள் உண்மையில் அந்தந்த இடத்தில்தான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நமது எண்ணங்களைப்போல அவை இங்கேதான் உள்ளன. நாம் நமது தட்டில் என்ன உணவு எடுக்கிறோம் என்பதைப்போல் அது நம் கையில் உள்ளது. இந்த எளிய விஷயங்களைத் தேர்வு செய்வதிலிருந்து நாம் இந்த மாற்றத்தைத் தொடங்கமுடியும்.
சத்குரு:
அதனால்தான் இவைகள் இரண்டும் வித்தியாசமானவை. உங்களுடைய ஆரோக்கிய சூழலை மாற்றுவதற்கு நீங்கள் விரும்பினால், அது ஒரு வழி. உலகளாவிய ஆரோக்கியத்தை மாற்றுவதற்கு நீங்கள் ஆர்வம் கொண்டால், அது ஒரு வித்தியாசமான வழி.
திரு.ஹைமன்: தாங்கள் எப்படி அவற்றை வெவ்வேறு என்று சொல்கிறீர்கள்? என் கண்ணோட்டத்தில், அதிகமான தனிமனிதர்கள் தங்களுக்கு நன்மையானது என்று எதைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அது இந்த பூமிக்கும் நன்மையானது; அவர்களது உடலுக்கு எது நல்லதோ அது பூமிக்கும் நல்லது.
சத்குரு:
ஒவ்வொரு தனிமனிதரும் சரியானதைத் தேர்வு செய்யும் திறன் பெற்றிருக்கவில்லை. அவர்கள், பெரும்பான்மையினர் செய்வதென்னவோ அந்த வழியில் செல்கின்றனர். ஆரோக்கியம் என்பது, ஒரு மக்கள் இயக்கமாக ஆனால் தவிர, உலகளாவிய ஆரோக்கியம் ஏற்படாது. ஆனால் ஒரு தனிமனிதர் என்ற நிலையில் உங்களுக்கான ஆரோக்கியத்தை நீங்கள் உருவாக்கிக்கொள்ள விரும்பினால், அது ஒரு பெரிய விஷயமல்ல – நீங்கள் இதைச் செய்துகொள்ளமுடியும். சிறிதளவு விஷத்தை நீங்கள் சுவாசிக்கவும், அருந்தவும் வேண்டியிருக்கும், அது தவிர்க்கமுடியாதது, ஆனால் உள்ளிருந்து நீங்கள் உற்பத்தி செய்யும் விஷம் என்னவாக இருந்தாலும், நீங்கள் விரும்பினால், அவ்வப்போது அதை நீங்கள் தடுக்கமுடியும்.