அலோபதி முயலும் ஆயூர்வேத ஆமையும்

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருந்துகளை ஒரு மண்டலம், அதாவது 40 நாள் தொடர்ச்சியாகச் சாப்பிடச் சொல்கிறார்கள். 40 நாள் என்பதில் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா? உடனடியாகக் குணப்படுத்தும் ஆங்கில மருத்துவம் இருக்கும்போது, பாரம்பரிய மருத்துவம் என்ற ஒரே காரணத்திற்காக ஏன் நாம் இன்னமும் சித்தா, ஆயுர்வேதா போன்றவற்றை ஆதரித்து வருகிறோம்?
 

Question:ஆயுர்வேதம் மற்றும் சித்த மருந்துகளை ஒரு மண்டலம், அதாவது 40 நாள் தொடர்ச்சியாகச் சாப்பிடச் சொல்கிறார்கள். 40 நாள் என்பதில் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா? உடனடியாகக் குணப்படுத்தும் ஆங்கில மருத்துவம் இருக்கும்போது, பாரம்பரிய மருத்துவம் என்ற ஒரே காரணத்திற்காக ஏன் நாம் இன்னமும் சித்தா, ஆயுர்வேதா போன்றவற்றை ஆதரித்து வருகிறோம்?

சத்குரு:

நமது உடல் எல்லா நாளிலும் ஒன்று போல் இருப்பதில்லை. சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே இருப்பினும், நம் உடல் செயலாற்றும் விதத்தை உற்று நோக்கினால், அடிப்படையில், அது ஒரு சுழற்சி போல் நடப்பதை கவனிக்க முடியும். இந்தச் சுழற்சி 40 லிருந்து 48 நாளைக்கு ஒரு முறை நடக்கிறது. இந்தச் சுழற்சி நம் உடல்நிலையில், மனநிலையில் மற்றும் பிராண நிலையில் நடக்கிறது. இந்தச் சுழற்சியை உணர்ந்து செயல்பட்டால் உடல் ஆரோக்கியத்தையும், மனநலனையும் நாம் நமது கையில் எடுத்துக் கொள்ள முடியும்.

ஏதாவது ஒரு புதிய தன்மை, அது மருந்தாகட்டும் அல்லது ஒரு பயிற்சியாகட்டும், உங்கள் உடலில் சேர்ந்து பலன் கொடுக்க வேண்டுமென்றால் 40 லிருந்து 48 நாட்கள் ஆகும்.

இதன் காரணமாகத்தான், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் வேறு பல நாட்டு மருத்துவங்களிலும் கூட, மருந்து சாப்பிடுவதற்கு 40 அல்லது 48 நாட்கள் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இது உடலைக் கவனித்து, அதனைப் புரிந்து கொண்டதால் செய்த ஒரு ஏற்பாடு.

எனவே, ஏதாவது ஒரு புதிய தன்மை, அது மருந்தாகட்டும் அல்லது ஒரு பயிற்சியாகட்டும், உங்கள் உடலில் சேர்ந்து பலன் கொடுக்க வேண்டுமென்றால் 40 லிருந்து 48 நாட்கள் ஆகும். சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது.... ஆங்கில மருத்துவத்தில் இல்லை என்று கேட்டால், இந்த இருவகை மருந்துகளுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது. ஆங்கில மருந்துகளின் அடிப்படை இரசாயனமாக இருக்கிறது. எனவே அது நேரடியாக உடலில் சேர்ந்து இரசாயன மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்துகிறது. ஆனால் சித்தா, ஆயுர்வேதம் அல்லது நாட்டு மருந்துகள் ஆகியவை, தனக்குத் தேவையானதை நம் உடலே உருவாக்கிக் கொள்வதற்கு, அதை உந்தும் வகையில் செயல்படுகின்றன. இந்தச் செயல்முறைக்கு நமது உடலில் ஏற்படும் சுழற்சியைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமாக இருக்கிறது.

ஒரு இரசாயனத்தை உட்கொண்டு நமது ஆரோக்கியத்தை உருவாக்கிக் கொள்வது எப்போதுமே நன்மை தராது. நம் உடல் மிகவும் நலிந்து, வெளியில் இருந்து கூடுதல் ஊன்றுகோல் கட்டாயம் தேவை எனும்போது வேண்டுமானால் நேரடியான இந்த இரசாயனங்களின் உதவியை நாடலாம். ஆனால் எப்போதுமே ஆங்கில மருத்துவம் என்பது சிறந்த பயன் தராது. இது புரிந்துதான் நமது மத்திய அரசு கூட, நம் நாடு முழுவதும் ஆயுர்வேதத்தைப் பெரிய அளவில் பரப்ப முயற்சி செய்து வருகிறது.

நம் பாரம்பரிய மருத்துவமுறைகளை பின்பற்ற ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், இதுபோன்ற மருத்துவத்திற்கு நாம் நமது உடல் செயலாற்றத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். மேலும், இந்த மண்டல சுழற்சி நம் உடலில் எப்போது நடக்கிறது, நம் உடல் எந்தெந்த நாட்களில் எவ்வெவ்விதமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் அவசியமும் இருக்கிறது. அப்படிப் புரிந்து செயல்படுவதற்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் நமக்கு எளிதில் உதவ முடியும். அப்போது, எந்த மருந்தும் இல்லாமலேயே, அந்தச் சுழற்சியைக் கவனித்து, எந்தெந்த நாளில் என்ன பயிற்சி செய்ய வேண்டும், எப்படியிருக்க வேண்டும், எப்போது என்ன சாப்பிட வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக் கொண்டு நமது ஆரோக்கியத்தை எளிதாக வளர்த்துக்கொள்ள முடியும்.