வெந்தயம் தரும் ஆரோக்கியம்!

நமது தமிழ்நாட்டு சமையலில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு பொருள் ‘வெந்தயம்’. நமது உமையாள் பாட்டி இம்முறை பேசுவதும் வெந்தயம் பற்றித்தான்! வெந்தயத்தால் விளையும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்!
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 15

நமது தமிழ்நாட்டு சமையலில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு பொருள் ‘வெந்தயம்’. நமது உமையாள் பாட்டி இம்முறை பேசுவதும் வெந்தயம் பற்றித்தான்! வெந்தயத்தால் விளையும் அற்புத நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்!

உமையாள் பாட்டி பாசத்துடன் எதையோ தட்டில் வைத்து எனக்குப் பரிமாறினாள். அது அல்வாவும் அல்ல; கேசரியும் அல்ல. அது இனிப்புச் சுவையுடன் புதுவித ருசிகொண்டதாய், வளுவளுப்புத் தன்மையுடன் இருந்ததுடன் வாயில் வைத்ததும் சருக்கென்று உணவுக் குழாய்க்குப் பயணித்தது.

வெந்தயத்த பொடி செஞ்சு நீரில் ஊற வெச்சு, அந்த நீரை குடிச்சு வந்தா வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், உடற்சூடு, வயிற்றுப்போக்கு தீரும்!

“பாட்டி இன்னுங் கொஞ்சம் கிடைக்குமா?” என்று இன்னொரு கரண்டி கேட்டு வாங்கிக்கொண்டேன்.

நன்கு ருசித்து சாப்பிட்ட பின், பாட்டியிடம் கேட்டபோதுதான் தெரிந்தது, நான் சாப்பிட்டது வெந்தயக் களியென்று!

டெய்லி இட்லி, தோசை... அதை விட்டால் சப்பாத்தி! பற்றாக்குறைக்கு இப்போது மேகியும் கிடையாது!

வித்தியாசமான காலை உணவை சாப்பிட்டு மாதக்கணக்கில் ஆகிவிட்டதால் எனக்கு வெந்தயக்களி ஒரு அற்புத பண்டமாக தெரிந்தது.

வெந்தயம் பற்றி பாட்டி சென்ன தகவல்களைக் கேட்ட பின்போ, இனி வெந்தயக் களியினை வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றியது எனக்கு.

“இந்த வெந்தயக்களி எப்படி செய்யுறது பாட்டி?” என்று நான் களியின் செய்முறையைக் கேட்க, பாட்டியோ களி செய்வதைப் பற்றி சொல்லாமல், வெந்தயம் பற்றி சொல்லலானாள்.

“இந்த வெந்தயம் இருக்கே... இது சாதாரண வாசனைப் பொருள் இல்ல! இது நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அற்புத உணவுப்பொருள். பொதுவா இந்த வெந்தயம் பித்தத்தை போக்குறதுல சிறப்பான பலன் தருது. வெந்தயத்த பொடி செஞ்சு நீரில் ஊற வெச்சு (3 மணிநேரம்), அந்த நீரை குடிச்சு வந்தா வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், உடற்சூடு, வயிற்றுப்போக்கு தீரும்! வெந்தையத்த வறுத்து அதுகூட சம அளவுக்கு கோதுமை சேர்த்து பொடி செஞ்சு நீரில் கலந்து காப்பிக்கு பதிலாக குடித்து வரலாம். அப்படி செஞ்சா, உடல் வெப்பம் நீங்கும்! வெந்தயத்த அரைச்சு தலையில தேய்ச்சு குளிச்சு வந்தா முடி உதிர்வது நின்னிடும். முடி நல்லா வளரும்!”

“ஓ.. சூப்பர் பாட்டி...! இவ்வளவு நன்மை இருக்குதா வெந்தயத்துல?!”

“வெந்தயத்துல மட்டுமில்ல, வெந்தயக் கீரையிலையும் நிறைய நன்மைகள் இருக்கு. வெந்தயக் கீரையை வேகவைத்து எண்ணெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டா பித்த மயக்கம் தீரும். வெந்தயக்கீரையை தோசையோடு சேத்து சாப்பிடலாம். அப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தா உடல் வன்மையாகும்; உடல் வலியும் தீரும்.

ஆமா... நீ உடம்ப பில்ட் பண்ணனும்னு சொல்லிகிட்டு இருந்தயே?”

“ஆமாம் பாட்டி...! சிக்ஸ் பேக் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்”

“அப்போ முதல்ல ஒரு பேக் எடுத்துகிட்டு மார்க்கெட்டுக்குப் போய் வெந்தயக்கீரை வாங்கிட்டு வா!

வெந்தயக்கீரையை கருணைக்கிழங்கோட சேத்து சமைச்சு சாப்பிட்டு வந்தா உடல் எடை கூடும்!

“ரொம்ப தேங்க்ஸ் பாட்டி! இப்பவே கிளம்புறேன். ஆனா... நீங்க அந்த வெந்தயக்களி எப்படி செய்யறதுனு இதுவரைக்கும் சொல்லவே இல்லையே?”

“அதெல்லாம் நீ கூகுள்ள பாத்துக்கோப்பா!” என்று சொல்லிவிட்டு, பாட்டி அடுப்பங்கரைக்குள் நுழைந்துகொண்டாள். நான் வெந்தயக்கீரை வாங்க மார்க்கெட்டுக்குக் கிளம்பினேன்.

சில குறிப்புகள்:

  • வெந்தயக் கீரையை அரைத்து, பின் நன்கு கிளறியெடுத்து உடல் வீக்கங்களின் மேல் கட்டிவைத்தால் நல்ல பலன் கிடைக்கும்; தீப்புண்களும் இதனால் சரியாகும்.
  • வெந்தயக்கீரையுடன் சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்து உடலில் ஏற்படும் கட்டிகள் மீது பற்றிட்டால் கட்டிகள் உடைந்து குணமாகும்; படைகள் மீது பூசினால் குணமாகும்.
  • வெந்தயத்தை 17கிராம் எடுத்து (2 ஸ்பூன் அளவு) அதனுடன் 340மி.கிராம் பச்சரிசி (ஒரு டீஸ்பூன் அளவு) சேர்த்து சமைத்து உண்டு வந்தால், இரத்த உற்பத்தி பெருகும்.
  • கஞ்சி காய்ச்சும்போது அதனுடன் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி குடித்தால் குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கும்.
  • வெந்தயம், மஞ்சள் தூள், கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு நெய்விட்டு வறுத்து, பின் பொடிசெய்து உணவுடன் கலந்துண்டு வந்தால் வயிற்று வலி, பொருமல், வலப்பாட்டீரல்-இடப்பாட்டீரல் வீக்கங்கள் (hepatomegaly-splenomegaly) ஆகியவை படிப்படியாகக் குறையும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1