சங்கரன்பிள்ளை கதையைப் படிப்பவர்களுக்கு சிரிக்கச் சொல்லித் தர தேவையில்லை. அவருடைய குட்டிக் கதைகள் இரண்டு உங்களுக்காக...

சத்குரு:

ஐம்பது ரூபாய் மூணு தரம்...

சங்கரன் பிள்ளை ஒரு நாள் சந்தைக்குப் போனார். சந்தையில் ஓர் ஏலக் கடை இருந்தது. நீங்கள் எந்தப் பொருள் கொண்டுபோனாலும், அந்தக் கடையில் அதை ஏலத்தில் விற்று கமிஷன் எடுத்துக்கொண்டு ஏலத் தொகையை உங்களுக்குக் கொடுப்பார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சங்கரன் பிள்ளை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். கடைக்காரர் ஒரு கிளியை ஏலம் விட்டார். 100 ரூபாயில் ஏலம் ஆரம்பித்தது. கடைசியில் அது 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

சங்கரன் பிள்ளை வியந்துபோனார். ‘ஒரு சிறிய பறவை இவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனால்? பறவைகளின் மவுசு ஏறித்தான் போய்விட்டது’ என்று யோசித்தவர், உடனே தன் வீட்டுக்கு வேகமாக ஓடினார். வீட்டில் அவர் ஒரு வான்கோழி வளர்த்து வந்தார். ஒரு சிறிய கிளிக்கே அவ்வளவு பணம் கிடைத்தது என்றால், இவ்வளவு பெரிய வான்கோழிக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற நினைப்பில், வான்கோழியை எடுத்துக்கொண்டு மீண்டும் சந்தைக்குப் போய் ஏலக் கடைக்காரரிடம் கொடுத்தார்.

10 ரூபாயில் ஏலம் ஆரம்பித்தது. 50 ரூபாய்க்கு மேல் அதை யாரும் ஏலம் கேட்கவில்லை. சங்கரன் பிள்ளைக்கு கோபம் வந்துவிட்டது. ‘இது பகல் கொள்ளை. சிறிய கிளியை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுத் தருகிறீர்கள். ஆனால், இந்தப் பெரிய வான்கோழி இவ்வளவு தொகைக்குத்தான் போகுமா?’ என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

உடனே ஏலக் கடைக்காரர் பொறுமையாக சங்கரன் பிள்ளையைப் பார்த்து, ‘அந்தக் கிளி பேசும், அதனால்தான் அவ்வளவு விலை. உங்கள் வான்கோழி என்ன செய்யும்?’ என்று கேட்டார்.

சங்கரன் பிள்ளை தன் வான்கோழியைப் பார்த்தார். அந்த கிழட்டு வான்கோழி இயலாமல் அரைத்தூக்கத்தில் இருந்தது. உடனே சங்கரன் பிள்ளை ஏலக் கடைக்காரரைப் பார்த்து சொன்னார், ‘என் வான்கோழி தியானம் செய்யும்!’

டாக்டர் என்ன சொன்னார்?

டாக்டர் என்ன சொன்னார்?

சங்கரன் பிள்ளைக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. அதன் பின்னர் ஒருமுறை ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தது. அப்படிப் பயணிக்கும்போது ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அவர் கீழே இறங்கி சிறிது நேரம் நின்று பின்னர் ஏறிக்கொள்வார். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இப்படிச் செய்தார். இதைப் பார்த்துக்கொண்டு இருந்த சகபயணி ஒருவர், “எதுக்கு இப்படி அடிக்கடி இறங்கிட்டு மறுபடி ரயில்ல ஏறுறீங்க. ஏற்கனவே பார்க்க ரொம்ப டயர்டா இருக்கீங்களே!” என்றார். பிள்ளை சொன்னார், “எனக்கு பைபாஸ் சர்ஜரி பண்ணியிருக்கு. அதனால, டாக்டர் என்னை ரொம்ப தூரம் பயணம் செய்ய வேண்டாம்னு சொல்லிருக்கார்!”