இதய நோய்! தடுக்க என்ன வழி?
இதயத்தசை இறப்பு என்பது இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள்தான் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கேள்விப்படுவோம். இப்போதோ, 30 அல்லது 40 வயது உள்ளவர்கள்கூட மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். இந்த இதய நோய்களின் காரணிகள், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விளக்குகிறது இக்கட்டுரை...
 
 

இதயத்தசை இறப்பு என்பது இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள்தான் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கேள்விப்படுவோம். இப்போதோ, 30 அல்லது 40 வயது உள்ளவர்கள்கூட மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். இந்த இதய நோய்களின் காரணிகள், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விளக்குகிறது இக்கட்டுரை...

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

இதயம் ஒரு கணம்கூட நிற்காமல் தொடர்ந்து சுருங்கி விரிந்தபடி இருக்கிறது. இதனால், இதயத்தில் இருந்து ரத்தம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்கிறது. ரத்தம்தான் உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனையும் சத்தையும் எடுத்துச் செல்கிறது. அப்போதுதான் அப்பகுதிகள் நல்ல இயக்கத்துடன் இருக்கும்.

இதயம், தசைப் பையைப் போன்றதுதான். இதயமும் தனக்குள் வரும் ரத்தம் மூலம்தான் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களைப் பெறுகிறது. பொதுவாக, இதயத்தின் ரத்தக் குழாய்கள் பல்வேறு கடினமான சூழ்நிலைகளிலும் திறம்படச் செயல்படும். சில காரணங்களால் அவை சரிவரச் செயல்பட முடியாதபோது, உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன.

நெஞ்சு வலி (Angina, ஆன்ஜைனா)

அறிகுறிகள் :

இந்த வலி பொதுவாக நெஞ்சில் ஆரம்பித்து, தாடை, கை, கழுத்து என்று பரவும். சில சமயம் முதுகுக்கும் பரவும். வலி தொடர்ந்து இருக்கும்.

எப்போது ஏற்படும்?:

அதிக தூரம் நடக்கும்போதோ, படியேறும்போதோ, உடலளவில் கடுமையான செயல்களில் ஈடுபடும்போதோ, மனஅழுத்தத்தின்போதோ, நெஞ்சு வலி ஏற்படும். ஓய்வு எடுத்தால், வலி குறைந்து நின்றுவிடும். சிலருக்கு வேலை செய்யாமல் ஓய்வாக இருக்கும்போதேகூட நெஞ்சு வலி ஏற்படலாம். இந்தக் குறிப்பிட்ட நிலை ஆபத்தானது. ஏற்கெனவே ஒரு முறை நெஞ்சு வலி வந்திருந்து, இப்போது குறைந்த வேலைகளைத் தொடர்ந்து செய்யும்போதுகூட நெஞ்சு வலி வந்ததென்றால், நிச்சயம் உடலைக் கவனிக்க வேண்டும்.

ஒருமுறை நெஞ்சு வலி வந்தால்கூட மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது அவசியம். நெஞ்சு வலி இருப்பவர்க்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். சரியாகக் கையாண்டால் வலி வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழமுடியும்.

எதனால் ஏற்படுகிறது?

இதயத்தின் ரத்த நாளங்கள் குறுகி இருக்கும்போது குறைந்த அளவு ரத்தம்தான் இதயத்துக்குச் செல்கிறது. அதனால், இதயத்துக்கு குறைந்த ஆக்ஸிஜனே கிடைக்கிறது. கடினமான வேலைகளில் ஈடுபடும்போது, அதிக ரத்தம் தேவைப்படுகிறது. குறுகிய நாளங்களால் ஈடுகொடுக்க முடிவதில்லை. இதனால், இதயத்துக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் வலி ஏற்படுகிறது. இந்நிலை தொடருமானால், ரத்தம் குறைவான பகுதியின் திசுக்கள் இறக்க நேரிடும்.

வலியினால் ஓய்வெடுக்கும்போது, அந்த அவகாசத்தில் இதயம் தன்னைச் சீர்செய்து கொள்கிறது. நெஞ்சு வலியை இதயம் நமக்குத் தரும் எச்சரிக்கை மணியாகக்கொள்ளலாம்.

அதிக ரத்த அழுத்தம், ரத்தச்சோகை, குளிர்ந்த சூழல், மதுப்பழக்கம், புகைபிடித்தல், உடற்பருமன், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு ஆகியவை நெஞ்சு வலி ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும்.

எதனால் நாளங்கள் குறுகிப் போகின்றன?

ரத்தத்தில் உள்ள கொழுப்பு, படலங்கள் அதிகமாகப் படியக் காரணமாகின்றன.

மாரடைப்பு:

மேலே கூறிய கொழுப்புப் படலம் அதிகமாகும்போதோ, வேறு பல காரணங்களாலோ, நாளத்தின் சுவரில் இருந்து பிரிந்து நாளத்தை அடைத்து, ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடைப்படுத்துகிறது. இதனால், அந்த ரத்த நாளம் மூலமாக ரத்தம் பெற்றுக் கொண்டு இருந்த இதயத்தின் பகுதிகளில் ரத்தம் செல்வது நின்றுவிடுகிறது. இதனால் இதயத்தின் அப்பகுதியின் திசுக்கள் ரத்தம் இன்றிப் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. அதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

அறிகுறிகள்:

நெஞ்சு வலிதான் பொதுவான அறிகுறி. இந்த வலி அதிக வீரியத்துடனும், அழுத்தத்துடனும் இடது நெஞ்சுப் பகுதியில் இருந்து தாடை அல்லது இடது கைக்குப் பரவும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும். அதிகமாகவும் வேர்க்கும். வாந்தி மற்றும் மயக்கமும் ஏற்படலாம். சிலர் இந்த அறிகுறிகளால் பயம் மற்றும் பதட்டமாக உணர்வர்.

முன்பு கூறிய ‘ஆன்ஜினா’ வலி போல் இன்றி, இந்த வலி ஓய்வு எடுத்தாலும் குறையாது. சில சமயங்களில் இந்த வலி நெஞ்சுக்குழியில் இருக்கும். மிகவும் வயதானவர்களுக்கும், பெண்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், நெஞ்சு வலியின் வீரியம் குறைவாகவும், காரணமே இல்லாமல் சோர்வாகவும், களைப்பாகவும் இருக்கும்.

மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் காலதாமதம் இன்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்தானது.

மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகள்:

வயது 65-க்கு மேற்பட்டோருக்கு இருபாலருக்குமே மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.

ஆண்களுக்கு இளம் வயதிலும், பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகும் வரும் வாய்ப்பு அதிகம்.

மரபு வழியாக குடும்பத்தினர் யாருக்கேனும் மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், மற்றவருக்கும் வரும் வாய்ப்பு அதிகம்.

ரத்தத்தில் கொழுப்பின் அளவு:

கொலஸ்ட்ரால் எனப்படும் ஒரு வகையான கொழுப்பைப் பற்றிதான் நாம் அதிகமாகக் கேள்விப்பட்டு இருக்கிறோம். உடலில் உள்ள ஒவ்வொரு செல் (cell) லுக்கும் இது மிகவும் அவசியத் தேவை. இதன் அளவு அதிகரிக்கும்போதுதான் பிரச்சனையாகிறது. டிரை கிளிசிரைட் (triglyceride) எனப்படும் மற்றொரு கொழுப்பு வகை அதிகமானாலும் சிக்கல்தான்.

கேக், பிஸ்கட் வகைகள், வறுத்த பொருட்கள், டால்டா, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பாலாடை, வெண்ணெய் ஆகியவை அதிகமாக உட்கொள்ளும் போது கொழுப்பின் அளவு அதிகமாகிறது.

மரபு வழியாகவும், உணவில் கவனம் செலுத்தாமலும் போனால், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும். இதைத் தவிர, தைராய்ட், சிறுநீரகக் கோளாறுகள், மதுப் பழக்கம் ஆகியவை ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இப்போதுள்ள வாழ்க்கை முறையில் இளவயதினரும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் பருமன்:

சீரான உடல் எடைக்கு ஆரோக்கியமான சம­விகித உணவு, தொடர் உடற்பயிற்ச¤ மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவசியம். இதயம் சீராகச் செயல்பட உடல் எடை சீராக இருத்தல் அவசியம்.

ரத்த அழுத்தம்:

அதிக ரத்த அழுத்தம் இருந்தால் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனுடன் உணவில் உப்பின் அளவைக் குறைத்தல், சமவிகித உணவு, உடற்பயிற்சி, மது மற்றும் புகைப் பழக்கத்தை நிறுத்துதல், ரத்த அழுத்தத்தைச் சீர்செய்யும். ரத்த அழுத்தத்துடன், புகை பிடிக்கும் பழக்கமும், அதிகக் கொழுப்பும் இருந்தால் மாரடைப்பின் அபாயம் அதிகம்.

புகை பிடித்தல்:

நெஞ்சு வலி அதிகரிப்பதுடன் மாரடைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

சர்க்கரை நோய்:

சர்க்கரையின் அளவு சீராக இல்லை என்றால் இதயத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிக சர்க்கரை, நாளங்களின் சுவற்றைப் பாதித்து அதிகக் கொழுப்பைப் படரச் செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, மாரடைப்பு வரும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

உடற்பயிற்சியின்மை:

தினமும் 30 நிமிடங்கள் வீதம் வாரத்துக்கு ஐந்து தடவையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது, ரத்தத்தின் கொழுப்பு அளவைக் குறைப்பதுடன் உடல் எடையைச் சீராக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து, சர்க்கரை நோயையும் தடுக்கும். இவை தவிர, மன அழுத்தம், மதுப் பழக்கம் போன்றவையும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமையலாம்.

யோகா எவ்வாறு உதவுகிறது?

யோகா இதயத்தை இயக்கும் தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன் செய்கிறது. ஈஷா பயிற்சி செய்பவர்களில் இத்தகைய ஆய்வு சில மாதங்களுக்கு முன் நடத்தப் பட்டபோது, அவர்களது இதயத்தின் தானியங்கி நரம்பு மண்டலம் சமனான நிலையில் இருப்பதாகவும், அவர்களுடைய இதயம் எத்தகைய மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுவும் கண்டறியப்பட்டது.

யோகா, நேரடியாக இதயத்தின் ஆரோக்கியத்தைச் சரிசெய்வது மட்டுமின்றி, மறைமுகமாக இதய நோய்கள் ஏற்படுத்தும் காரணிகளையும் சரிசெய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதிக ரத்த அழுத்தம், இதயத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, உடல் எடை போன்றவற்றைச் சீர்செய்கிறது.

தளர்வு நிலையை ஏற்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நாளத்தில் அதிகப்படியாகக் கொழுப்பு சேராமலும், ஏற்கெனவே அதிகமாகச் சேர்ந்தவை குறைவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களுக்கு: 0422 2515300

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1