சத்குரு:

பொதுவாகவே மக்கள், ‘ஆனந்தம்’ என்பதை வந்து போகும் ஓர் உணர்ச்சியாக நினைக்கிறார்கள். உணர்ச்சி என்பது நிலையானது அல்ல; மாறிக்கொண்டே இருக்கும். உணர்ச்சியை நம்மால் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்க முயன்றால் அது நடிப்பு போல ஆகி, சகிக்க முடியாத வேதனையாக மாறிவிடும். ஆனால் ஆனந்தத்தை நிலையாக நம்மால் அனுபவிக்க முடியும்.

பல நேரங்களில் மிகச் சாதாரண விஷயம் கூட உங்களை உச்சிக்கு எடுத்துச் செல்லும். ஆனால் உங்களை உச்சியிலேயே தொடர்ந்து இருக்க வைக்காது.

உடல், மனம், உணர்ச்சி இவைகளை ஒரு சீரான நிலைக்குக் கொண்டுவந்தால், உயிரின் இயல்பான ஆனந்தத்தை நாம் அனுபவிக்கலாம். இப்போது உங்களுக்கு ஆனந்தத்தை நிலையாக அனுபவிக்க முடியாத காரணம் புரிகிறதா? எப்போதோ, எப்படியோ சில கணங்கள் ஆனந்தமாக இருக்கிறோம். அப்புறம் மீண்டும் ஆனந்தமற்ற நிலைதான்.

ஒரு சின்ன கதையை இதற்கு பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம். வயல்வெளியில் ஒரு காளை மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அதன் முதுகில் ஒரு குருவி அமர்ந்து, காளை மாட்டின் உடலில் இருந்த சிறு பூச்சிகளைத் தின்று கொண்டிருந்தது. இருவரும் தத்தம் செயல்களில் சுவாரஸ்யமாக ஈடுபட்டு இருந்தார்கள். தூரத்தில் உள்ள ஒரு பெரிய மரத்தை குருவி ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே, “முன்பெல்லாம் அந்த மரத்தின் உச்சிக் கிளைக்குக்கூட என்னால் பறந்து செல்ல முடியும். ஆனால் இப்போது என்னிடம் வலிமை இல்லை, அதன் கீழ் கிளைகளுக்குக்கூட பறந்து செல்ல முடியவில்லை” என்று காளையிடம் வருத்தமாகச் சொன்னது.

உடனே காளை மாடு, “இதற்குப் போயா கவலைப்படுகிறாய்? என்னுடைய சாணத்தை கொஞ்சம் சாப்பிட்டால் போதும்... இரண்டு வாரங்களுக்குள் நீ உச்சிக்கிளைக்கே பறக்கலாம்!” என்றது. குருவி நம்பவில்லை. “பைத்தியக்காரத்தனமாகப் பேசாதே! இதெல்லாம் சாத்தியமா... என்ன?” என்று கேட்டது. அதற்கு காளை மாடு, “மனித இனமே என் சாணத்தை நம்பித்தான் உள்ளது. சாப்பிட்டுப் பார், உண்மை புரியும்!” என்று வேடிக்கையாகச் சொன்னது.

குருவிக்கு சந்தேகம் எழுந்தாலும், ஆசை விடவில்லை. சாணத்தை சாப்பிட்டுப் பார்த்தது. முதல் நாளே கீழ் கிளைக்கு அதனால் பறக்க முடிந்தது. இரண்டே வாரத்தில் காளை சொன்னது போலவே உச்சிக் கிளைக்கே பறந்தது குருவி. பறந்து சென்று உச்சிக் கிளையில் அமர்ந்து, பரவசமடைந்தது. சில நொடிகள் கூட ஆகியிருக்காது... எங்கிருந்தோ குறி பார்த்து சுடப்பட்ட குண்டு பாய்ந்து குருவி கீழே விழுந்து செத்தது.

இந்தக் கதையின் நீதி என்னவென்றால், பல நேரங்களில் மிகச் சாதாரண விஷயம் கூட உங்களை உச்சிக்கு எடுத்துச் செல்லும். ஆனால் உங்களை உச்சியிலேயே தொடர்ந்து இருக்க வைக்காது. நீங்களும் இப்படித்தான், எப்படியாவது ஆனந்தத்தை அடைந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறீர்கள். சில நேரங்களில் ஆனந்தத்தை அடைகிறீர்கள். ஆஹா உச்சிக்கு வந்துவிட்டோம் என எண்ணுகிறீர்கள், ஆனால் அங்கேயே நிலைத்து இருக்க முடிவதில்லை. ஏனெனில் வாழ்க்கையை இன்னமும் சரியாக நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஆனந்தத்திலேயே இருக்க வேண்டுமென்றால், உள்நிலையிலும், வெளிநிலையிலும், ஒரு கட்டத்தை அடைய வேண்டுமென்றால், சரியான செயல்களைச் செய்தாக வேண்டும். ஆனால் மக்கள், சரியான செயல்களைச் செய்யாமலேயே, எப்படியோ எதையாவது செய்து அந்த கட்டத்தை அடைந்துவிட நினைக்கிறார்கள். அது அப்படி வேலை செய்யாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.