அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது! - எப்படி?

யாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும்.
அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது! - எப்படி?, Anbu pinaikkirathu karunai viduvikkirathu eppadi?
 

Question:சத்குரு, அன்பிற்கும் கருணைக்கும் என்ன வித்தியாசம்?

சத்குரு:

உங்களுக்குள் நீங்கள் பல உணர்ச்சிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அவை யாவற்றிலும் கருணைதான் உங்களை குறைந்தபட்சமாகப் பிணைக்கிறது. மற்றவற்றில் நீங்கள் அதிகம் சிக்கிப்போகிறீர்கள். ஆனால் கருணையில் நீங்கள் மிகவும் குறைவாகவே சிக்கிப் போகிறீர்கள். மேலும் கருணைதான் உங்களுக்கு விடுதலை கிடைப்பதில் அதிக முக்கியமானதாக இருக்கிறது. இப்போது நீங்கள் கருணையற்றவராகக் கூட இருக்கலாம். ஆனால் எப்படியும் உங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சிகளை வேறு ஏதுமாக மாற்றுவதற்கு பதிலாக, கருணையாக மாற்றுவது நல்லது. ஏனெனில், மற்ற உணர்ச்சிகள் உங்களைப் பிணைத்துவிடும் திறன் கொண்டவை. ஆனால் கருணை என்ற உணர்ச்சிப் பரிமாணம், உங்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்கிறது. அது எதனுடனும், யாருடனும் உங்களைப் பிணைப்பதில்லை.

யாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும்.

அன்பு எப்படி ஆரம்பமாகிறது? ஏதோ ஒன்றின் மீது அல்லது யாரோ ஒருவர் மீது நீங்கள் விருப்பம் கொள்கிறீர்கள். அவரிடத்தில் இருக்கும் நல்லதை மட்டுமே பார்த்து அவரை விரும்புகிறீர்கள். இது மிகவும் எல்லையுடன் கூடிய உணர்வு. நீங்கள் விரும்பும் நபர் நல்லவராக இருந்தால் மட்டுமே, நீங்கள் அவருடன் அன்பைத் தொடர்வீர்கள். நீங்கள் கெட்டது என்று நினைக்கும் விதமாக அவர் மாறிவிட்டால், அதன் பிறகு நீங்கள் அவரை விரும்புவதில்லை.

ஆனால் கருணை அப்படியல்ல. யாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும். இந்த வகையில் பார்த்தால் கருணை உங்களை விடுவிக்கும் உணர்ச்சியாக இருக்கிறது. அது உங்கள் மீது எல்லைகளைப் போடுவதில்லை. கருணை, நல்லது-கெட்டது என்று பாகுபாடு பார்க்கவில்லை. எனவேதான் அன்பை விட கருணை நல்லது என்று கூறினேன்.

அன்பு எப்போதுமே குறிப்பிட்ட ஒருவர் மீது தான் இருக்கும். அது மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்கிறது. அன்பு அற்புதமானது தான்; ஆனால் பிறரை ஒதுக்கி விடுகிறதே? உதாரணத்திற்கு, இரண்டு காதலர்கள் சேர்ந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அவர்களுக்கு உலகில் உள்ள மற்ற அனைத்தும் அகன்று விடுகிறது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு செயற்கை உலகை உருவாக்கிக் கொண்டு அதில் சேர்ந்திருக்கிறார்கள். அடிப்படையில் இது ஒரு சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது போல. சதி என்பது ரகசியமாக இருக்கிறது. வேறு யாருக்கும் அது தெரியாது. பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு காதல் ஆனந்தம் தருவதற்குக் காரணம் அதில் இருக்கும் இந்த களவுத்தன்மை தான்.

மனிதர்கள் காதலில் விழுந்ததும், அதை மிகவும் ரசிக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்து, அது அனைவருக்கும் தெரியும்போது அதில் களவு அம்சம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தானே என்றாகிவிடுகிறது. இப்போது அதன் சுவை குறைந்துவிடுகிறது.

எனவே இந்த ரகசியமும் களவும் தான் காதலர்களுக்கு மிகுந்த அழுத்தம் தருகிறது. உலகின் மற்ற அனைத்தையும் ஒதுக்கும் தன்மை, அனைவரையும் புறக்கணிக்கச் செய்யும் தன்மை காதலுக்கு இருப்பதால், அது மிகுந்த துன்பத்தை தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு உணர்வு விருப்பமாக ஆரம்பித்து அது அளவற்ற கருணையாக மாறினால் அது நல்லது. ஆனால் அது விருப்பமாக ஆரம்பித்து, தீவிர விருப்பமாகவே இருந்துவிட்டால், நீங்கள் துன்பத்தை விலைக்கு வாங்குவதாகப் பொருள். எனவே அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1