உலக சுற்றுச்சூழல் தினம் - எப்படிக் கொண்டாடலாம்?! (World Environment Day in Tamil)
ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து ஒரு நினைவூட்டல் இங்கே!
ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும், அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.
உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா?! ஏன்... விலங்குகளும் பறவைகளும் கூட வாழ்கின்றன. அவைகள் ஏதும் செய்யக்கூடாதா என மனிதர்கள் கேட்பதற்கு நியாயமில்லை! ஏனெனில், மனித இனத்தை தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை!
முன்னோர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் கூட பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து, அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர். உதாரணமாக மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி என்றால் மலையையே அவர்கள் கடவுளாகத்தான் பார்த்தார்கள். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றால் கடலை தேவதையாக வழிபட்டனர். நம்மைச் சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே இருந்தது.
குறைந்தபட்சம் 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் உண்டு. சோளத்தில் 5000 ரகம் உண்டு. மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இந்த உயிரினங்களில் மனிதன் கோடியில் ஒரு துளி. இத்தனை உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.
வணிக மனப்பான்மையின் அபாயம்
மனிதனோ பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக்கொள்கிறான்.
இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது. மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் மனிதனின் உள்நிலையில் அவசியமாகிறது.
இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை. இந்நிலைக்குக் காரணம் என்ன என்பதை சற்று ஆராய முற்பட்டோமானால், முதற்காரணமாக நம்முன்னே தெரிவது மக்கள்தொகை பெருக்கம்தான். சுதந்திரம் பெறும் தருணத்தில் 33 கோடியாக இருந்த நம் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு மேல் தற்போது பெருகியுள்ளதைப் பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலம், நீர், காற்று மட்டுமல்ல, ஆகாயமும் கூட நமக்கு போதாமல் போய்விடக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்.
காரணங்களும் தீர்வுகளும்
மக்கள்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகியதால் இயல்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகின. இதன் கழிவுகள் அனைத்தும் காற்றுமண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்துவருகின்றன. எனவே, நாம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு முதன்மையாக செய்யவேண்டியது மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியதுமே ஆகும்.
அடுத்த படிகளாக, நாம் ஒவ்வொருவரும் இந்த காற்று மண்டலத்தில் பதிக்கும் கார்பன் கால்தடங்களை குறைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட அளவு கார்பனை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கிறான். தற்போது உள்ள நிலவரப்படி கணக்கிட்டால், நாம் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடுசெய்து நாம் விட்டுச் செல்லும் 'கார்பன்' கால் தடங்களைக் குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.
சுற்றுச்சூழலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க…
பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.
பொதுவாக நாம் மகிழ்வுந்து, இருசக்கர வாகனம் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். 100 பேர் 100 வாகனங்களில் செல்வதற்கு பதிலாக அனைவரும் ஒரு பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும் அல்லவா?! அதேபோல் புகை கக்கும் வாகனங்களுக்கு பதிலாக மிதிவண்டியை கூடுமானவரை பயன்படுத்தலாம். இதனால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
காகிதப் பயன்பாட்டில் கவனம்
செய்தித்தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். எனவே, படித்துவிட்டு செய்தித்தாளைக் கீழே வீசவேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம் என சொல்லப்படுகிறது. எளிமையான வாழ்க்கை என்பது சுற்றுச்சூழலைக் காப்பதற்குத் துணைநிற்கும்.
Subscribe
மறுசுழற்சி, மறு பயன்பாடு என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. காடுகளை அழிப்பதில் பேப்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகவே, பேப்பர்களைப் பயன்படுத்தும்போது நிதானமாகச் செயல்படுவது நல்லது. தட்டச்சு செய்யும்போது இரண்டு பக்கங்களிலும் செய்யலாம்.
இன்று எளிதாகக் கிடைக்கக்கூடிய உலோகம் அலுமினியம். சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் அலுமினியத் தாள்கள், பாட்டில் மூடிகள், மாத்திரைகள் இருக்கும் அலுமினிய அட்டைகள், பழைய பாத்திரங்கள் ஆகியவை மீண்டும் பயன்படும் புதிய பொருட்களாக மாற்றப்படலாம். இவற்றை சேமித்து வைத்து, சேகரிப்பவரிடம் கொடுக்கலாம்.
உலக சுற்றுச்சூழல் தினம் - மேற்கொள்ள வேண்டிய உறுதிகள்
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன எனப் பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்.
தவிர்க்க வேண்டியதென்று பார்த்தால், அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது. அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது. வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்களை அணைக்காமல் செல்லுதல் போன்ற சின்னச் சின்ன செயல்களையும் நாம் கவனித்து தவிர்க்கத் தேவையுள்ளது!
புகைப்பதை தவிர்ப்போம்…!
புகைபிடித்தலைத் தவிர்க்கலாம். அது புகைப்பவரின் உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் உடனிருப்பவருக்கும் தீங்கை விளைவிக்கும். ஆண்டுதோறும் அமெரிக்காவில் புகை பிடிக்காத 4,000 பேர் புற்றுநோய் வந்து இறக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கண்ணாடி, மண்ணோடு மக்க குறைந்தது 100 ஆண்டுகள் ஆகும். எனவே, கண்ணாடியை மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பவேண்டும். நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் என்பது மண்ணில் மக்கக்கூடியதே அல்ல. ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது. பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களைக் கீழே வீசாமல் மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பலாம். பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும்போது, வீட்டில் இருந்தே பை எடுத்துச் செல்லலாம்.
பிளாஸ்டிக் எனும் பேரரக்கன்…
2018ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஈஷா அறக்கட்டளையும், நதிகளை மீட்போம் இயக்கமும் ஐநா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடைசெய்வதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று நிகழ்த்தின.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மிட்வே அடோல் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த செப்டம்பர் 2009ல் இறந்த அல்பட்ரோஸ் வகை கடல்பறவை குஞ்சின் இரைப்பை பகுதி புகைப்பட கலைஞரால் படம்பிடிக்கப்பட்டது. அதில், அதன் தாய் பறவையால் பிளாஸ்டிக் கழிவுகள் அந்தக் குஞ்சுக்கு ஊட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நாம் கொடுத்த விலை!
முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாம் நம் சுற்றுச்சூழலில் பலவிதமான பாதிப்பை உண்டாக்கிக் கொண்டுள்ளோம்... அவற்றில் சில இங்கே!
60 முதல் 90% கடல் கழிவுகள் பலவகைப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் சேர்கின்றன.
2015ல் உலக அளவிலான பிளாஸ்டிக் உற்பத்தியின் மதிப்பானது 900 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களுக்கு இணையானது என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நம் கடல்களில் 51 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் அங்கங்கள் சேர்ந்துள்ளன.
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வழிகள்
நீங்கள் உண்மையிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யாமல் தவிர்க்க விரும்பினால், மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்!
குளிர்பானங்களோ அல்லது வேறு பிற பானங்களோ கடைக்காரரிடம் வாங்கி அருந்தும்போது, பிளாஸ்டிக் straw வாங்காமல் மறுத்துவிடுங்கள்!
பொருட்கள் வாங்க கடைத்தெருவிற்கு செல்லும்போது, நீங்கள் துணிப்பையை உடன் எடுத்துச் செல்லவும். ஒரு நபர் சராசரியாக 12 நிமிடங்கள் மட்டுமே ஒரு பிளாஸ்டிக் பையை உபயோகித்து பின் தூக்கி எறிகிறார். நீங்கள் அதுபோன்ற ஒரு நபராக இருக்க வேண்டாம்.
உணவுப் பதார்த்தங்களை கொண்டு செல்லும்போது, பதார்த்தங்களை எடுத்துச்செல்ல பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கவர்களை புறந்தள்ளிவிட்டு, ஏன் நீங்கள் உங்கள் சொந்த பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது?! இப்படிச் செய்வது உங்களுக்கு ஒருவேளை ஆரம்பகாலத்தில் அசௌகரியமாக தோன்றலாம். ஆனால், இதுவே பழக்கமாகிவிட்டால், பின்னர் அது எளிமையாகிவிடும்.
ஒரு நுகர்வோராக உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் மகத்தான மாற்றத்தை உண்டாக்க முடியும்! பிளாஸ்டிக் நுண்பொருட்கள் அல்லது பிளாஸ்டிக் பேக்கேஜிங் இல்லாத பொருட்களைப் பார்த்து வாங்கவும். இது ஒரு எளிய படி என்றாலும், இதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகும் ஒரு பெரிய தொடர் சங்கிலி துண்டிக்கப்படுகிறது.
மேற்கூறிய இந்த விஷயங்கள் நீங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய எளிமையான தீர்வுகளாகும்.
உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக அவர்கள் கையில் இருக்கும் துணிப்பைகளுடனோ அல்லது பிளாஸ்டிக் Strawக்கு பதிலாக உலோக உறிஞ்சிகள் அல்லது வேறு மறுசுழற்சி ஆகக்கூடிய பொருட்களுடனோ ஒரு செல்ஃபி எடுத்து பகிருமாறு கேட்டுக் கொள்ளவும். இதனை மேலும் ஐந்து நண்பர்களுக்கு Tag செய்து இதைப் பற்றி தெரிவிக்கச் சொல்லவும்.
இயற்கை விவசாயத்தின் அவசியம்
இரசாயன விவசாயத்தால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் மனித ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இயற்கை விவசாய நுட்பத்தைக் கடைபிடிப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்.
இரசாயன உரங்களைத் தவிர்த்து, கால்நடை எரு, பஞ்சகாவியம் போன்ற இயற்கை ஊக்கிகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதன்மூலம், மண்வளமும் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
தற்போது ஈஷா விவசாய இயக்கம், இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை கொண்டு சேர்க்கின்றது. விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்திற்கான பயிற்சியளித்து, இயற்கையின் பக்கம் திரும்பி வருகின்றனர்.
மலையை தூய்மை செய்யும் ஈஷா!
இயற்கை அன்னையின் தூய்மை மடியான மலைகளிலும் கூட, மனிதர்கள் குப்பைகளை நிறைக்கத்தான் செய்கிறார்கள். தென் கைலாயம் என்று போற்றப்படும் புனித வெள்ளியங்கிரி மலை அந்த சிவன் அமர்ந்த மலை மட்டுமல்ல, யானைகளின் காப்பகமாகவும், பல வன விலங்குகளின் இருப்பிடமுமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பசுமை நிறைந்த வெள்ளியங்கிரியும் பிளாஸ்டிக் குப்பைகளால் கொஞ்சம் காயம்பட்டே உள்ளது. இந்த மலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈஷா யோக மையம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
அந்த விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஈஷா தன்னார்வத் தொண்டர்களும், பல கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வெள்ளியங்கிரி மலையேறி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுகின்றனர்.
மரம் நடுவதன் அவசியம்!
மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. நமது பாதி நுரையீரலே மரங்களில்தான் தொங்கிக் கொண்டுள்ளன என சத்குரு அவர்கள் சொல்வதுண்டு.
இறந்தவர்களைப் புதைப்பது நல்லதா அல்லது எரிப்பது நல்லதா என்று ஒருமுறை சத்குரு அவர்களிடம் கேட்டபோது, “வாழும்போது எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்துதான், நம் நினைவிடங்களுக்கு மரியாதை என்பதை மறக்காதீர்கள். இறந்தவரைப் புதைத்து கான்க்ரீட் கல்லறை எழுப்பி, அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடுவதால் என்ன லாபம்?
அதற்குப் பதிலாக அவரைப் புதைத்த இடத்தில் ஒரு மரம் நடுவது என்று முடிவு செய்யுங்கள். ஏக்கர் ஏக்கராக கான்க்ரீட் கல்லறைகள் எழுப்பி பூமியை மொட்டையடிப்பதைவிட, அங்கு ஏக்கர் கணக்கில் மரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். மாண்டவர் எருவாகி, பச்சை இலைகளாகவும், வண்ணப் பூக்களாகவும் மீண்டும் உயிர் கொள்ளட்டுமே! பின்னால், வரும் சந்ததிகளுக்கு நிழலும், மழையும் கொடுக்கட்டுமே! மாண்டவரே மரமாக நிமிர்ந்து உயிருடன் ஓங்கி வளர்கிறார் என்று உணர்வுப்பூர்வமாக ஒரு திருப்தியும் கிடைக்கும் அல்லவா!” என்று சொல்லி சுற்றுச்சூழலுக்கு மரம் நடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார்.
தமிழகத்தின் இந்த வறட்சி நிலையை மாற்றுவதற்காக ஈஷா துவங்கியுள்ள பசுமைக்கரங்கள் திட்டத்தின் பணி மகத்தானது. மரங்களின் தேவையை மக்கள் மனதில் பதிய வைத்தல், மக்களை மரம் நடவும் வளர்க்கவும் ஊக்கப்படுத்துதல், மரங்களைப் பாதுகாத்தல், தமிழ்நாட்டின் பசுமைக் குடையை 10% அதிகரித்தல் என பல்வேறு செயல்பாடுகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுவருகிறது ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம். தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க 12.5 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட்டு வளர்ப்பது என ஒரு மகத்தான நோக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் இலக்கு…
சுற்றுச்சூழலைக் காப்பது என்பது மரங்களின் உதவியில்லாமல் நடவாது. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் மரங்கள் இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது. மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. "நமது நுரையீரலில் பாதி மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது" என சத்குரு சொல்வதுண்டு.
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு, செயலாற்றி வருகிறது ஈஷா பசுமைக்கரங்கள்.
உருவாக்கப்படும் வேளாண் காடுகள்
நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஓர் அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.
சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருதான "இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்" விருதையும், தமிழக அரசு வழங்கும் சுற்றுச்சூழல் விருதினையும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் பெற்றுள்ளது.
மேலும் தொடர்புக்கு: 80009 80009
ishaagroforestry@ishaoutreach.org