காகிதத்தை இப்படியும் செய்யலாம் !

சூடாகிறது சூடாகிறது... என்று சொல்லிக் கொண்டே இருந்தால் போதுமா?! அதைத் தடுத்து பூமியைக் காக்க என்னதான் வழிகள் என்று கேட்கும் நமக்கு, நம்மாழ்வார் இங்கே சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார்...
kaagithaththai-ippadiyum-seyyalam
 

நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 7

சூடாகிறது சூடாகிறது... என்று சொல்லிக் கொண்டே இருந்தால் போதுமா?! அதைத் தடுத்து பூமியைக் காக்க என்னதான் வழிகள் என்று கேட்கும் நமக்கு, நம்மாழ்வார் இங்கே சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார்...

நம்மாழ்வார்:

கடந்த 2008 ஜூலை 29ம் தேதி திண்டுக்கல் நகரில் இருந்தேன். தூய மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தார்கள் மாணவ, மாணவியர். அந்தக் கருத்தரங்கில் பேசும்போது, பூமித்தாய்க்குக் காய்ச்சல் அதிகரித்து வருவதை முக்கியமாகக் குறிப்பிட்டேன்.

பேச்சு முடிவில் மாணவர்கள் கேள்வி கேட்க வாய்ப்பளிக்கப்பட்டது.

‘‘பசுமை இல்லக் காற்றுகளே பூமி சூடாகக் காரணம் என்று சொன்னீர்கள். பசுமை இல்லக் காற்றுகளைக் குறைப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்..?’’ ஒரு மாணவி இந்தக் கேள்வியை எழுப்பினாள்

செய்தித் தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்ய முடியும். எனவே, படித்துவிட்டுக் கீழே வீச வேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம்.

‘‘பசுமை இல்லக் காற்றுகளான கார்பன்-டை-ஆக்சைடு, மீதேன், சைட்ரஸ் ஆக்சைடு, குளோரோ, ஃப்ளோரோ கார்பன் ஆகியவை வெளியேற, பெருகி வரும் தொழிற்சாலைகள் கக்கும் புகையும், பெருகி வரும் வாகனங்கள் கக்கும் புகையும் காரணமாகின்றன. நமது நாகரிக வளர்ச்சியைக் குறைத்துக்கொண்டால் பூமி சூடாவதைக் குறைக்கலாம். நாம் பேருந்து, மகிழ்வுந்து, இருசக்கர மோட்டார் பொருத்திய வாகனம் எனப் பல வாகனங்களில் பயணிக்கிறோம். 60 பேர் 60 வாகனங்களில் செல்வதற்கு மாற்றாக அனைவரும் ஒரு பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 59 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும்.’’ இவ்வாறு நான் பதிலளித்தேன்.

கருத்தரங்கம் முடிந்து ஊர் திரும்பும்போது அந்த மாணவியின் கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் அதிர்வுகளை எழுப்பியது. பூமியைச் சூடாக்கும் பசுமை இல்லக் காற்றுகளைக் குறைக்க நாம் இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும்?!

அருள் தந்தை ஜான் கென்னடி அவர்களின், ‘பஞ்ச பூத பாதுகாப்பு’ என்ற நூல் நாம் செய்யக்கூடிய வழிமுறைகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

காகிதத்தை இப்படியும் செய்யலாம், Kaagithaththai ippadiyum seyyalam

செய்தித் தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்ய முடியும். எனவே, படித்துவிட்டுக் கீழே வீச வேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம்.

தேவைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம். எளிமையான வாழ்க்கை, சூழல் காப்பதற்குத் துணை போகும். பணியிடங்களுக்கு நடந்தே செல்வது. தூரம் கொஞ்சம் அதிகமானால் மிதிவண்டியில் செல்வது செலவைக் குறைக்கும். உடலுக்கும் நலம்.

இன்று எளிதாகக் கிடைக்கக்கூடிய உலோகம் அலுமினியம். சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் அலுமினியத் தாள்கள், பாட்டில் மூடிகள், மாத்திரைகள் இருக்கும் அலுமினிய அட்டைகள், பழைய பாத்திரங்கள் ஆகியவை மீண்டும் பயன்படும் புதிய பொருட்களாக மாற்றப்படலாம். இவற்றை சேமித்து வைத்து, சேகரிப்பவரிடம் கொடுக்கலாம்.

புகைபிடித்தலைக் குறைக்கலாம், தவிர்க்கலாம். அது புகைப்பவரின் உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் உடனிருப்பவருக்கும் தீங்கானது. ஆண்டுதோறும் அமெரிக்காவில் புகை பிடிக்காத 4,000 பேர் புற்று நோய் வந்து இறக்கிறார்கள் என்பதே இதற்கு சாட்சி.

நெகிழி (பிளாஸ்டிக்) என்பது மண்ணில் மக்கக்கூடியதே அல்ல. பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களைக் கீழே வீசாமல் மறு பயன்பாட்டுக்கும் மறு சுழற்சிக்கும் அனுப்பலாம். பொருட்களை வாங்கக் கடைக்குச் செல்லும்போது, வீட்டில் இருந்தே பை எடுத்துச் செல்லலாம்.

காடுகள் பசுமை இல்லக் காற்றுக்களை உறிஞ்சிக் காற்றைத் தூய்மையாக்குகின்றன. இதை உணர்ந்தே ஈஷா யோகா இயக்கம் மரம் வளர்ப்பு இயக்கத்தையும் ஒரு யோகமாக எடுத்துச் செய்கிறது.

எல்லோருக்கும் முன்னோடியாக, காடு வளர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு யோகி உண்டு. அவர், சுந்தர்லால் பகுகுணா.

1981-ஆம் ஆண்டு இந்திய அரசு சுந்தர்லாலுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தது. ஆனால், அதை ஏற்க அவர் மறுத்தார். ‘‘இமாலயப் பகுதிகளில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. பாரத மாதாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே.... அந்த வளமான மண், கடலை நோக்கித் தினமும் போய்க் கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்றுதான் விருது பெறுவதற்கு உரிய தகுதி எனக்கு வரும்’’ என்றார் பகுகுணா.

மண்ணைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அதுவே இயற்கைத் தாய்க்கு நாம் அளிக்கும் பெரும் விருது!

தொடர்ந்து விதைப்போம்...

nature, nammalvar, agriculture

தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.