சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! - பகுதி 4

Question: நீங்கள் சந்திரன் என்பது போதை மயக்கத்திற்கு ஒரு பிறப்பிடம் என்று சொன்னீர்கள். காலம் காலமாக, இந்தியர்களுடைய ஆன்மீகக் கோட்பாடு சந்திரனின் பல்வேறு நிலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. உண்மையில் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவற்றின் முக்கியத்துவம்தான் என்ன?

சத்குரு:

நீங்களே சொல்லுங்கள், பௌர்ணமி இரவுக்கும் வேறு ஒரு இரவுக்கும் எந்த வேறுபாடும் இல்லையா? நிறைய வேறுபாடுகள் உள்ளன, அப்படித்தானே? ஓரளவு பித்து பிடித்தவர்களைக் கேளுங்கள். அவர்களுக்கு வேறுபாடு நன்றாகவே தெரியும். இப்போது எது முக்கியம் என்றால், ஓரளவு பித்து பிடித்தவர்களை அது ஏன் மேலும் அதிகமாக பித்து பிடிக்க வைக்கிறது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
அமாவாசை என்பது பாலுணர்வு சார்ந்ததாகவும், பௌர்ணமி என்பது காதல் தொடர்புடையதாகவும் சொல்ல முடியும்.

இப்போது இந்த ஒலிபெருக்கியை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் சக்தியை, சத்தத்தை சிறிது கூட்டினால், அது சத்தமாக கூக்குரலிட்டு பேசும். பேச்சு ஒன்றுதான், ஆனால் இப்போது சிறிது அதிகமாக ஒலிக்கிறது, தெளிவாகக் கேட்கிறது. அதுபோலத்தான் எல்லாமே. ஓரளவு கிறுக்குத்தனம் இருந்தது. நீங்கள் கொஞ்சம் கூடுதலாக சக்தியைக் கொடுத்தீர்கள் அல்லது சக்தியின் ஓட்டத்தை அதிகப்படுத்தினீர்கள், அதனால் அனைத்தும் பலமடங்கு பெரிதாக்கப் பட்டுள்ளது. இது அன்பு, சிரிப்பு, மகிழ்ச்சி எல்லாவற்றிற்கும் பொருந்தும், பௌர்ணமி தினத்தன்று சக்தி சற்று அதிகமாக இருக்கும்.

எது சக்தியை சற்று அதிகமாக்குகிறது? இதில் ஓரளவு அழகுணர்வு குணமும் உண்டு. நீங்கள் எதையாவது பார்க்கும்போது அது அழகாக இருந்தால், அதனுடனான உங்கள் உறவு திடீரென்று அதிகமாகும். அப்படித்தானே? எது உங்களுக்கு அவலட்சணமாகத் தோன்றுகிறதோ, அதைப் பார்த்தவுடன் அதனுடனான உங்கள் உறவு, உங்கள் புரிதல் தானாகக் குறைந்துவிடுகிறது. பூர்ண சந்திரனுக்கு ஓரளவு கவர்ச்சி அதிகம். அது நிச்சயம் உங்களுடைய புரிதலை, அதனுடனான உங்கள் உறவை அதிகமாக்குகிறது.

பௌர்ணமியில்...

மேலும் பூமியும் சந்திரனும் ஒரு குறிப்பிட்ட நிலைக்கோட்டிற்கு வரும்போது ஏற்படக்கூடிய அதிர்வுகள் நேரடியாகவும் சக்தி மிகுந்ததாகவும் இருக்கும். பூரண சந்திரனின் போது, சந்திரனின் ஈர்ப்பு சக்தி மற்ற நாட்களைவிட அதிகமாக இருக்கும். அன்று அலைகள் அதிகமாக உயரும். தண்ணீர் வழிந்தோடி துள்ளிக்குதிக்கும். இதேபோல உங்களுடைய ரத்தமும் உயரமாகத் துள்ளிக் குதிக்க முயற்சிக்கிறது. அந்த நிலையில் மூளைக்குப் போகும் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. அப்போது, உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும். நீங்கள் ஓரளவு மனநோய் உடையவராக இருந்தால், மேலும் அது அதிகமாகும். நீங்கள் அமைதியானவராக இருந்தால், நீங்கள் மேலும் அமைதியாக மாறிவிடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால் அன்று உங்கள் மகிழ்ச்சி மேலும் அதிகமாகும். உங்கள் குணம் எதுவாக இருந்தாலும், அது அப்படியே உயரச் செல்லும். மக்கள் கிறுக்குத்தனத்தைத்தான் அதிகமாக கவனித்திருக்கிறார்கள். ஏனென்றால் மக்களில் பெரும்பாலோர் அந்த நிலையில்தானே இருக்கிறார்கள்? (சிரிக்கிறார்). பௌர்ணமி அன்று கிறுக்குத் தனம் மட்டுமல்ல. அனைத்துமே அதிகமாகக் காணப்படும். நீங்கள் அனைவரிடமும் அன்புடன் இருப்பவர் என்றால், பௌர்ணமி அன்று உங்களுடைய அன்பு கரைபுரண்டு ஓடும்.

அமாவாசையன்று...

சரி, அமாவாசை அன்று எப்படி இருக்கும்? பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் என்ன வேறுபாடு? தியானத்தின் தரம் பௌர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் பெருத்த வேறுபாடுடன் இருக்கும். தொடர்ந்து தியானம் செய்பவருக்கு பௌர்ணமி நல்லது. சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை சிறந்தது. அமாவாசை இரவன்று உங்களுடைய சக்திகள் முரட்டுத்தனமாக இருக்கும். மதம்பிடித்த யானைபோல உங்களுடைய சக்தி தறிகெட்டுப்போகும். அதனால்தான் அமாவாசை இரவுகளை தாந்திரீகர்கள் பயன்படுத்துவார்கள். அப்போது சக்திகள் மேலும் அதிகமாகும். பௌர்ணமி இரவுகளில் உங்கள் சக்தி சற்று அடங்கி இருக்கும். அடக்கமாகவும், இனிமையாகவும், அழகாகவும் இருக்கும் - காதலைப்போல. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து சொல்லவேண்டும் என்றால், அமாவாசை என்பது பாலுணர்வு சார்ந்ததாகவும், பௌர்ணமி என்பது காதல் தொடர்புடையதாகவும் சொல்ல முடியும். அமாவாசை சற்று கரடுமுரடானது, ஆனால் சக்தி மிகுந்தது. பௌர்ணமி மென்மையான தன்மை படைத்தது. அதன் சக்தியை உங்களால் உணரமுடியாது. அந்த அளவுக்கு நுட்பமானது. குண்டலினியின் செயல்பாடும் அதேபோல்தான் இருக்கும். பௌர்ணமி தினத்தில் அது மெதுவாகவும் மென்மையாகவும் நகரும். அமாவாசை தினத்தில் அது வேகமாகவும் துள்ளிக்குதித்தும் நகரும்.

பௌர்ணமியின் இருப்பு மிகவும் அற்புதமானது. அன்று சந்திரனின் ஒளி எங்கு பார்த்தாலும் பளிச்சென்று இருக்கும், அனைத்துப் பொருட்களின் மீதும் அரைகுறையாக ஊடுருவிச் சென்று பரவசமூட்டும் அல்லவா? சந்திரன் வெளியிடும் ஒளியும், மென்மையான அதிர்வும் அதன் விளைவாக எல்லாப் பொருட்கள் மீதும் ஒரு புதிய மணம் வீசும். ஒவ்வொரு பொருளும் ஒரு புதிய ஒளியுடன் இருக்கும். சந்திரன் முழு நிலவாக இருக்கும்போது வெளியிடும் அதிர்வும் ஒளியும் மற்ற நாட்களை விட, மற்ற நிலைகளைவிட வித்தியாசமாக இருக்கும். அதேபோல் அதன் காந்தசக்தியும் வேறுபடும். உங்கள் உடல் உள்ளே செயல்படும் ஈடா மற்றும் பிங்களா ஆகிய இரண்டு சக்திகளும் வேறு விதமாக வேலை செய்யும். பிராண சக்தியின் ஓட்டமும் வேறுவிதமாக இருக்கும். உங்கள் இரத்த ஓட்டமும் சற்று வேறுவிதமாக இருக்கும். உங்களுடைய முழு சக்தியும் வேறுவிதமாக செயல்படும். அதற்குக் காரணம் அதிர்வுகளும் மாறி விடுவதால்தான்.


அடுத்த வாரம்...

ஞானிகள் சமாதி அடைய ஏன் பௌர்ணமி நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்...


சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்! தொடரின் பிற பதிவுகள்