ஆவிகளுடன் பேச முடியுமா?
ஆவிகளுடன் பேசி உங்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறோம் என்று பலர் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், உண்மையில் ஆவிகளுடன் பேச முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வர முடியும். இதை சத்குருவிடம் கேட்ட போது...
 
 

ஆவிகளுடன் பேசி உங்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறோம் என்று பலர் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், உண்மையில் ஆவிகளுடன் பேச முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வர முடியும். இதை சத்குருவிடம் கேட்ட போது...

Question:ஆவிகளுடன் பேச முடியுமா?

சத்குரு:

ஆவிகளுடன் பேச முடியுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆவிகளுடன் பேசுவது அவசியமா என்று முதலில் பாருங்கள். ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்றால் என்ன அர்த்தம்? உங்களிடமிருந்தும் இந்த உலகத்திடமிருந்தும் அவர் விடுதலையாகிப் போய் விட்டார் என்று தானே அர்த்தம். போனவரோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? பலரும் உயிரோடு இருக்கும்போது அவர்கள் முகத்தைக் கூட பார்ப்பதில்லை. அவர்களோடு பேசுவதில்லை. போனபிறகு அவர்களிடம் பேசுவதால் ஏதாவது பயனுண்டா என்ன?

பலபேர், தங்கள் பக்கத்து வீட்டுக்காரரோடு பேச மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்களோடு கூட பேசமாட்டார்கள். ஆனால் ஆவிகளிடம் பேசுவதில் ஆர்வம் வருகிறது. சக மனிதர்களிடம் அன்பாக பேசிப் பழகினாலே போதும். ஆவிகளோடு பேச்சு வார்த்தை அவசியமில்லை.

Question:கேள்வி எழாத மனம் மூடத்தனத்தின் முழுமையா? தெளிந்த நிலையா?

சத்குரு:

முட்டாள்தனத்திற்கும், ஞானோதயத்திற்கும் வித்தியாசம் என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். முட்டாளின் மனதிலும் கேள்வி எழாது. ஞானோதயம் அடைந்தவருக்கும் கேள்விகள் கிடையாது. ஆனால் இரண்டும் முற்றிலும் வெவ்வேறான உலகங்கள். இவ்விரு நிலைகளுக்கும் இடையே தத்தளிப்பவர்களுக்குத்தான் கேள்விகளும், போராட்டங்களும் அதிகம். காரணம், அவர்களால் முட்டாள்தனத்திலே இருந்துவிடவும் முடியவில்லை, ஞானோதயத்தை எட்டிடவும் முடியவில்லை. முட்டாள்தனம் ஒரு கரை என்றால் ஞானோதயம் இன்னொரு கரை. இரண்டிற்கும் மத்தியில் நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது நல்ல விஷயம் - பயணமாவது துவங்கியிருக்கிறதல்லவா?

Question:நீங்கள் எந்த ஆன்மீகப் புத்தகமும் படித்ததில்லை என்கிறீர்கள். உங்கள் புத்தகங்களை உலகமே படிக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன?

சத்குரு:

என்னுடைய புத்தகங்கள் ஆன்மீக போதனைகள் அல்ல. ஆன்மீகம் என்று நீங்கள் கருதிக் கொண்டிருக்கிற அபத்தங்களையெல்லாம் உங்கள் மனங்களிலிருந்து அகற்றுவதற்காகத்தான் என் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றில் உபதேசங்கள் எதுவும் இருக்காது. அதனால் ஆன்மீகப் புத்தகம் என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிற புத்தகங்களுக்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1