சத்குரு:

மனித மனம் பெரும்பாலும் ஒரு போராட்டத்திலேயே இருக்கிறது. உங்களில் பலர் சின்னச் சின்ன விஷயங்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த விஷயங்களை ஒருவேளை நீங்கள் பெற்றுவிட்டால் கூட உங்கள் உள்நிலையில் துன்பமும், துயரமும் இருக்கிறவரைக்கும் எதையும் வென்றதாகவே அர்த்தமில்லை.

சராசரி வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற மனிதன் தன் உணவை மட்டுமே சம்பாதித்துக் கொள்கிறான். மற்ற அனைத்திற்கும், அன்புக்கும், மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் அவன் அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறான். ஆனால் ஆன்மீகத் தெளிவுமிக்க ஒரு மனிதன், அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை தனக்குள்ளேயே உண்டாக்கிக் கொண்டிருக்கிறான்.

இன்னும் சிலபேர் வாழ்க்கை என்பது உறங்குவதும், இனப்பெருக்கம் செய்வதும் பின்னர் இறப்பதும் தான் என்று கருதிக் கொண்டு மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது, இதுதான் வாழ்க்கை என்று சொன்னால் அதற்கு மனிதனுக்கிருக்கிற இந்த உடலமைப்போ, மனமோ தேவையே இல்லை. இத்தகைய அறிவாற்றல் தேவை இல்லை. நீங்கள் புழுக்களாகவோ, பூச்சிகளாகவோ பிறந்திருந்தால்தான், நிஜமாகவே உண்ணுகிறீர்கள் என்று பொருள்.

உங்களுக்குத் தெரியுமா? புழுக்களும், பூச்சிகளும் தங்கள் உடல் எடையைக் காட்டிலும், ஆயிரம் மடங்கு, அதிகமாக உண்ணுகின்ற ஆற்றல் பெற்றிருக்கின்றன. அதுவும் ஒரே நாளில்! இதற்குப் பெயரல்லவா உண்ணுவது.

ஒரு மனிதன் 50 கிலோ எடை இருந்து 90 டன் உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அவன் உண்ணுவதில் ஏதோ அர்த்தம் இருக்கிறது. வழக்கமான உணவை விட கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டாலோ மருத்துவரையோ அல்லது கழிப்பறையையோ தேடிப் போவது போலத்தான், மனித உடலமைப்பு இருக்கிறது. அப்படியானால் இந்த உடல் வெறும் உணவுக்காக ஆனது அல்ல.

சிலருக்கு உறக்கம் மிகவும் சுகமாக இருக்கும். மிக வசதியான மெத்தைகளை நீங்கள் கண்டு பிடித்திருக்கிறீர்கள். ஆனால் குறிப்பிட்ட சில மணி நேரங்களைக் கடந்த பின் தொடர்ந்து தூங்க முடிகிறதா என்ன? விழிப்பு வந்தபிறகு எழுந்திராவிட்டால், 'மெத்'தென்ற படுக்கை ஒரு முள்படுக்கையாக அல்லவா மாறிவிடும்.

சில விலங்குகளும், பறவைகளும் ஒரேநேரத்தில் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று தொடர்ந்து தூங்குகிற பழக்கம் கொண்டவை. எனவே உண்பதைப் போலவே, உறங்குவதிலேயும் ஒரு சில உயிரினங்களோடு போட்டியிட்டால் நிச்சயமாய் மனிதர்கள் தோற்றுவிடுவார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இனப்பெருக்கத்திலே கூட நீங்கள் ஒன்றும் பெரிதாய் சாதித்து விடவில்லை. பல வீடுகளில் பார்க்கிறோம். ஒரு குழந்தையை உருவாக்குவதிலேயே, எவ்வளவு சிரமம். சில உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடுகிறபோது நீங்கள் ஒன்றுமே இல்லை.

எனவே, மனித உடலமைப்பை விட பிற உயிரினங்களின் உடல் அமைப்புதான் உண்பதற்கும், உறங்குவதற்கும், இனப்பெருக்கத்திற்கும் ஏற்றவகையில் இறைவனால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அல்லது இயற்கையால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மனிதன் இந்த வடிவத்தில் வந்திருப்பதின் காரணமே அவனுடைய கடமைகளைக் கருதித்தான். வேறு எந்த உயிரினத்திற்கும், இல்லாத அவனுடைய ஆற்றலின் அடையாளமாகத்தான். இந்த ஆற்றலை நீங்கள் உணராவிட்டால் அதை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், இந்த ஆற்றலின் முழு வலிமையையும் செயல்பாட்டுக்கு கொண்டு வராவிட்டால், மனித வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகிறது.

மனித உடல், இந்த அறிவு இவை அனைத்தும் பல பேரால் உணவுக்கும், உறக்கத்திற்கும், இனப்பெருக்கத்திற்கும், இறப்புக்குமே வீணடிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள்! நீங்கள் அமைதியானவர்களாக, மகிழ்ச்சியானவர்களாக, பரவசம் மிக்கவர்களாக வாழ்கிறீர்களா?

வேறொருவர் வந்து உங்களுக்கு அமைதியைத் தர முடியாது. வேறொருவர் உங்களை அன்புமயமாக்க முடியாது. வேறொருவர் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியாது.

தேவைப்படுகிறபோது போய் மகிழ்ச்சியையும், அன்பையும், அமைதியையும் மற்றவர்களிடமிருந்து நிரப்பிக் கொண்டு வரலாம் என்று பலபேர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களில் பலபேர் அமைதியையும், அன்பையும், மகிழ்ச்சியையும் வெளியே மற்றவர்களிமிருந்து பெறுவதற்கு ஆசைப்பட்டு தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். பெட்ரோல் பங்க்குகள் போல் இவற்றை விநியோகம் செய்வதற்கு வெளியே சில இடங்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். தேவைப்படுகிறபோது போய் மகிழ்ச்சியையும், அன்பையும், அமைதியையும் மற்றவர்களிடமிருந்து நிரப்பிக் கொண்டு வரலாம் என்று பலபேர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்களிடமிருந்து இவற்றை எதிர்பார்க்கிற எந்த மனிதரும், எப்போதும் அச்சத்திலேயும் பதட்டத்திலேயும்தான் அழுந்திக் கிடப்பார். ஏனென்றால், அடுத்த ஒரு மனிதர் எப்போதுமே நம்பகமானவர் அல்ல. நீங்கள் அன்பையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அவர் நூற்றுக்கு நூறு சதம் நம்பகமானவராவே இருக்கட்டும். அதற்காகவே அவர் 24 மணி நேரமும் உங்களுடன் இருந்து உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போவது இல்லை. அப்படியொரு மனிதர் உலகத்திலேயே இல்லை. எனவே, இவற்றையெல்லாம் உங்களுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொள்வது எப்படி? என்று நீங்களே கற்றுக்கொள்ள வேண்டும்.

முதலில் இந்த அமைதி என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? மகிழ்ச்சி என்றால் என்ன? பொதுவாக இவற்றையெல்லாம் சில அனுபவங்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கை முறையை உங்கள் உடலுக்கும் மனதுக்குமான, உறவு முறையை உன்னிப்பாக பார்த்தால் இந்த உணர்வுகள் எல்லாமே உடலுக்குள் ஏற்படுகிற ஒருவிதமான இரசாயன மாற்றம் என்று தெரியும்.

சிலபேர் மனநிலையில், ஒருவிதமான அழுத்தம், பாதிப்பு ஏற்படுகிறதென்றால் அவர் மருத்துவரிடம் செல்கிறார். மருத்துவர் ஒரு இராசாயனப் பொருளை உடலமைப்புக்குள் செலுத்தி, ஒரு தற்காலிகமான அமைதியைத் தந்துவிடுவார். அப்படியானால் அமைதி என்பது ஒருவிதமான இரசாயனம். உடலமைப்பில் இரசாயனம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்கிறபோது நீங்கள் அமைதியாய் இருக்கிறீர்கள். அந்த இரசாயனம் வேறுவிதமாக மாறுகிறபோது நீங்கள் துன்பப்படுகிறீர்கள். எப்படியோ எல்லாமே உங்களுக்குள் நடக்கிற இரசாயனம்தான்.

அப்படியென்றால் ஒவ்வொரு மனிதனும் தன் மன அமைப்பையும் மிக ஆழ்ந்து உணர்ந்து தனக்குத் தகுந்த இரசாயனத்தை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு இப்பொழுது உள்ளது. அன்பு என்கிற இரசாயன மாற்றத்தை, மகிழ்ச்சி என்கிற இரசாயன மாற்றத்தை, அமைதி என்கிற இரசாயன மாற்றத்தை உங்கள் அமைப்புக்குள்ளேயே செய்து கொண்டால், அவை மிக இயல்பாக முயற்சியே இல்லாமல் உங்களுக்குள் ஏற்படுகின்றன.

இந்த அன்பும், மகிழ்ச்சியும் அடுத்தவர்களைச் சார்ந்ததாக இல்லை. நீங்கள் இந்த மனிதரை எந்த ஒரு சூழ்நிலையில் நிறுத்தினாலும் அவருடைய மனநிலை மாறாது. இந்த மனநிலையோடு அவர் விரும்பியவற்றைச் செய்யலாம்.

அந்த மனிதர் வெளியே எங்கும் போய் மகிழ்ச்சியைத் தேடமாட்டார். சராசரி வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற மனிதன் தன் உணவை மட்டுமே சம்பாதித்துக் கொள்கிறான். மற்ற அனைத்திற்கும், அன்புக்கும், மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும் அவன் அடுத்தவர்களைச் சார்ந்தே இருக்கிறான். ஆனால் ஆன்மீகத் தெளிவுமிக்க ஒரு மனிதன், அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை தனக்குள்ளேயே உண்டாக்கிக் கொண்டிருக்கிறான். அவனே அதை சம்பாதித்து இருக்கிறான். சிலசமயம் அவன் உணவுக்கு மட்டும் அடுத்தவர்களைச் சார்ந்திருக்கிறான். சில சமயம் அவனே அவன் உணவையும், தேடிக்கொள்கிறான்.

இப்போது சொல்லுங்கள். உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியத் தேவைகளை, வெளியே கேட்டுப் பெறுகிற பிச்சைக்காரர்களாக நீங்கள் இருக்க வேண்டுமா?

மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு அம்சம் இல்லையா? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். இப்பொழுது நீங்கள் எல்லோருமே ஒரு தொழிற்சாலையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அது மகிழ்ச்சித் தொழிற்சாலை, மகிழ்ச்சியை உற்பத்தி செய்கிற அல்லது செய்ய முயல்கிற, ஒரு தொழிற்சாலை. 24 மணி நேரமும் மகிழ்ச்சியை உருவாக்க நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். அதற்கான எத்தனையோ கச்சாப்பொருட்களை வாழ்க்கைக்குள் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆலையில் மகிழ்ச்சி உற்பத்தி ஆவதே இல்லை. அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும்? ஒன்று தொழிற்சாலையை மூடிவிட வேண்டும் அல்லது தொழிற்சாலையில் என்னதான் நடக்கிறது என்று அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும். என்வே, ஒன்று சீரமைக்க வேண்டும், இல்லையெனில் தொழிற்சாலையை மூடிவிட வேண்டும்.

இப்பொழுது தொழிற்சாலையை சரிசெய்வதற்குத்தான் வழி பார்க்க வேண்டும். ஏனென்றால் உங்களில் பலபேர் வாழ்க்கை என்றாலே ஒரு போராட்டம் என்று கற்பனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்க்கையின் எல்லா படிநிலைகளுமே உங்களுக்கு ஒரு போராட்டம் என்று கற்றுக் கொடுத்துவிட்டார்கள். படிக்கிறபோது எப்படிப் படிக்கச் சொன்னார்கள்? பள்ளிப் பருவத்தில், நீ கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டுமென சொன்னார்கள். மகிழ்ச்சியாக சந்தோஷமாக படி என்று பெற்றோர்களோ, ஆசிரியர்களோ சொன்னதில்லை. சரி, வேலைக்குச் சேர்ந்தீர்கள். நீ கடுமையாக உழைக்க வேண்டும் என்றுதான் மேலதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக உழைக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னதில்லை. செய்கிற பணி அன்பும், காதலும் ஏற்பட வேண்டும் என்று யாரும் சொன்னதில்லை. எனவே கடுமையாகப் படித்து, கடுமையாக உழை என்பதனால் ஒரு கழுதைக்குரிய மனோபாவத்தைத்தான் மனிதரிடையே ஏற்படுத்திக் இருக்கிறார்கள். ஒரு பணியைச் செய்வதில் இருக்கிற அன்பு, ஆனந்தம், ஆகியவற்றை காணாமல் போக்கடித்து விட்டீர்கள். இத்தகைய பணி, வாழ்க்கை, உங்களை நீங்களே சிதைத்துக் கொள்கிற முயற்சி. எனவே அன்பும், ஆனந்தமும் ததும்பும் மனநிலைதான் உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பயனுள்ளதாக வைத்திருக்கும்.